Published:Updated:

``கோவை விதை சான்றளிப்பு இயக்குநரகத்தை இடம் மாற்றக் கூடாது!" - எதிர்க்கும் விவசாயிகள்; என்ன காரணம்?

விதைகளுடன் விவசாயிகள் மனு
விதைகளுடன் விவசாயிகள் மனு

``சென்னையில் உள்ள விவசாயத்துறைகளை கிராமப்பகுதிகளுக்கு கொண்டு வாருங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது கோவை விதை சான்றளிப்புத்துறையை சென்னைக்கு கொண்டு சென்று என்ன செய்யப் போகின்றனர் என்று தெரியவில்லை."

தமிழ்நாடு விதை சான்றளிப்புத் துறை கோவை தடாகம் சாலையில் இயங்கி வருகிறது. கோவையை தலைமையிடாகக் கொண்ட இந்தத் துறையில் 800-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். அரசு விதைப்பண்ணையிலிருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள், பல்கலைக்கழகத்திலிருந்து வழங்கப்படும் விதைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விற்கும் விதைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, விற்பதற்கும் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கும் உதவி வருகிறது விதைச் சான்றளிப்புத்துறை.

நாட்டு ரக விதைகள்
நாட்டு ரக விதைகள்
கோவையிலிருந்து இடம் மாற்றப்படும் விதை & அங்ககச் சான்றளிப்புத்துறை; விவசாயிகளுக்குப் பாதிப்பா?

இதோடு இயற்கை விவசாயம் செய்யப்படும் நிலங்களுக்கு இயற்கை விவசாயச் சான்றிதழ் வழங்குவதற்கு அங்ககச் சான்றளிப்புத் துறை செயல்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் செயல்பட்டு வந்த இயக்குநரகம் சென்னைக்கு மாற்றப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த முடிவுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
தமிழக வேளாண் பட்ஜெட்: `பசுமை விகடன் சொன்னதும் அரசு செய்ததும்!' - நினைவுகூரும் விவசாயிகள்

இந்நிலையில், விதை சான்றளிப்புத் துறை இயக்குநரகத்தை சென்னைக்கு மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழுவினர், விதைகளுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனரும், வழக்கறிஞருமான ஈசன் கூறுகையில், ``சென்னையில் உள்ள விவசாயத்துறைகளை கிராமப்பகுதிகளுக்கு கொண்டு வாருங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது கோவை விதை சான்றளிப்புத்துறை சென்னைக்கு கொண்டு சென்று என்ன செய்யப் போகின்றனர் என்று தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விதைகளை தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் பலவும் கோவை, ஈரோடு, சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களில்தான் இருக்கின்றன. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் கோவையில்தான் உள்ளது.

கரும்பு ஆராய்ச்சி நிலையம் கோவையில் உள்ளது. மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் ஈரோட்டில் உள்ளது. நெல் ஆராய்ச்சி நிலையம் தஞ்சாவூரில் உள்ளது. அந்தந்த ஊர் சார்ந்த நிலையங்கள், அங்கேயே இருந்தால்தானே கிராம மக்கள் அதை அணுக முடியும். அதை சென்னைக்கு மாற்றி எப்படி இயற்கை வேளாண்மையை முன்னெடுக்க போகின்றனர்.

ஈசன்
ஈசன்

அந்தத் துறையை மக்கள் அணுக முடியாதபடியான வேலையை செய்து வருகின்றனர். இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று அமைச்சர், அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம். அவர் பரிசீலித்து முடிவு செய்வதாக உறுதியளித்துள்ளார்” என்றார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

அடுத்த கட்டுரைக்கு