Published:Updated:

நெல் கொள்முதல் செய்வதை நிறுத்தப்போகிறதா அரசு? குழப்பத்தில் விவசாயிகள்!

நெல் கொள்முதல் (File Pic)
News
நெல் கொள்முதல் (File Pic)

``மத்திய அரசுக்கு சொந்தமான உணவு கிடங்குகள் இந்தியா முழுமையிலும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டிருப்பதாகத் தகவல் வந்துள்ளது. குறிப்பாக, மன்னார்குடி கிடங்கு தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது."

தமிழ்நாட்டில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக, நெல் கொள்முதல் செய்யப்படுவது இனிவரும் காலங்களில் தொடருமா என விவசாயிகள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, நெல் சாகுபடியை மட்டுமே பிரதானமாக நம்பியிக்கும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளார்கள்.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய உணவுக் கழகம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்திய உணவு கழகத்தின் முகவராக, தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு இங்குள்ள நெல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லை, விற்பனை செய்ய தனியார் வியாபாரிகளையோ, இடைத்தரகர்களையோ, முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய அவலநிலை இல்லாமல் இருந்து வருகிறது. அவர்களிடம் தங்களது நெல்லை மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நெருக்கடியான நிலையும் ஏற்படாமல் இருக்கிறது.

இந்நிலையில்தான் மத்திய அரசு இனிவரும் காலங்களில் நெல் கொள்முதல் செய்யுமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றுவிட்டாலும்கூட, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மறைமுகமாகத் துணை போகக்கூடிய செயலில் மத்திய அரசு இறங்கியுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து பேசும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், ``மத்திய அரசு நெல் கொள்முதலை கைவிடப்போவதாக விவசாயிகள் மத்தியில் மிகப் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய உணவுத்துறை அமைச்சர் தடையின்றி நெல்கொள்முதல் தொடரும் என அறிவித்த நிலையில், மத்திய உணவுத்துறை செயலாளர், நெல் கொள்முதல் செய்வதை நிறுத்த உள்ளோம்; அப்படி மீறி கொள்முதல் செய்தால் அதை தமிழக அரசு ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

உண்மை நிலையைத் தமிழக அரசு விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். தற்போது முன் பட்ட சம்பா அறுவடைப் பணிகள் தொடங்க உள்ளன. தமிழக அரசு தடை இன்றி கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகளை தொடங்கிட அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தி குறுவை கொள்முதலில் ஏற்பட்ட பாதிப்பு போல் சம்பாவில் தொடராதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் மேற்கொள்ள முன் வர வேண்டும்.

விவசாயிகளையும் பொதுமக்களையும் பாதிக்கக்கூடிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றதாக அறிவித்த மத்திய அரசாங்கம் தொடர்ந்து கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் மறைமுகமாகத் தொடர்கிறது. மத்திய அரசுக்கு சொந்தமான உணவு கிடங்குகள் இந்தியா முழுமையிலும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டிருப்பதாகத் தகவல் வந்துள்ளது. குறிப்பாக, மன்னார்குடி கிடங்கு தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு, மத்திய அரசிடம் உரிய விளக்கம் கேட்க வேண்டும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ``விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதை மத்திய அரசு நிறுத்தப்போவதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் வந்துகொண்டிருக்கிறது. இதைப் பிரதிபலிக்கும் விதமாகதான், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய, கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அம்சங்கள் அதில் இடம்பெற்று இருந்தன.

சுகுமாறன்
சுகுமாறன்

ஆனால், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளின் அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்தாலும் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்த்தியாகத்தாலும் அந்த அபாயகரமான மூன்று வேளாண் சட்டங்களும் முறியடிக்கப்பட்டன. ஆனால், அந்தச் சட்டங்கள் நடைமுறையில் இல்லாமலே, விவசாயிகள், கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பியிருக்க வேண்டிய சூழலை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. நெல் கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தப்பட்டால், கார்ப்பரேட் நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கக்கூடிய விலைக்கு தங்களது நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். ஆனால், மத்திய அரசு நெல் கொள்முதலை கைவிடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளையும் தொடர் போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்’’ என எச்சரிக்கை விடுத்தார்.

விவசாயிகளின் அச்சம் குறித்து, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் பேசியபோது, ``நெல் கொள்முதலை நிறுத்தப்போவதாக மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்போ, தகவலோ வரவில்லை’’என தெரிவித்தார். ``நெல் கொள்முதல் தொடர்ந்து நடைபெறும் என தமிழக அரசால் உறுதி கொடுக்க முடியுமா’’ என நாம் கேள்வி எழுப்பியதற்கு, ``தமிழக முதல்வர் முடிவெடுப்பார்’’ என தெரிவித்தார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் உறுதி கொடுப்பார் என விவசாயிகள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.