Published:Updated:

மானியம், கடனுதவி, விற்பனை வாய்ப்புகள்... 500 விவசாயிகளை இணைத்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்!

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள விவசாயிகள் ( நா.ராஜமுருகன் )

முயற்சி

மானியம், கடனுதவி, விற்பனை வாய்ப்புகள்... 500 விவசாயிகளை இணைத்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்!

முயற்சி

Published:Updated:
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள விவசாயிகள் ( நா.ராஜமுருகன் )

ந்த வேளாண் பொருளையும் உற்பத்தி செய்துவிடும் ஆற்றல் விவசாயிகளுக்கு உண்டு. ஆனால், விளைவித்த பொருள்களைச் சந்தைப்படுத்துவதுதான் பெரும் சவால். சரியான விலை கிடைக்காமல், பலரும் விவசாயத்தை வேண்டா வெறுப்பாகச் செய்யும் நிலை. இந்நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இணைந்து, விளைவிக்கும் பொருள்களைக் குழுவாக விற்பனை செய்து கொள்கிறார்கள்.

‘கரூர் வேளாண் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ என்ற உழவர் நிறுவனம் மூலமாகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். வெளிச் சந்தையில் வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விலையைவிட, அதிக விலைக்கு விவசாயிகளிடமிருந்தே விளைபொருள்களை வாங்கி, விற்பனை செய்வதுடன் கிடைக்கும் லாபத்தை விவசாயிகளுக்குப் பகிர்ந்து அளிக்கிறார்கள்.

பெரியசாமி
பெரியசாமி

வானம் பார்த்த பூமி

இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும், விவசாயியுமான பெரியசாமியிடம் பேசினோம். “கரூர் மாவட்டத்துல காவிரி, அமராவதி, நொய்யல்னு முக்கிய ஆறுக ஓடுனாலும் இங்க 70 சதவிகிதம் வறட்சியான, வானம் பார்த்த பூமிதான். பெரும்பாலும் மானாவாரி விவசாயம்தான் நடக்கும். இயற்கையோடு மல்லுக்கட்டி விவசாயம் பார்த்தாலும், விளைய வைக்கிற பொருளுக்குச் சரியான விலை கிடைக்காது. விளைபொருள்களை எங்களால முறையா சந்தைப்படுத்த முடியல.

இந்த நிலையில்தான், விஷ்ணு, பாலசுப்ரமணியம், கோவிந்த ராஜு, பழனிவேல், சுப்ரமணியம், கந்தசாமி, நல்லாத்தாள்னு என்னோட சேர்த்து 8 பேரும் இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சோம். தோட்டக்கலைத்துறையும் வேளாண்மைத்துறையையும் எங்களுக்கு உதவி பண்ணுனாங்க.

ரெண்டு வருஷத்துக்குக் கடைக்கான வாடகையைத் துறை மூலமா கொடுத்தாங்க. அதோட, சுகந்த்னு ஒருத்தரை முதன்மை செயல் அலுவலரா (சி.இ.ஓ) நியமிச்சு, அவருக்கு ரெண்டு வருஷம் சம்பளம் கொடுக்கவும் ஒத்துகிட்டாங்க. மேலாளரா சிதம்பரம் என்பவரை நியமிச்சோம். நாங்க ஊர் ஊராகப் போய் விவசாயிக கிட்டப் பேசி, இந்த நிறுவனம் பற்றி எடுத்துச் சொன்னோம்.

‘கம்பெனியில பங்குதாரரா சேருங்க. உங்க விளைபொருளை நிறுவனமே வாங்கி, விற்பனை செய்யும். பிறகு, நிறுவனத்துக்கு லாபம் வரும்போது, அதைப் பங்குதாரரா இருக்க உங்களுக்குப் பிரிச்சு கொடுக்கும்’னு சொன்னோம். அதோட, நம்மாழ்வார் காட்டுன வழியில, இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்வியல், மதிப்புக்கூட்டி விற்பனை செய்ற திட்டங்களைச் சொன்னோம். பலருக்கும் ஆரம்பத்துல நம்பிக்கை இல்ல. தொடர்ச்சியா கூட்டம் போட்டுப் பேசவும், அரைமனசா சில விவசாயிக ஒத்துகிட்டாங்க. போன வருஷம், ஜூன் மாசம் இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சோம்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள விவசாயிகள்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள விவசாயிகள்

12 லட்சம் ரூபாய் வியாபாரம்

எங்க செயல்பாடுகளைப் பார்த்துட்டு, விவசாயிகளுக்கு முழு நம்பிக்கை வந்துச்சு. ஆர்வமா வந்து சேர்ந்தாங்க. இப்ப 500 விவசாயிக இந்த நிறுவனத்துல பங்குதாரர்களா இருக்காங்க. அதுல 300 விவசாயிக நெல் விவசாயிங்க. 100 பேர் முருங்கை விவசாயிங்க, 100 பேர் தென்னை விவசாயிங்க. விவசாயிகள் விளைவிச்ச நெல், தென்னை, முருங்கை, உளுந்து, துவரம் பருப்பு, கேழ்வரகு, தேன், சோளம், கோழி, வாத்து முட்டை, கம்புனு பல பொருள்களை வாங்க ஆரம்பிச்சோம். முதல்ல, விற்பனை செய்ய கஷ்டமாதான் இருந்துச்சு. நிறுவனத்துல பொருளை விக்குற விவசாயிகள்ல பலபேர் நுகர்வோரா மாறிட்டாங்க. அவங்க மூலமா வெளியில இருந்து வாடிக்கையாளர்கள் கிடைச்சாங்க. கடந்த 2020 -ம் வருஷம் மட்டும் 12,00,000 ரூபாய்க்கு வியாபாரம் பண்ணியிருக்கோம். 2021-ம் வருஷத்துக்கு இன்னும் கணக்குப் பார்க்கல” என்றார்.

சுகந்த்
சுகந்த்

நியாயமான விலை

நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலரான சுகந்த், “தேங்காய் மட்டும் 5,00,000 ரூபாய்க்கு விவசாயிககிட்ட வாங்கினோம். போன ஜனவரி மாசம், ஐ.ஆர்-20 ரக நெல் 12 டன் வாங்கினோம். வியாபாரிங்க 62 கிலோ மூட்டை நெல்லை 950 ரூபாய்க்குதான் வாங்குனாங்க. ஆனா, நாங்க 1,150 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கினோம். அரசு கொள்முதல் நிலையங் கள்ல இதே விலைக்கு எடுத்துக்கிட்டாலும், நாள் கணக்குல காத்திருக்கணும். அதுமட்டுமல்லாம அங்க ஆயிரம் பிரச்னைகள். ஆனா, விவசாயிகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம நாங்க சரியான விலை கொடுத்து எடுத்துக்கிட்டோம். அதை அரிசியாக்கி, எங்க நிறுவனத்தோட பெயரிலயே விற்பனை செஞ்சோம். தொடர்ந்து, நம்மாழ்வார் வலியுறுத்தின, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யுற முயற்சியையும் ஆரம்பிச்சோம்.

அரசு உதவியோட விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்தோம். எங்க நிறுவனத்துல பங்குதாரர்களான 100 விவசாயிகள் ஒண்ணு சேர்ந்து, மானியத்தோடு 10,00,000 ரூபாய் கடன் வாங்கி, எண்ணெய் ஆட்டுற ‘லோட்டரி’யை வைரமடையில அமைச்சாங்க. எள், தேங்காய், கடலை, ஆமணக்கு உள்ளிட்ட தானியங்களை இந்த 500 விவசாயிகள்கிட்டயே வாங்கி, அங்க வெச்சு ஆட்டுறாங்க. அங்க உற்பத்தியாகுற எண்ணெயை நிறுவனம் சார்பா வாங்கி, விற்பனை செய்றோம்.

வெளிச்சந்தையைவிடக் கூடுதல் விலை

இந்தத் தானியங்களையும் வெளிசந்தையில விற்பனை செய்ற விலையைவிட 5 ரூபாய்க் கூடுதலாகக் கொடுத்துதான் வாங்குறோம். தினமும் 100 லிட்டர் வரை இங்க எண்ணெய் எடுக்குறோம். முருங்கை விவசாயிககிட்ட, வாரத்துல மூணு நாள் காய் வாங்கி, விற்பனை செய்றோம். வேளாண் பொருள்களை விவசாயிகளை வெச்சே மதிப்புக்கூட்ட வெச்சு, வாங்கி விற்பனை செய்றோம்.

தமிழக அளவுல மொத்த முருங்கை உற்பத்தியில 60 சதவிகிதம் கரூர் மாவட்டத்தில தான் நடக்குது. அதனால, முருங்கை விவசாயிகளுக்காக, ‘கோடந்தூர் முருங்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ங்கிற பேர்ல இன்னொரு நிறுவனத் தையும் ஆரம்பிச்சிருக்கோம்.

முருங்கை சூப் தயாரிக்கிற பொடி, முருங்கைப் பருப்பு சாதப்பொடி, மிளகாய்த் தூள், சாம்பார் தூள், கறிமசாலா தூள், மஞ்சள் தூள் உள்ளிட்ட மசாலா பொடிகளை விவசாயிகளே தயார் பண்றாங்க. வழக்கொழிஞ்சுபோன, இயற்கை முறையில செம்மண் கலந்து மண்கட்டின துவரம் பருப்பை வாங்கி, உடைச்சு விற்பனை செய்றோம். இதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு” என்றார்.

பாலசுப்ரமணியம்
பாலசுப்ரமணியம்

விதைநெல் உற்பத்தி

இந்த நிறுவனம் சார்பில், தரமான நெல் விதை உற்பத்தி செய்வதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 7 ஏக்கர் நிலத்தில் ஐ.ஆர்-20 ரகத்தை விதைநெல் உற்பத்திக்காகப் பயிர் செய்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய, விவசாயியும், நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான பாலசுப்ரமணியம்,

“எங்க நிறுவனத்தில் பங்குதாரர்களா இருக்க விவசாயிகளுக்குத் தரமான விதை கிடைக்கிறதுக்காக, இந்த முயற்சியில இறங்கியிருக்கிறோம். இயற்கை விவசாயி களை ஊக்குவிக்க, பாரம்பர்ய ரக நெல் விதைகளையும், நாட்டுக்காய்கறி விதை களையும் அடுத்தடுத்து உற்பத்தி செய்யப் போறோம். அரசு கொடுக்குற வரிசை நடவுக்கான மானியத்தையும் எல்லா விவசாயிகளுக்கும் வாங்கிக் கொடுக்கிறோம். 6 மாசத்துக்கு முன்னாடி மண்டிகள்ல உளுந்து கிலோ 54 ரூபாய்க்கு வித்துச்சு. ஆனா நாங்க விவசாயிககிட்ட கிலோ 64 ரூபாய்க்கு எடுத்துகிட்டோம். தேங்காய் 12 ரூபாய்க்கு வாங்கி 15 ரூபாய்க்கு விற்பனை செய்றோம்.

‘‘வழக்கொழிஞ்சுபோன, இயற்கை முறையில செம்மண் கலந்து மண்கட்டின துவரம் பருப்பை வாங்கி, உடைச்சு விற்பனை செய்றோம். இதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு.’’

எல்லா விவசாயிகளையும் இயற்கை விவசாயத்துக்கு மாற்றணும்ங்கிறதுதான் உச்சக்கட்ட இலக்கு. சரியான சந்தையை நாங்க கட்டமைச்சுட்டா, அது சாத்தியமாகும். அதுக்கு, குறைஞ்சது 10 வருஷமாவது ஆகும். இருந்தாலும், இப்ப 500 விவசாயிகள்ல 15 பேர் இயற்கை விவசாயம் செய்றாங்க. அவங்க விளைவிக்கிற மாப்பிள்ளைச் சம்பா, தூயமல்லி, கிச்சிலிச் சம்பா, சீரகச் சம்பா அரிசி வகைகளை வாங்கி விற்பனை செய்றோம்.

கொசு தேன், எள்ளுப்பூ தேன், முருங்கைப் பூ தேன், அடுக்குத்தேன்னு பலவகையான தேன், நாட்டுக்கோழி முட்டை, இயற்கை முறையில விளைஞ்ச வாழைப்பழங்களையும் விவசாயிககிட்ட வாங்கி விற்பனை செய்றோம்.

இயற்கை விவசாயம் சம்பந்தமா விவசாயி களுக்குப் பயிற்சி தர்றோம். இயற்கை விவசாயிகளோட தோட்டங்களுக்கும் விவசாயிகளை அழைச்சுட்டுப் போறோம்.

விவசாயிகள் தயாரிக்குற பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக் கரைசல், மீன் அமிலம், ஊட்ட உரம், மூலிகைப் பூச்சிவிரட்டி, வேப்பம்புண்ணாக்குக் கரைசல், அக்னி அஸ்திரம், இ.எம், பழக்காடி கரைசல்னு வாங்கி, விற்பனை செய்றோம்.

அதோட, தரமான ‘ஸ்பிரேயர்’, ‘ப்ரெஷ் கட்டர்’னு விவசாயம் சம்பந்தப்பட்ட கருவிகளையும் விற்பனை செய்றோம். இன்னும் ரெண்டு வருஷத்துல நிறுவனத்தை லாபம் கொடுக்குற அளவுக்கு மாத்திடுவோம். அதிலிருந்து, பங்குதாரர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுப்போம். எங்க நிறுவனத்துல 1,000 விவசாயிகளை உறுப்பினராக்குற முனைப்போடு செயல்பட்டுக்கிட்டு இருக்கிறோம்” என்றார்.

ஊர்கூடித் தேர் இழுத்தால், இங்கு எல்லாம் சாத்தியம்தான்! வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.



தொடர்புக்கு, கரூர் வேளாண் அங்காடி

செல்போன்: 99407 88999.

மனோகரன்
மனோகரன்

“தேவைப்படுற பொருளையும் வாங்கித் தர்றாங்க!”

இந்த நிறுவனத்தில் உறுப்பினராக இருக்கும் இயற்கை விவசாயி மனோகரனிடம் பேசினோம். “இந்த நிறுவனம் எங்களுக்கு எல்லா வகையிலும் உதவியா இருக்கு. நாங்கள் விளைவிக்குற பொருள்களை, அதுவும் இயற்கை முறையிலான வேளாண் பொருள்களை விற்பனை செய்ய முடியாம தவிர்த்துட்டு இருந்தோம். இந்த நிறுவனம், எங்க பொருளை வாங்கிக்கிறாங்க. மீன் அமிலம், நாட்டுச் சர்க்கரைனு எங்களுக்குத் தேவைப்படுற பொருள்களை வாங்கியும் தர்றாங்க. 500 விவசாயிகள்ல பெரும்பாலானவங்களை அடிக்கடி சந்திக்க முடியுது. அதனால, விவசாய அனுபவங்களைப் பரிமாறிக்க முடியுது” என்றார்.

பழனிவேல்
பழனிவேல்

இடைத்தரகர் இல்லாத விற்பனை

செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பழனிவேல், “நான் 50 சென்ட்ல முருங்கை, 50 சென்ட்ல நெல் பயிர் செஞ்சுருக்கேன். போன வருஷம் கொரோனா ஊரடங்கு நேரத்துல எங்களால முருங்கையை விற்பனை செய்ய முடியல. எருமை மாடுகளுக்குத் தீவனமாக் கொடுக்கலாம்னு இருந்தேன். அப்பதான், இந்த நிறுவனத்துல இருந்து முருங்கைக்காயை விலைக்கு எடுத்துக்கிட்டாங்க. அடுத்து, எங்களுக்கு நிறுவனம் லாபத்துல பங்கும் தர்றதா சொல்றாங்க. பங்கு எல்லாம் கிடக்கட்டும், எங்க விளைபொருளுக்கு இடைத்தரகர் இல்லாம இந்த நிறுவனம்மூலம் நல்ல விலையும், அலைச்சல் இல்லாம விற்பனையும் செய்ய முடியுது. அதுவே எங்களுக்கு ஊக்கமா இருக்கு. அடுத்து, நான் விளைவிக்கிற நெல்லையும் தொடர்ந்து எடுத்துக்கிறதா சொல்லியிருக்காங்க” என்றார்.‘‘வழக்கொழிஞ்சுபோன, இயற்கை முறையில செம்மண் கலந்து மண்கட்டின துவரம் பருப்பை வாங்கி, உடைச்சு விற்பனை செய்றோம். இதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism