Published:Updated:

`மீண்டும் மொபைல் கொள்முதல் திட்டம் வருமா?'- எதிர்பார்ப்பில் நெல் விவசாயிகள்

நெல் வயல்
நெல் வயல்

நெல் கொள்முதலில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, விவசாயிகளின் களத்து மேட்டுக்கே வந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் களத்துமேட்டுக்கே வந்து நெல் கொள்முதல் செய்யும் திட்டம் நடைமுறையில் இருந்தது. தற்போதைய தமிழக அரசு அத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் காவிரி டெல்டா விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள். இதனால் விவசாயிகள் பல வகைகளில் பயன் அடைவதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம், இந்த ஆண்டு சம்பா நெல் கொள்முதலை மிக எளிதாக மேற்கொள்ள இத்திட்டம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்கிறார்கள்.

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்

இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை நன்கு பெய்ததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதனால் நெல் விளைச்சல் இந்த ஆண்டு, வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. நெல் கொள்முதலில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, விவசாயிகளின் களத்து மேட்டுக்கே வந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் ``விவசாயிகளின் நலன் கருதிதான் ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சிக்காலங்களில் மொபைல் கொள்முதல் திட்டம் நடைமுறையில் இருந்தது. ஒரு கிராமத்தில் ஒரு தனி விவசாயி 200 சிப்பம் (40 கிலோ மூட்டை) நெல் வைத்திருந்தாலே களத்து மேட்டுக்கே வந்து, தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் அதைக் கொள்முதல் செய்து, அரிசி ஆலைக்கு எடுத்துச் சென்றுவிடும். இதனால் விவசாயிகள் பல வகைகளிலும் பலன் அடைந்தார்கள்.

குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படக்கூடிய சிரமங்கள் தவிர்க்கப்பட்டன. ஒரே சமயத்தில் பல விவசாயிகள் தங்களது நெல்லைக் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு வரும்போது, பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. மழை போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் கடும் பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மொபைல் கொள்முதல் திட்டம் நடைமுறையில் இருந்தால் 4 - 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள், கொள்முதல் நிலையத்துக்குத் தங்களது நெல்லை கொண்டு வர வேண்டிய தேவை இருக்காது.

நெல் வயல்
நெல் வயல்

கொள்முதல் நிலையங்களில் நெருக்கடியான சூழல் தவிர்க்கப்படும். போக்குவரத்து செலவும் தவிர்க்கப்படும். இதனால் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்துக்கும் நன்மை உண்டு. விவசாயிகளின் இடத்துக்கு சென்று கொள்முதல் செய்யும்போது, கொள்முதல் நிலையங்களில் வேலையாட்களின் தேவை குறைந்து செலவு மிச்சமாகும்.

மொபை கொள்முதல் திட்டத்துக்கு தமிழக அரசு நிரந்தர அரசாணை வெளியிட்டு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரு தனி விவசாயி 200 சிப்பம் நெல் வைத்திருந்தால்தான், அங்கு சென்று மொபைல் திட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் என்ற விதிமுறையைத் தளர்த்த வேண்டும்.

ஒரு கிராமத்தில் இரண்டு அல்லது மூன்று விவசாயிகள் வைத்துள்ள நெல், 200 சிப்பம் தேறினாலே கொள்முதல் செய்ய திருத்தம் செய்ய வேண்டும். இதைத் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உணவு அமைச்சர் காமராஜ் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு