Published:Updated:

மண் சாலைதான்… ஆனாலும் எங்களுக்குப் பொன் சாலை!விவசாயிகள் முயற்சியால் நடந்த மாற்றம்!

விவசாயிகள் போட்ட மண்சாலை
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகள் போட்ட மண்சாலை

முயற்சி

மண் சாலைதான்… ஆனாலும் எங்களுக்குப் பொன் சாலை!விவசாயிகள் முயற்சியால் நடந்த மாற்றம்!

முயற்சி

Published:Updated:
விவசாயிகள் போட்ட மண்சாலை
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகள் போட்ட மண்சாலை

விவசாய நிலத்துக்கு நடுவில் சாலை இல்லாததால் உழவு முதல் அறுவடை வரை சிரமப்பட்டு விவசாயம் செய்து வந்த நிலையில், அரசாங்கத்தை நம்பாமல், சொந்த செலவில் மண்சாலை அமைத்து, 80 ஆண்டுக்கால பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் ராஜபதியைச் சேர்ந்த விவசாயிகள்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவுக்கு உட்பட்டது ராஜபதி ஊராட்சி. ராஜபதி, சேதுசுப்பிரமணியபுரம், காரவிளை, திருவிளையாவட்டம், மேல ஒத்தவீடு, கருத்தன் குடியிருப்பு, மணத்தி ஆகிய 7 கிராமங்கள் இந்த ஊராட்சியில் அடங்கியுள்ளன. இங்கு 1,600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 3,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விளைநிலங்கள், இடைவெளியின்றி அடுத்தடுத்தாற் போல அமைந்துள்ளது. அதனால், சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறாமலே இருந்தது.

இந்நிலையில், ராஜபதி ஊராட்சி மன்றத் தலைவர் செளந்தரராஜன் முயற்சியால் தற்போது மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஊரிலுள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து விவசாய நிலங்களுக்கு நடுவில் சாலை அமைப்பது தொடர்பாகக் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினார். அதோடு நின்று விடாமல் விவசாயிகளின் ஒத்துழைப்பால், 32 நாள்களில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதமாக அந்தச் சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் போட்ட மண்சாலை
விவசாயிகள் போட்ட மண்சாலை

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கடம்பாகுளம் ஆயக்கட்டு விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் உத்திரம், “தாமிரபரணியின் கடைசி தடுப்பணையான ஶ்ரீவைகுண்டம் தடுப்பணையின் தென்கால் பாசனத்தின் கீழ் இந்தப் பகுதி விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் கிடைச்சுகிட்டு இருக்கு. நெல், வாழைதான் எங்களோட முக்கியமான பயிர். சுமார் 2,500 ஏக்கர்ல விவசாயம் நடந்துகிட்டு இருக்கு. இந்த நிலங்களுக்கு நடுவுல சாலை இல்லை. அதனால, விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வயலுக்கு நடுவுல இருக்க ஒன்றரை அடி அகலமுள்ள வரப்பு வழியாத்தான் நடந்து போக முடியும். இல்லேன்னா, சுமார் 10 கி.மீ தூரம் 6 ஊர்களைச் சுத்திதான் வயலுக்குள்ள வரணும்.

ஏர்க்கலப்பையைத் தலையில தூக்கிக்கிட்டு, மாடுகளைப் பத்திக்கிட்டு, வரப்பு வழியாவே நடந்து போயி, உழுதுட்டு வருவோம். டிராக்டர் வந்த பிறகு, அடுத்தடுத்த நிலங்கள்ல உழவு முடியுற வரைக்கும் காத்திருப்போம். அறுவடைக்கும் அப்படித் தான். இதனால, விவசாயம் செய்யுறதுல ரொம்ப சிரமப்பட்டோம். உழவுல இருந்து அறுவடை வரைக்கும் ஆகுற செலவைவிட, அறுவடை செஞ்ச நெல் மூட்டைகளையும், வாழைக்குலைகளையும் ‘மெயின் ரோட்’டுக் குத் தூக்கிட்டு வர்றதுக்கு தனியா செலவழிச் சோம். பல நேரங்கள்ல நஷ்டம் வந்திருக்கு.

எங்களுக்கு விவசாயத்தைத் தவிர வேற தொழில் தெரியாது. அதனால, நஷ்டம் வந்தாலும் பரவாயில்ல. எக்காரணத்தைக் கொண்டும் விவசாயத்தை விட்டுவிடக் கூடாதுன்னு தொடர்ந்து செஞ்சுகிட்டு வந்தோம். பல விவசாயிங்க நிலத்தைக் கட்டுக்குத்தகைக்கு கொடுத்துட்டாங்க. சில விவசாயிங்க ஒண்ணும் செய்யாம அப்படியே தரிசா போட்டுட்டாங்க. எங்க நிலத்து வழியா சாலை அமைச்சுத் தர வலியுறுத்தி அரசு அதிகாரிகள், கலெக்டர்கிட்ட பல தடவை மனு கொடுத்தோம். விவசாயிங்க திரண்டு பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் எந்தப் பலனுமில்ல. விடிவு காலமே பொறக்காதா? கடைசி வரைக்கும் நஷ்டத்துலதான் விவசாயத்தைச் செய்யணுமான்னு நினைச்சுக் கிட்டிருந்தோம். அந்தச் சமயத்துலதான் ஊர்த்தலைவரின் முயற்சியாலயும், விவசாயிங்க ஒத்துழைப்பாலயும் மண் சாலை அமைச்சிருக்கோம். மண் சாலைன்னாலும் இது எங்களுக்குப் பொன் சாலைதான்” என்றார்.

ராஜபதி ஊராட்சி மன்றத் தலைவரான செளந்தரராஜன், ‘‘நானும் விவசாயிதான். விவசாயியோட பிரச்னை ஒரு விவசாயிக்கு நல்லாவே தெரியும். இதுக்குத் தீர்வே இல்லையான்னு யோசிச்சுக் கிட்டிருந்தோம். நாலு மாசத்துக்கு முன்னால ஊர்ல உள்ள விவசாயிங்க பேசிக்கிட்டிருக்கும்போதுதான் ‘சாலைக்காக எதுக்கு அரசாங்கத் தையே நம்பிக்கிட்டிருக்கணும். பேசாம வயல்காரங்க அவங்கவங்க நிலத்துல பத்துப் பதினைஞ்சடி நிலத்தைக் கொடுங்க. அப்படியே முடிஞ்ச வரைக்கும் மண்ணையும் கொடுத்தீங்கண்ணா சாலை அமைச்சிடலாம். ‘மண் அள்ளுற ஜே.சி.பி, டிராக்டர், ரோடு ரோலர்’ வாடகை, டீசல், வேலையாள் கூலிக்கான செலவுத் தொகையைக் கணக்குப்பார்த்து விவசாயிங்க, ஊர் மக்கள்கிட்ட வசூல் செஞ்சுக்கலாம்’னு ஊர்ல இருக்க முன்னோடி விவசாயிங்க ஒரு யோசனை சொன்னாங்க.

மண்சாலைக்குக் கீழே செல்லும் தண்ணீர்
மண்சாலைக்குக் கீழே செல்லும் தண்ணீர்

அதை எல்லா விவசாயிகளும் வரவேற் றாங்க. உடனே அதைத் தீர்மானமா நிறைவேத்தினோம். 20 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலாச்சு. எல்லா விவசாயிகளும் தாராளமா மண் கொடுத்தாங்க. ராத்திரி, பகலா எல்லாரும் வேலை பார்த்ததுனால மூணு மாசமா செய்ய வேண்டிய வேலையை ஒரே மாசத்துல செஞ்சு முடிச்சுட்டோம்.

இப்ப, ஒவ்வொருத்தரும் அவங்க வயலுக்கு சுலபமா போயிட்டு வரலாம். முக்கியமா அறுவடைக்குப் பிரச்னை இல்லை. மண் சாலைக்குக் குறுக்கே பாசன நீர் போறதுக் காகச் சின்னதும், பெருசுமா 13 சிமென்ட் குழாய்களை அமைச்சிருக்கோம்.

ராஜபதியில இருந்து திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையை இணைக்குது இந்தச் சாலை. விவசாயிக மட்டுமல்லாம பள்ளி, கல்லூரிக்குப் போற மாணவர்களும் இந்த வழியாத்தான் போறாங்க. சைக்கிள், பைக், டிராக்டர், வேன்னு வாகனங்கள் அணி வகுத்துப் போறதைப் பார்க்குறப்போ சந்தோசமா இருக்கு. எங்களால முடிஞ்சதை நாங்க செஞ்சுட்டோம். இனிமே, அரசுதான் தார்ச்சாலை போட்டுத் தரணும். தார்ச்சாலை அமைஞ்சுட்டா மினிபஸ் போக்குவரத்தும் கிடைச்சுடும்” என்றார் மகிழ்ச்சியுடன்.

செந்தில்ராஜ், செளந்தரராஜன், உத்திரம்
செந்தில்ராஜ், செளந்தரராஜன், உத்திரம்

மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜிடம் பேசினோம், “மண் சாலைக்காக இடம் ஒதுக்கிக் கொடுத்துள்ள விவசாயிகள், அந்த இடத்தை ராஜபதி ஊராட்சி மன்றத்தின் தீர்மானத்துடன், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பெயருக்குச் சட்டபூர்வமாகப் பதிவு செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்து கொடுத்தால் நிதியின் இருப்பைப் பொறுத்து சரள் சாலையாகவோ, தார்ச்சாலையாகவோ அமைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

விவசாயிகளின் கூட்டு முயற்சிக்கு வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism