Published:Updated:

"விவசாயி என்ற ஓர் இனமே அழியும்!" - மின் திருத்தச் சட்டத்தால் அபாயம்

மின் திருத்தச் சட்டம்
மின் திருத்தச் சட்டம்

ஒரு விவசாயி மாதம் 4,000 முதல் 5,000 ரூபாய் மின் கட்டணம் கட்டவேண்டும் என்றால், மாநில அரசு அந்தப் பணத்தைக் கொடுக்குமா?

ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு, ஆற்றில் வரும் மழைநீரை அணைக்கட்டித் தேக்கி, வாய்க்கால் வெட்டி, வயல்வரை தண்ணீரைக் கொண்டு விடுகிறது அரசு. ஆனால், கிணற்றுப் பாசன விவசாயிகள் தமது சொந்த பணத்தில் கிணறு, ஆழ்துளைக் கிணறு தோண்டி விவசாயம் செய்கிறார்கள். அவர்களுக்கு மின்சாரத்தை இலவசமாகக் கொடுப்பதுதானே நீதி.

எனவே, கிணற்றுப் பாசன விவசாயிகளுக்கு அரசு கொடுப்பது இலவச மின்சாரம் அல்ல... சமூகநீதி மின்சாரம். ஆக, இந்தப் புதிய மின் சட்டம், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சமூக நீதியைப் பறிக்கிறது.

விவசாயிகள், தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தை விநியோக கம்பெனியிடம் மாதாமாதம் தவறாமல் செலுத்தி விட வேண்டும். மாநில அரசிடமிருந்து மானியம் வங்கிக் கணக்கில் வந்து சேருமாம். இது நல்ல கூத்து. ஏழெட்டு மாதங்களாக மாநிலத்திற்கு வர வேண்டிய பொருள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) இதுவரை வந்து சேரவில்லை.

தடுப்பு மருந்து வாங்ககூடப் பணம் இல்லை. அதனால்தான் ஊரடங்கு, அடங்குவதற்கு முன்பே டாஸ்மாக் திறக்கிறோம் என்று மாநில அரசு கதறுகிறது. இதில் எப்படி விவசாயி வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்போகிறது அரசு. குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவே அல்லாடுகிறது.

மின் திருத்தச் சட்டம்
மின் திருத்தச் சட்டம்

ஒரு விவசாயி மாதம் 4,000 முதல் 5,000 ரூபாய் மின் கட்டணம் கட்டவேண்டும் என்றால், மாநில அரசு அந்தப் பணத்தைக் கொடுக்குமா? அப்படியே கொடுத்தாலும், முதலில் கட்ட விவசாயிகளிடம் பணம் இருக்க வேண்டுமே?

ஆக, மொத்தத்தில் இலவச மின்சாரத்தைப் பறிக்கும் சதித்திட்டமே இந்த மின் திருத்தச் சட்டம்-2020. இதுவரை அரசு விநியோகித்து வந்த மின்சாரத்தை இனி தனியார் கம்பெனிகள் விநியோகம் செய்யும். தனியார் கம்பெனிகளுக்கு வணிக முகம் இருக்குமே தவிர மனித முகம் இருக்காது. மாதாமாதம் விவசாயி சரியாக மின் கட்டணம் கட்ட போவதில்லை. மின் இணைப்புத் துண்டிக்கப்படும்; விவசாயம் நடக்காது; நிலம் தரிசாகும். தரிசு நிலத்தை அடிமாட்டு விலைக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு அபகரித்துக் கொடுக்கும். விவசாயி வீதியில் தூக்கி எறியப்படுவான். இதுதான் நடக்கும். விவசாயி என்ற ஓர் இனமே அழித்து ஒழிக்கப்பட்டுக் கூலிகளாக மாற்றம் பெறும்.

மின் சட்டத் திருத்தம்-2020 அமலுக்கு வந்தால் இதுதான் நடக்கப் போகிறது. தற்போது வீடுகள், கைத்தறி, விசைத்தறி போன்றவற்றுக்கு மின்சார மானியம் வழங்கப்படுகிறது. இது ஏறக்குறைய 1.5 கோடி இணைப்புகள் இருக்கும்.

இந்த ஒன்றரைக் கோடி மக்களும், இனி கட்டணத்தைச் செலுத்திவிட்டு, மீண்டும் அரசிடமிருந்து மானியம் பெற வேண்டும் என்பது நல்ல வேடிக்கை. இது, 60 தேங்காய்களை 70 முட்டாள்கள் சுமந்து சென்ற கதையாக இருக்கிறது. ஒவ்வொருவரும் கையில் ஒரு தேங்காயை எடுத்துக்கொண்டால் சுமையே இல்லாமல் நடக்கலாம். மூட்டைக் கட்டி தூக்கினால் கழுதையைப் போலப் பொதி சுமக்க நேரிடும். மின் சட்டத் திருத்தம்-2020, கழுதை மாதிரி மக்களைப் பொதி சுமக்க வைத்துவிடும் என்பதுதான் நிதர்சனம்.

"விவசாயி என்ற ஓர் இனமே அழியும்!" - மின் திருத்தச் சட்டத்தால் அபாயம்

> மின் திருத்தச் சட்டம்-2020 என்ன சொல்கிறது? - 'இந்திய விவசாயிகளையும் ஏழை மக்களையும் ஒரு சேர குழியில் தள்ளிப் பன்னாட்டு முதலாளிகளின் காலடியில் வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது 'புதிய மின் திருத்தச் சட்டம்-2020' என்று கூறும் தூரன் நம்பியின் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > இலவச மின்சாரத்தைத் துண்டிக்கும் மின் திருத்தச் சட்டம்-2020 க்ளிக் செய்க... https://bit.ly/36tAfzU

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு