Published:Updated:

``டெல்லி போல தமிழகமும் ஸ்தம்பிக்கும்!' - எட்டுவழிச் சாலைக்கு எதிராக விவசாயிகள்

எட்டு வழிச் சாலைக்கு எதிரான போராட்டம்
எட்டு வழிச் சாலைக்கு எதிரான போராட்டம் ( எம். விஜயகுமார். )

மக்களின் எதிர்ப்பையும் மீறி அரசு செயல்படுத்த நினைத்தால் டெல்லியில் போராடும் விவசாயிகளை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்திலும் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.

''டெல்லியை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் விவசாயிகளைப்போல தொடர் காத்திருப்புப் போராட்டங்கள் நடத்தி அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு தமிழகத்தை ஸ்தம்பிக்க வைப்போம்.''

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தின் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு கடந்த 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது.

விவசாயிகள்
விவசாயிகள்

அந்தத் தீர்ப்பில், உயர் நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கும் என்றும் புதிய அறிக்கை வெளியிட்டு இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது. 'இத்தீர்ப்பு மேலோட்டமாகப் பார்த்தால் விவசாயிகளுக்குச் சாதகமாகத் தெரிந்தாலும் உண்மையில் இத்தீர்ப்பு விவசாயிகளுக்கு ஆபத்தானது' என்று கூறியதோடு பல கட்ட கூட்டங்கள் நடத்தி அடுத்தகட்ட போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள் 8 வழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்.

இதுபற்றிப் பேசிய 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம், ''அரசும் நீதிமன்றங்களும் சட்டத்தை மட்டுமே பார்க்கிறார்களே தவிர, சுற்றுச் சூழல் பாதிப்பால் இயற்கை பேரழிவு ஏற்படுவதைக் கவனத்தில் கொள்வதில்லை. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் விவசாயிகளுக்கும் வேதனையளிக்கிறது. 8வழிச் சாலை காடு, மலைகள், நீர் வழித் தடங்கள் என இயற்கையை அழித்து நடைமுறைப்படுத்த முடியும். அதனால் சுற்றுச் சூழல் அமைச்சகம் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது.

அருள் ஆறுமுகம்
அருள் ஆறுமுகம்

நாங்கள் இத்திட்டத்தை எதிர்த்து இரண்டரை வருடமாகப் போராட்டம் நடத்தி வருகிறோம். அ.தி.மு.க, பா.ஜ.க கட்சியைத் தவிர, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுகளையும் பெற்றிருக்கிறோம். அனைவரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். மக்களின் எதிர்ப்பையும் மீறி அரசு செயல்படுத்த நினைத்தால் டெல்லியில் போராடும் விவசாயிகளை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்திலும் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்'' என்றார்.

இதுபற்றி உழவர் உற்பத்தியாளர் பேரியக்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் நாராயணன், ''உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பாதகமாக இருக்கிறது. அரசு மக்களுக்கானது. மக்கள் இத்திட்டத்தை எதிர்ப்பதால் அரசு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும். சேலம் டு சென்னை செல்வதற்கு விமான சேவை, ரயில் பயணம், சேலம் டு கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை வழியாகவும், சேலம் டு கிருஷ்ணகிரி வழியாகவும், சேலம் டு அரூர், வாணியம்பாடி வழியாகவும் 5 சாலைகள் இருக்கின்றன். இந்தச் சாலைகளை விரிவுபடுத்தலாம். வனங்களை அழித்து மரங்களை வெட்டி உயிர்களைக் கொன்று 8 வழிச் சாலை போட வேண்டாம்.

நாராயணன்
நாராயணன்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து பல கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம். அரசு எட்டு வழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றினால் டெல்லியை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் விவசாயிகளைப்போல தொடர் காத்திருப்புப் போராட்டங்கள் நடத்தி அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு தமிழகத்தை ஸ்தம்பிக்க வைப்போம். அதனால் அரசு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு