Published:Updated:

வேளாண் சட்டங்கள்: `18 மாத நிறுத்திவைப்பு என்பது மத்திய அரசின் சூழ்ச்சி!' - பெ.மணியரசன்

தஞ்சாவூரில் நடைபெற்ற பச்சைக்கொடி பேரணியில் 2,500-க்கும் அதிகமான விவசாயிகள் கலந்துகொண்டது, பெரும் ஆச்சர்யத்தையும் உணர்வுபூர்வமான பாராட்டுகளையும் பெற்றது.

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் முற்றிலுமாகத் திரும்பக்கோரி, காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சாவூரில் பிரமாண்டமான பச்சைக்கொடி பேரணி நடைபெற்றது. தொடர் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும்கூட, இந்த பேரணியில் 2500-க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டது, பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தையும் உணர்வுபூர்வமான பாராட்டுகளையும் பெற்றது. இதில் உரையாற்றிய காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ``மூன்று வேளாண் சட்டங்களையும் 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது விவசாயிகளை ஏமாற்றக்கூடிய சூழ்ச்சி. இந்த மூன்று சட்டங்களையும் முற்றிலுமாகக் கைவிடும் வரை விவசாயிகளின் போரட்டம் தொடரவேண்டும்’’ என்றார்.

பச்சைக்கொடி பேரணி
பச்சைக்கொடி பேரணி

அத்தியாவசிய பொருள்கள் திருத்த சட்டம், வேளாண் விளைபொருள் வணிகம் ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்த பண்ணைய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை தற்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. கார்ப்பரேட நிறுவனங்களின் நலன்களுக்காகவே இந்த சட்டங்கள் கொண்டு வரப்படுவதாகவும் இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், பொருளாதார ஆய்வாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில்தான் இந்த சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, இன்று தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற பிரமாண்டமான பச்சைக்கொடி பேரணி நடைபெற்றது.

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கத்தில் உள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு சிலை அருகே தொடங்கிய இந்த பேரணி தஞ்சையில் முக்கிய சாலைகள் வழியாக, தஞ்சை பெரியகோயில் அருகே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை அருகே நிறைவுபெற்றது. இதில் உரையாற்றிய காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ``விவசாயிகளை ஒழித்துக்கட்டக்கூடிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறமாட்டோம் என மத்திய அரசு பிடிவாதமாக அரக்கத்தனமாக நடந்துகொள்கிறது. 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கிறோம் என மோடி அரசு தந்திரம் செய்துள்ளது. இது சூழ்ச்சி. இப்போது உயிரோடு இரு, 18 மாதங்கள் கழித்து கொலை செய்கிறோம் எனச் சொல்வது போல் உள்ளது. இதை விவசாயிகள் ஏற்க மாட்டார்கள்.

விவசாயிகள் பேரணி
விவசாயிகள் பேரணி

இப்போது நிறுத்தி வைத்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் விவசாய சங்கங்களைக் கலைத்து, ஒற்றுமையைச் சீர்குலைக்க சதி நடக்கிறது. மூன்று சட்டங்களையும் முற்றிலுமாக நீக்கும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரவேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார். இந்த பேரணியில் பங்கேற்ற இக்குழுவின் ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன், ``பிரதமர் மோடி அரசு, புதிய சட்டங்கள் மூலம் மாணவர்களை, மருத்துவர்களை, வழக்கறிஞர்களை சீண்டிப் பார்த்துவிட்டு, இப்போது விவசாயிகளையும் சீண்டிப் பார்க்கிறது. அதானி, அம்பானி போல், மற்றவர்களைச் சுரண்டி பிழைப்பவர்கள் அல்ல விவசாயிகள். தேனீக்கள் போல் உழைத்து வாழ்பவர்கள். இந்த தேனீக் கூட்டில் கை வைத்து கலைக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி. இந்த தேனீக்களின் கூட்டம் அவரது ஆட்சியைக் கொட்டி விரட்டியடிக்கும்'’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு