Election bannerElection banner
Published:Updated:

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்... பொங்கல் நேரத்தில் டெல்டா விவசாயிகளுக்கு நேர்ந்த சோதனை!

நெற்பயிர்கள்
நெற்பயிர்கள்

மார்கழி மாதத்தில் மழை இருக்காது. அறுவடைக்குத் தயாராகும் நெற்பயிரை, தை பொங்கலுக்கு முன்பாகவோ, அதற்குப் பிறகோ அறுவடை செய்யலாம் என மிகுந்த நம்பிக்கையில் இருந்தார்கள்.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா நெற் பயிர்கள், தொடர் கன மழையின் காரணமாக, கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. பொங்கல் திருநாள் கொண்டாட்டத்துக்கு விவசாயிகள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு இவர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மழை விட்டாலும் இனி தங்களது நெற்பயிர்களைக் காப்பாற்றுவதற்கு வாய்ப்பில்லை எனவும், இதனால் தாங்கள் கடுமையான நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கிறார்கள்.

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்... பொங்கல் நேரத்தில் டெல்டா விவசாயிகளுக்கு நேர்ந்த சோதனை!

காவிரி டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உருவான நிவர் புயல், புரெவி புயலால் விவசாயிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்கள். புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

வெள்ளநீரை வடிய வைத்து, தங்களது நெற்பயிரை மீட்டெடுக்க, மிகவும் சிரமப்பட்டார்கள். மார்கழி மாதத்தில் மழை இருக்காது. அறுவடைக்குத் தயாராகும் நெற்பயிரை, தைப் பொங்கலுக்கு முன்பாகவோ, அதற்குப் பிறகோ அறுவடை செய்யலாம் என மிகுந்த நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால், கடந்த பத்து நாள்களாகத் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து விவசாயிகளை நிம்மதி இழக்கச் செய்துவிட்டது.

நிவர் புயல்: மழை நீரில் மூழ்கிய பயிர்கள்... உடனடியாக விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?

அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள், கீழே சாய்ந்து சேற்றில் கிடக்கிறது. தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவையாறு, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில், நெற்பயிர்கள் கீழே சாய்ந்து கிடக்கிறது. திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து மிகுந்த வேதனையோடு பேசும் டெல்டா விவசாயிகள் ``பயிர்கள் கீழ சாஞ்சு, நெற்கதிர்கள் எல்லாம் சேத்துல சிக்கி மண்ணோடு மண்ணா கிடந்து, முளைக்க ஆரம்பிச்சிடுச்சு. மழை விட்டாலும், நெல்லை அறுவடை செய்ய முடியாது. அஞ்சு மாச உழைப்பு இப்படி வீணாப்போயிடுச்சு" என மிகுந்த வேதனையோடு பேசுகிறார்கள். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகி வீரசேனன் ``உழவு, நாற்று உற்பத்தி, நாற்று பறிப்பு, நடவு, களையெடுப்பு, இடுபொருள்களுக்குனு விவசாயிகள் இதுவரைக்கும் ஏக்கருக்கு 30,000 ரூபாய்க்கு மேல செலவு செஞ்சிருக்கோம். கீழ சாஞ்சி கிடக்குற நெல்லை, இனி அறுத்தெடுக்க வாய்ப்பே இல்லை. முளைக்காம மிச்சமிருக்குற நெற்கதிர்களை ஒருவேளை அறுவடை செஞ்சாலும் கூட, நெல்மணிகள் கீழ உதிர்ந்துடும்

நிவர் புயல்
நிவர் புயல்
ம.அரவிந்த்

அதையும் மீறி ஏக்கருக்கு அஞ்சாறு மூட்டை நெல் தேறினாலும் கூட, இந்தளவுக்கு ஈரமான நெல்லை அரசு கொள்முதல் செய்யாது. தனியார் வியாபாரிகளும் வாங்க மாட்டாங்க. மழைவெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால், 33 சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்டாலே, இயற்கைப் பேரிடராக அறிவிச்சு, எல்லா விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கணும்ங்கிறது விதிமுறை. கடந்த 10 நாள்களா பேஞ்ச கனமழையில, 40 சதவிகிதத்துக்கும் மேல பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கு. விவசாயிகள் செலவு செஞ்ச தொகையை மட்டும் நிவாரணமாக வழங்காமல், இதில் கிடைக்க இருந்த லாபத்துல ஒரு பகுதியையும் சேர்த்து, ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கணும். விவசாயிகளோட அஞ்சாறு மாச உழைப்பும் விவசாயிகளோட வாழ்வாதாரமும் இதுல அடங்கியிருக்கு. நெல்லு மட்டுமல்ல... உளுந்து, நிலக்கடலை, துவரை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் மழையில பாதிக்கப்பட்டிருக்கு. அதுக்கும் உரிய இழப்பீடு வழங்கணும்’’ எனத் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு