Published:Updated:

வைகோவால் நிகழ்ந்த சந்திப்பு.. உறுதிகொடுத்த மத்திய அமைச்சர்! -உயர் மின்கோபுர விவகாரத்தில் இழப்பீடு?!

மனுக்கொடுத்த விவசாயிகள்
மனுக்கொடுத்த விவசாயிகள்

மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் சந்திப்புக்கான நேரம் வாங்கி, விவசாயிகளை அழைத்துக்கொண்டு சென்றார். அப்போது விவசாயிகளின் பிரச்னைகளைத் தெளிவாக அமைச்சரிடம் எடுத்துரைத்திருக்கிறார் வைகோ.

விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்களை அமைக்கக் கூடாது. ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின்கம்பிகளால் அப்பகுதிகளில் மின் கதிர்வீச்சு ஏற்படுகிறது. அதனால் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என அதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கடந்த மாதம், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து, இதன் பாதிப்பை நேரடியாகக் காட்டினார்கள்.

மத்திய அமைச்சருடன் வைகோ
மத்திய அமைச்சருடன் வைகோ

இது தொடர்பாக ஏற்கெனவே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த நிலையில், கேரளாவைப் போல், நிலத்தடியில் கொண்டு போக வேண்டும். தங்கள் நிலங்களுக்குரிய இழப்பீடு தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி சென்றனர் உயர் மின்கோபுரத்துக்கு எதிரான கூட்டியக்கத்தினர்.

டெல்லி சென்ற நிலையில், கொரோனா காரணமாக மத்திய அமைச்சரைச் சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போகக்கூடிய நிலை இருந்திருக்கிறது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தியுடன் டெல்லியிலிருந்த வைகோவைச் சந்தித்தனர் விவசாயிகள். அவர் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் சந்திப்புக்கான நேரம் வாங்கி, விவசாயிகளை அழைத்துக்கொண்டு சென்றார். அப்போது விவசாயிகளின் பிரச்னைகளைத் தெளிவாக அமைச்சரிடம் எடுத்துரைத்திருக்கிறார் வைகோ.

மத்திய அமைச்சருடன் விவசாயிகள்
மத்திய அமைச்சருடன் விவசாயிகள்

பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அமைச்சர், விவசாயிகள் நஷ்டமடைவதில் எங்களுக்கு விருப்பமில்லை. உடனடியாக இதுகுறித்து, ஆலோசனை செய்து, ஆவண செய்கிறேன்'' என வாக்கு கொடுத்திருக்கிறார். இந்தச் சந்திப்பு தொடர்பாகப் பேசிய விவசாயிகள், ``வைகோ முயற்சியால்தான் சந்திப்பு நடந்தது. இதற்கு முன்பு, அமைச்சரைச் சந்தித்தபோது, காட்டிய அக்கறையைவிட, வைகோவுடன் சென்றதால் கூடுதல் அக்கறையோடு பிரச்னையைப் பொறுமையாகக் கேட்டார். எங்களுக்கான நியாயமான இழப்பீடு தொகையைக் கொடுங்கள் எனக் கோரிக்கை வைத்திருக்கிறோம். பரிசீலனை செய்து, நல்ல முடிவு சொல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்'' என்றனர்.

இந்தச் சந்திப்பில் எம்.பி. கணேசமூர்த்தி, கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன், எழுத்தாளர் தூரன் நம்பி மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு