Published:Updated:

கோமாரி நோய் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; அல்லல்படும் விவசாயிகள்; நடவடிக்கை எடுக்குமா அரசு?

கால்நடைகள்
News
கால்நடைகள்

``திருவாரூர் மாவட்டம் முழுக்கவே இதுக்கான தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடாகதான் இருக்கு. தமிழ்நாடு முழுக்கவே பல பகுதிகள்ல இதே நிலைமைதான். தமிழக கால்நடை பராமரிப்புத்துறை இந்த விஷயத்துல, கவனமா இருந்து முன்கூட்டியே இதுக்கான ஏற்பாடுகளை செஞ்சிருக்கணும். இது அவங்களோட கடமை."

கால்நடைகளை கடுமையாக பாதிக்கக்கூடிய தொற்று நோய்களில் மிகவும் முதன்மையானது கோமாரி. கடந்த காலங்களில் இந்நோய்த் தாக்குதலால், இந்தியாவில் லட்சக்கணக்கான மாடுகள் இறந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு ஏராளம். விவசாயிகள் தங்களது கால்நடைகளை இந்நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள, தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியமானது என்ற சூழல் உருவானது.

இதனால் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையின் ஏற்பாட்டில் இங்குள்ள மாடுகளுக்கு ஆண்டுதோறும் கோமாரி தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது, இதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் தங்களது கால்நடை தற்காத்துக் கொள்வது, பெரும் சவாலாக உள்ளது.

கால்நடை மருத்துவமனை
கால்நடை மருத்துவமனை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து நம்மிடம் மிகுந்த ஆதங்கத்தோடு பேசிய திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சசிகுமார், ``இந்த வருஷம் மார்ச், ஏப்ரம் மாசமே மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட்டிருக்கணும். ஆனால் இத்தனை மாசங்கள் கடந்துப்போய், டிசம்பரே வந்துடுச்சி. ஆனாலும் எங்க பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை இதற்கான ஏற்பாட்டை செய்யவே இல்லை. `இதுக்கான மருந்து கிடைக்கலை தட்டுப்பாடா இருக்கு'னு அங்குள்ள கால்நடை மருத்துவர்கள் சொல்றாங்க.

உரிய நேரத்துல கோமாரி தடுப்பூசி போடாததுனால, அரித்துவாராமங்கலம், இதை சுற்றியுள்ள பெருங்குடி, நிம்மேல்குடி, கொட்டை படுகை, அவிலியநல்லூர், விளத்தூர் உள்பட பல ஊர்கள்ல நிறைய மாடுகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கு. ஆனா போன வருஷம் சரியான சமயத்துல கோமாரி தடுப்பூசி போட்டதுனால, இந்த பகுதிகள்ல உள்ள மாடுகளுக்கு, கோமாரி பாதிப்பு ஏற்ப்டவே இல்லை.

விவசாயி சசிகுமார்
விவசாயி சசிகுமார்

இந்த வருஷம், திருவாரூர் மாவட்டம் முழுக்கவே இதுக்கான தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடாகதான் இருக்கு. தமிழ்நாடு முழுக்கவே பல பகுதிகள்ல இதே நிலைமைதான். தமிழக கால்நடை பராமரிப்புத்துறை இந்த விஷயத்துல, கவனமா இருந்து முன்கூட்டியே இதுக்கான ஏற்பாடுகளை செஞ்சிருக்கணும். இது அவங்களோட கடமை. ஏற்கனவே மழை பாதிப்பால், விவசாயிகள், சம்பா பயிர்களை இழந்து நிக்கிறோம். கோமாரி நோய் தாக்குதல் தீவிரமாகி, ஆடு, மாடுகளையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், விவசாயிகளோட நிலைமை ரொம்ப மோசமாகிடும்’என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயிகளின் ஆதங்கம் குறித்து தமிழ்நாடு கால்நடை பராமரித்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் நாம் பேசியபோது, ``ஒன்றிய அரசுதான், ஆறு மாசத்துக்கு ஒரு முறை, இங்கவுள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கும் கோமாரி தடுப்பூசி மருந்தை ஒதுக்கீடு செஞ்சி வழங்குறது வழக்கம். வருஷத்துக்கு இரண்டு முறை கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசியைப் போடணும். இந்திய ஒன்றிய அரசுக்குக்கிட்ட இருந்து தமிழ்நாட்டுக்கு 95 லட்சம் டோஸ் மருந்து வரணும். ஆனால் இந்த வருஷம் கோமாரி தடுப்பூசி மருந்து 28 லட்சம் டோஸ்தான் வந்தது. அதுவும்கூட கடைசியா பிப்ரவரி மாசம் வந்ததோடு சரி. அதுக்கு பிறகு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படவே இல்லை.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டுக்கு உரிய ஒதுக்கீட்டை முழுமையாக பெற, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், இந்திய ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதோடு, எங்களோட கால்நடை பராமரிப்புத்துறையும் இதுக்காக, தனியாக கடிதம் எழுதியிருக்கோம்’’ என்றார்.

இந்த தகவலை நாம் விவசாயிகளிடம் தெரிவித்தபோது, ``இதுமாதிரி ஏதாவது சாக்குப்போக்கு சொல்றதும், மத்திய அரசாங்கத்தை காரணமா சொல்றதும், தமிழக அரசுக்கு நல்லதல்ல. திறமையாக செயல்பட்டு, தமிழ்நாட்டிகு உரிய கோமாரி தடுப்பூசி மருந்து ஒதுக்கீட்டை எப்படியாவது பெற்றிருக்கணும். இது இவங்களோட கடமை. மத்திய அரசாங்கத்தால்தான் இந்த தட்டுப்பாடுனா, முன்கூட்டியே தமிழக விவசாயிகள்கிட்ட இதை வெளிப்படையாக தெரிவிச்சி, தமிழக ஆட்சியாளர்கள் அம்பலப்படுத்தியிருக்கணும்’’ என ஆதங்கத்தோடு தெரிவித்தார்கள்.