Published:Updated:

77 கிராமங்களில் புதிய எண்ணெய் - எரிவாயு குழாய்; மத்திய அரசின் அறிக்கையால் கொந்தளிக்கும் விவசாயிகள்!

``மத்திய அரசு கடந்த 3-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 7 மாவட்டங்களில் உள்ள 77 கிராமங்களின் வழியாக எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயும் எடுத்து வருகிறது. விவசாய விளைநிலங்களின் வழியாக அமைக்கப்பட்ட குழாய்களின் மூலம் பிற பகுதிகளுக்கு இவை கொண்டு செல்லப்படுகின்றன. இதில் அவ்வபோது ஏற்படும் கசிவினால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, இப்பகுதி விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

இந்நிலையில்தான் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள 77 கிராமங்களின் வழியாக புதிதாக எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்க, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.

பேராசிரியர் ஜெயராமன்
பேராசிரியர் ஜெயராமன்

இது தொடர்பாக வரும் செப்டம்பர் 24-ம் தேதிக்குள் விவசாயிகள் தங்களது ஆட்சேபணையை விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்க, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள இக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், ``மத்திய அரசு கடந்த 3-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 77 கிராமங்களின் வழியாக எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை.

`தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் என்ற பேச்சுக்கே இடமில்லை!’ - சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன்

காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்து, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் எண்ணெய் எரிவாயு கிணறுகளை இனி அமைக்க இயலாது என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் குறுக்கும் நெடுக்குமாக எண்ணெய் எரிவாயு குழாய்களை அமைக்க முயற்சிப்பது ஆட்சேபணைக்குரியது.

பெட்ரோலியம் மற்றும் கனிமம் சட்டம் 1962-ஐ மாநில அரசுகள் கேள்விக்குள்ளாக்க வேண்டிய தேவை உள்ளது. சட்டத்தைத் திருத்தும்படி தமிழக அரசு மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.

எண்ணெய்-எரிவாயு திட்டம்
எண்ணெய்-எரிவாயு திட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? - நம்பிக்கை அளிக்கும் ஆய்வுக்குழு!

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இந்த குழாய்களை இங்கு பதிக்கக் கூடாது. எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகள் செப்.24-ம் தேதிக்குள் `பாலாம்பாள் சுப்பிரமணியன் தெரு, விவேகானந்தா நகர், விழுப்புரம்’ என்ற முகவரியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பைப் லைன் அமைப்பு பிரிவு அதிகாரியான மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்தில் எண்ணெய் எரிவாயு குழாய் அமைப்பது தொடர்பான ஆட்சேபணையை தெரிவிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு