தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை... முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா? - எதிர்பார்ப்பில் விவசாயிகள்!

கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடும் பெரிய ஆறு தென்பெண்ணை. கர்நாடகாவில் தொடங்கும் இந்த ஆறு கடலூருக்கும் புதுச்சேரிக்கும் இடையில் கடலில் கலக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் அணைகள் கட்டப்பட்டுள்ளன. மூன்றாவதாக ஒரு அணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்துப் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராம கவுண்டர், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போதுமான மழை இல்லை. பல ஏரிகள், குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது தென்பெண்ணை ஆறு. இது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 81 கி.மீ தொலைவு ஓடி திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழைகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் பெரும் பான்மையான மானாவாரி நிலங்களைக் கொண்டது. தென்பெண்ணை ஆறு செல்லும் ஆற்றங்கரையோரப் பகுதிகள் மட்டுமே இறவைப் பாசன நிலமாக இருந்து வருகிறது. இதையொட்டி இங்கு நெல், தென்னை, காய்கறி விவசாயம் நடைபெற்று வருகிறது. சுமார் 30,000 ஏக்கருக்கு மேல் ஆற்றை நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது.

இதோடு மற்ற பகுதிகளும் பாசனம் பெறும் வகையில் கிருஷ்ணகிரி அணைக்கும் கெலவரப்பள்ளி அணைக்கும் இடையே வாணி ஒட்டு அல்லது கொலுசு மடுவு என்றழைக்கப்படும் இடத்தில் 100 அடி உயரத்துக்கு அணை கட்டினால், தென்பெண்ணையாற்றின் வலது புறத்தில் உள்ள பல கிராமங்கள் பயன்பெறும். இந்த அணையிலிருந்து கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு சென்றால் 250 ஏரிகளில் நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும். இந்தக் கால்வாயை மேலும் நீட்டித்தால் அருகிலுள்ள தர்மபுரி மாவட்ட விவசாயிகளும் பயன்பெற முடியும்.
வாணி ஒட்டு என்ற இடத்தில் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டு அது சிதைந்துபோனதற்கான அடையாளங்கள் உள்ளன. அங்கிருந்து அன்றைய தகடூர் (தர்மபுரி) வரை தண்ணீர் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் எளிதாக அணை கட்ட முடியும். இந்தக் கோரிக்கை பல ஆண்டுகளாகவே விவசாயிகள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மூலம் 778 கோடி ரூபாய்க்குத் திட்ட அறிக்கை தயார் செய்யப் பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.

இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள் சிங்காரப்பேட்டைக்கு அருகில் கடப்பாறை என்ற சிற்றாறு, ஜவ்வாது மலையிலிருந்து உருவெடுத்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு சிறு அணைகட்டி தண்ணீரைப் பாம்பாற்றுக்குத் திருப்பி, பிறகு தென்பெண்ணையாற்றில் கலக்கவிடலாம். இதனால் பாம்பாறு பாசன விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதற்கான திட்ட மதிப்பீடு 3.38 கோடி ரூபாய் ஆகும். இந்த அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த இரண்டு அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு அது கிடப்பில் உள்ளது. இது தேர்தல் நேரம் முதல்வர் பழனிசாமி அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். விவசாயம் மற்றும் குடிநீருக்குப் பயன்படும் இந்தத் திட்டங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதே கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை” என்றார்.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளரைத் தொடர்பு கொண்டோம். அவர் அலுவலகத்திலிருந்து பேசிய அதிகாரிகள், “செயலாளர் முதல்வரின் பயணத்தில் இருப்பதால் நீங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்த விவசாயிகளின் கோரிக்கையைச் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். அவரும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வார்” என்று தெரிவித்தனர்.