Published:Updated:

மேட்டூர் விவகாரம்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ஆலோசனைக் கூட்டம்; மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்!

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன் ( ம.அரவிந்த் )

பெரும்பாலான விவசாயிகள் மேட்டூரில் ஜூன் 12-ம் தேதி தண்ணீரைத் திறக்கலாம் எனக் கருத்துகளைக் கூறியுள்ளனர். விவசாயிகளின் கருத்தை முதல்வரிடம் தெரிவித்த பிறகு, முதல்வர் தண்ணீர் திறப்பு குறித்து அறிவிப்பை வெளியிடுவார்.

தஞ்சாவூரில் மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டிருப்பது விவசாயிகளிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. கலந்தாய்வுக்குப் பிறகு மேட்டூர் அணை திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

மேட்டூர் திறப்பது தொடர்பான கூட்டத்தில் துரைமுருகன்
மேட்டூர் திறப்பது தொடர்பான கூட்டத்தில் துரைமுருகன்

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்ட செயலாக்கம் மற்றும் மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு குறித்து, விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அத்துடன், ஒரு மாவட்டத்துக்கு சுமார் பத்து பேர் வீதம் விவசாயிகள் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒரு மாவட்டத்துக்கு மூன்று விவசாய பிரதிநிதிகள் கருத்து கூறுகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். பல விவசாயிகள் மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் எனவும் சிலர் விவசாய பணி முழுவதுக்கும் தண்ணீர் கொடுக்க முடியுமா என்பதை உறுதிபடுத்தி கொண்ட பிறகு தாமதமாகத் திறக்கலாம் என இருவேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்தனர். அதன்படி `மேட்டூரில் வரும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும், கர்நாடகா, மழை பெய்து அணையில் நிரம்பும் தண்ணீரை உபரி நீராகத் திறந்து விடுகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் அளித்துள்ள தண்ணீர் பகிர்வு அடிப்படையில் கர்நாடக அரசு தண்ணீர் வழங்க வேண்டும், இதை உடனடியாகத் தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்தனர் .

விவசாயிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில்
விவசாயிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில்

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு கூட்டத்தைத் தொடர்ந்து நடத்திட வலியுறுத்த வேண்டும். கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்காக காவிரியிலிருந்து விநாடிக்கு 10,691 கன அடி நீரையும்,வெண்ணாற்றில் விநாடிக்கு 9,370 கன அடி நீரையும், கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 3,380 கன அடி நீரையும் திறக்க வேண்டும்.

பயிர்களில் பல்வேறு நோய்த் தாக்குதல் உள்ள நிலையிலும், மண் வளம் தொடர்ந்து பாதிக்கும் வகையிலும் உள்ளதால், வட்டார அளவில் அக்ரி கிளினிக் என்ற ஒன்றை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு உதவிட வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க உள்ள பகுதியில், மணல் எடுப்பதை மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

1955-ம் ஆண்டு அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் உரத்தை இணைக்க வேண்டும், பயிர்க்கடன் உடனே வழங்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,000-க்கும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000-க்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். மேலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மனு கொடுக்கும் விவசாயிகள்
மனு கொடுக்கும் விவசாயிகள்

பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், ``10 வருடங்களுக்கு பிறகு தி.மு.க ஆட்சி பொறுப்பிற்கு வந்துள்ளது. நான் நீர்வளத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளேன். மீண்டும் கோகிலா என்பது போல் துரைமுருகன் மீண்டும் அமைச்சராக வந்திருக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, காவிரி நடுவர் மன்றத்தையும் அமைத்து, இடைகால தீர்ப்பையும் பின்னர் இறுதித் தீர்ப்பையும் பெற்றுத்தந்தார். அதற்குப் பிறகு வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நன்கு அறிவீர்கள். உலகிலேயே மிகச்சிறந்த நீர்ப்பாசன முறை காவிரி டெல்டா பகுதியில் மட்டுமே உள்ளது. இதைப் பராமரிப்பு செய்ய, காலியாக அனைத்து பணியிடங்களையும் நிரப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் நலனுக்காக இந்த அரசு அனைத்து திட்டங்களையும் முறையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தும்" என்றார்.

மேலும் பேசிய அவர், ``மேட்டூர் அணையில் 97 அடி தண்ணீர் உள்ள நிலையில்,தென்மேற்குப் பருவமழை பொழியும் சூழ்நிலையைப் பொறுத்து, பாசனத்துக்காக தண்ணீரை ஜூன் 12-ம் தேதி திறக்கலாமா அல்லது வேறொரு நாளில் திறக்கலாமா என்பது குறித்து தங்களிடம் கலந்து ஆலோசித்தோம்.

இதில் பெரும்பாலானோர் ஜூன் 12-ம் தேதி தண்ணீரைத் திறக்கலாம் எனக் கருத்துக்களைக் கூறியுள்ளீர்கள். விவசாயிகளின் கருத்தை முதல்வரிடம் தெரிவித்த பிறகு, முதல்வர் தண்ணீர் திறப்பு குறித்து அறிவிப்பை வெளியிடுவார். ஆறுகளில் தடுப்பணைக் கட்டுவது குறித்த செயலாக்கம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும். கடந்த ஆண்டுகளில் குடிமராமத்து பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். சரபங்கா திட்டத்துக்காக மேட்டூர் அணையில் ஒரு பகுதி உடைக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

அதுகுறித்து நேரில் சென்று ஆய்வு செய்வேன். தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக நிதி குழுவுக்குப் மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்றார்.

மேட்டூர் நீர் திறப்பது தொடர்பாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள், அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், அ.தி.மு.க ஆட்சி நடைபெற்ற கடந்த 10 ஆண்டுகளாக கூட்டத்தை நடத்தாமல் சென்னையிலேயே முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டு வந்தனர். ஆனால், தற்போது பழைய முறையைப் பின்பற்றி விவசாயிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் கூட்டத்தை நடத்தியிருப்பது விவசாயிகள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு