Published:Updated:

நெல் கொள்முதல் லஞ்சம்: அடுத்தடுத்து பிடிபடும் அதிகாரிகள்; துணிச்சலோடு அம்பலப்படுத்தும் விவசாயிகள்!

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி நந்தகோபால், இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வி, சித்ரா மற்றும் போலீஸார் வந்து, முருகையன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களும் அதிகாரிகளும் விவசாயிகளிடம் கட்டாய லஞ்ச வேட்டை நடத்துவது தொடர் கதையாக நீடித்துக்கொண்டேதான் இருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. ஆனால், விவசாயிகள் முன்பு போல் ஆதங்கத்தோடு புலம்பிக் கொண்டு மட்டுமல்லாமல் களத்தில் இறங்கி, கொள்முதல் நிலைய கொள்ளையர்களைத் துணிச்சலோடு அம்பலப்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள எடமேலையூரைச் சேர்ந்தவர், விவசாயி மணிமொழியன். இவர் தன்னுடைய நெல்லை விற்பனை செய்வதற்காக, கடந்த 29-ம் தேதி எடமேலையூர் நெல் கொள்முதல் நிலையத்துக்கு வந்திருக்கிறார். அப்போது இங்கு பணியில் இருந்த பட்டியல் எழுத்தர் முருகையனும், ஊழியர் கோவிந்தராஜும் விவசாயி மணிமொழியனிடம் ஒரு மூட்டைக்கு ரூ.30 வீதம் லஞ்சம் கேட்டதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். லஞ்சம் கொடுத்தால்தான் நெல்லைக் கொள்முதல் செய்வோம் என இவர்கள் பிடிவாதம் பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்; வீடியோ மூலம் அம்பலப்படுத்திய விவசாயி; ஊழியர் சஸ்பெண்ட்!

இவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துக்கொடுத்து, சட்டப்படி இதற்கான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு, விவசாயி மணிமொழியன், திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூ.9,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை, முருகையன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோரிடம் மணிமொழியன் வழங்கியிருக்கிறார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி நந்தகோபால், இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வி, சித்ரா மற்றும் போலீஸார் வந்து, முருகையன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோரை கையும் களவுமாகக் கைது செய்தனர்.

மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் சோதனை நடத்தி, முருகையனிடம் இருந்து ரூ.14,350, கோவிந்தராஜனிடம் இருந்து ரூ.5,380 உட்பட கணக்கில் வராத பணம் மொத்தம் ரூ.19,730 பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரும் திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருத்துறைப்பூண்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக நிர்வாகத்தினர், பட்டியல் எழுத்தர் முருகையன் மற்றும் ஊழியர் கோவிந்தராஜ் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, பணி இடை நீக்கம் செய்துள்ளார்கள்.

இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் ஒரு விவசாயி அதிரடியான நடவடிக்கையில் இறங்கி, லஞ்சம் கேட்ட நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களைப் பிடித்துக்கொடுத்தார். இம்மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுமுளை உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அரசின் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒரு நெல் மூட்டைக்கு ரூ.50 வீதம் லஞ்சம் கொடுத்தால்தான் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கறார் காட்டுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். ஆனால், மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் எந்த நடவடிக்கையையும் எடுக்காமலும் அமைதி காத்திருக்கிறார்கள். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரே களமிறங்கி, லஞ்ச வேட்டையை அம்பலப்படுத்தினார்.

விவசாயிடம்  லஞ்சம் வாங்கும்  ஊழியர்
விவசாயிடம் லஞ்சம் வாங்கும் ஊழியர்
`நெல் கொள்முதல் பிரச்னையைத் தீர்க்க அரசு இதையாவது செய்யலாம்!' - அரசுக்கு விவசாயிகளின் யோசனை

நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள், விவசாயி ஒருவரிடம் லஞ்சம் வாங்குவதை, மற்றொரு விவசாயி வீடியோ எடுத்து, முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை எடுத்த விவசாயி, தன்னுடைய அதிரடி நடவடிக்கைக்கான காரணத்தை மிகுந்த ஆதங்கத்தோடு தெரிவித்திருந்தார். `41 நெல் மூட்டைக்கு ரூ.2,050 லஞ்சம் வாங்கிக்கிட்டுதான் என்னோட நெல்லை கொள்முதல் செஞ்சாங்க. இதுல மேல்மட்ட அதிகாரிகளுக்கும் பங்கு கொடுத்தாகணும். இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சா, கொள்முதல் நிலையத்தை மூடி விடுவோம்னு சொல்லி மிரட்டியே, பணம் பறிக்கிறாங்க. இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரத்தான், வீடியோ எடுத்தேன்’’ என அந்த விவசாயி தெரிவித்திருந்தார்.

விவசாயிகளின் இந்தச் செயல்கள் அவர்களுக்கு தற்காலிகத் தீர்வைத் தேடித்தந்தாலும், அரசு இந்தப் பிரச்னையை சமாளிக்க எள் அளவும் முனையவில்லை என்பதையே இவை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு