Published:Updated:

தமிழகத்தின் முதல் விவசாய பட்ஜெட்: ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

விவசாய பட்ஜெட்  ஆலோசனைக் கூட்டம்
விவசாய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்

``விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்பதால், விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நல்ல பட்ஜெட்டாக உருவாகக்கூடிய சூழல் உள்ளது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்."

தமிழ்நாட்டில் முதல் முறையாக விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என விவசாயிகளின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் அறிந்துகொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை , அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டார்கள்.

அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்
விவசாயிகளின் நலன்... விவசாய மேம்பாடு! - தமிழக அரசின் பட்ஜெட்...

தமிழக அரசின் சார்பில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் அண்ணாதுரை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் வள்ளலார் மற்றும் இம்மாவட்டங்களைச் சேர்ந்த மற்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். தமிழகத்தின் முதல்முறையாகத் தாக்கல் செய்யப்பட உள்ள விவசாய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்துப் பேசிய விவசாயிகள், இது தொடர்பான மனுக்களையும் வேளாண் அமைச்சரிடம் வழங்கினார்கள்.

``இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். ரசாயன உரங்களைத் தடை செய்ய வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் 50 சதவிகிதத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக வேளாண் கல்லூரிகளை உருவாக்க வேண்டும். வேளாண்மைக்கு மிகவும் அவசியமான மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட வேண்டும்.

இளைஞர்களை அதிக அளவில் விவசாயத்தில் ஈடுபடுத்தும் வகையில், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும். வேளாண்மை நவீன இயந்திரங்களான அறுவடை இயந்திரம், நடவு இயந்திரங்களை மானிய விலையில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நீர் மேலாண்மையை அதிகப்படுத்தும் வகையில், ஏரி, குளங்களைச் சீரமைக்க வேண்டும். தடுப்பணைகளை அதிக அளவில் கட்ட வேண்டும். குறுவை, சம்பா சாகுபடிக்கு ஏற்ற வகையில் புதிய நெல் ரகங்களையும் விதைகளையும் அறிமுகம் செய்ய வேண்டும். உற்பத்திப் பொருள்களைப் பாதுகாக்க, கிராமம்தோறும் கிட்டங்கி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். உழவர் சந்தைகளில் மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, பூச்சி நோய்த்தாக்குதலுக்கான ஆலோசனை மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய அக்ரி கிளினிக்கை உருவாக்க வேண்டும்.

விவசாய நிலம்
விவசாய நிலம்
`பசுமை விகடன் பட்ஜெட் பரிந்துரைகள்...அக்கறை காட்டிய நிதியமைச்சர்' - அகம்மகிழ்ந்த விவசாயிகள்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பெயரை சூட்ட வேண்டும். நெல் கொள்முதலில் நடைபெறும் ஊழலை ஒழிக்க காவல் துறையின் தனிப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும். விவசாயிகள் தங்களது விளைபொருள்களை எளிதாக விற்பனை செய்ய, தமிழக அரசின் சார்பில் இணையதளம் உருவாக்க வேண்டும். எண்ணெய் வித்துகள், திணை வகைகள் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும்" எனப் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தார்கள்.

இக்கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ``தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அதன் அடிப்படையில் வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்படும். இதில் விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்பதால், விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நல்ல பட்ஜெட்டாக உருவாகக்கூடிய சூழல் உள்ளது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு