Published:Updated:

மதிப்புக்கூட்டல் அரிசி, குறைந்த விலையில் உரங்கள், செலவு குறைந்த சொட்டுநீர்ப் பாசனம்...

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முயற்சி!

மதிப்புக்கூட்டல் அரிசி, குறைந்த விலையில் உரங்கள், செலவு குறைந்த சொட்டுநீர்ப் பாசனம்...

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முயற்சி!

Published:Updated:
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

முயற்சி

“இயற்கை முறையில் பாரம்பர்ய நெல் ரகங்களை விளைவித்த விவசாயிகளே அதை விற்பனை செய்தால் மக்களுக்கும் நல்லது, விவசாயிகளுக்கும் நல்லது. இந்த மண்ணுக்கும் நல்லதுதானே, அதைத்தான் நாங்கள் செய்கிறோம்” என்கிறார்கள் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவினர்.

மதுரை மாவட்டம், கொட்டாம் பட்டி அருகே மேலவளவிலுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், லாபகரமான விவசாயம் செய்ய வழிகாட்டுவதோடு, இயற்கை விவசாயம், அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறது. இப்படிச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், இப்போது சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, பாரம்பர்ய பயிர்களை இயற்கை முறையில் விளைவித்து நேரடியாக விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

விவசாயிகள் கூட்டம்
விவசாயிகள் கூட்டம்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேளாண்மைத் துறையின் உதவியுடன் செயல்பட்டு வருகின்றன. அதன்மூலம் சிறு குறு விவசாயிகள் கூட்டாகவும், இயற்கை முறையில் நஷ்டம் இல்லாமலும் பயிர் செய்து வருகிறார்கள். அவர்களால் விவசாயக்கருவிகள், இடுபொருள்கள் விலை குறைவாக வழங்கப்படுகின்றன. தேவையான ஆலோசனைகளையும், சந்தைப்படுத்துதல் போன்ற உதவிகளையும் வேளாண்துறையினர் செய்கிறார்கள்.

அந்த வகையில் மதுரை மாவட்டம், மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவினர் பாரம்பர்ய கறுப்புக் கவுனி அரிசியை இயற்கை முறையில் சாகுபடி செய்து, அதற்கென ஒரு ‘பிராண்டு’ உருவாக்கி நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

கோபால்
கோபால்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு ஒருங்கிணைப் பாளர் கோபால், ‘‘எங்கள் குழுவின் நோக்கம், இயற்கை முறையில் சிறு குறு விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருள்களை மதிப்புக்கூட்டுவது. அதை வாடிக்கையாளர் களிடம் நேரடியாக விற்பனை செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்து வதுதான். அதேபோல் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருள்களை வழங்க வேண்டும் என்பதுதான். அந்த அடிப்படையில் எங்கள் குழு இயங்குகிறது.

100 சிறு குறு விவசாயிகளுடன் இந்தக் குழுவைத் தொடங்கினோம். இது, பெரும்பாலும் ஏழை விவசாயிகள் இருக்கும் பகுதி. ஆரம்பத்தில் எங்கள் குழுவுக்கு 5 லட்சம் நிதியுதவியை வேளாண்மைத்துறை அளித்தது. அதை வைத்து விவசாயக் கருவி களை வாங்கி பயன்படுத்த வைத்தோம்.

விவசாயப் பணிகளில்
விவசாயப் பணிகளில்

சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கத் தனியார் நிறுவனங்கள் அதிகமான பணம் பெற்று, குறைவான சேவையை வழங்கி வந்தார்கள். அந்தப் பணியை நாங்களே செய்து கொடுக்கிறோம். உள்ளூரிலேயே இருப்பதால் அதில் எந்தப் பிரச்னை வந்தாலும் உடனே சரி செய்து கொடுக்கிறோம். ரசாயன உரம் போட்டு விவசாயம் செய்து பழகிய மக்களை உடனே மனம் மாற்றம் செய்துவிட முடியாது என்பதால், ஒவ்வொரு விவசாயியிடமும் ரசாயன உரத்தின் பாதிப்புகளை எடுத்துச் சொல்லி முடிந்தவரை ரசாயன உரங்களைத் தவிர்க்கச் சொல்கிறோம்.

இயற்கை உரங்களைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொடுக்கிறோம். இங்குள்ள மகளிர் குழுவினர் மிகக்குறைந்த விலைக்கு உயிர் உரங்களைத் தயாரித்து, இங்குள்ள விவசாயி களுக்கு மட்டுமல்ல வெளி மாவட்டங்களுக்கும் அனுப்புகிறார்கள். இப்போது ரசாயன உரப் பயன்பாடு குறைந்து வருகிறது. இது எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்ததால்தான் அடுத்த கட்டமாகப் பாரம்பர்ய நெல் ரகங்களை உற்பத்தி செய்து அதை நாங்களே விற்பனை செய்ய முடிவெடுத்தோம்.

பாரம்பர்ய அரிசி
பாரம்பர்ய அரிசி

விவசாயிகளுக்கு மாதம்தோறும் கூட்டம் நடத்தும்போது இயற்கை உரங்கள் பயன் படுத்துவது, பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிர் செய்வது என்று எடுத்துச் சொல்வதை விட இயற்கை உரங்களைப் பயன்படுத்தி எங்களில் சிலர் பயிர் செய்தும், டிரோன் மூலம் உரம் தெளிப்பதைப் பார்த்தும், அதன் முடிவுகளை நேரில் பார்க்கும் விவசாயிகள் இயற்கை உரத்துக்கும், நவீன முறையில் விவசாயம் செய்வதற்கும் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த வட்டாரத்தைப் பொறுத்தவரையில் பெரியாறு தண்ணீரை நம்பி ஒரு போக விவசாயம் செய்கிறார்கள். அது முடிந்ததும் நிலக்கடலை, உளுந்து... போன்ற பயிர்களைச் செய்கிறார்கள்.

தற்போது இயற்கை முறையில் விளைவிக்கும் சிறுதானியம், பாரம்பர்ய நெல் வகைகளைப் பல மாவட்டங்களில் ஒரு சில விவசாயிகள் மட்டுமே விளைவிக்கிறார்கள். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், விற்பனையில் சிக்கல் உள்ளது. ஆகையால், விவசாயிகளே நேரடியாக இயற்கை விவசாய விளைபொருள்களை விற்பனை செய்யும்போது, அதற்கு நம்பகத்தன்மையும் கூடும். கூடுதல் லாபமும் கிடைக்கும்.

நிறுவனத்தின் அலுவலகம்
நிறுவனத்தின் அலுவலகம்

முதல் கட்டமாகக் கறுப்புக் கவுனியை விவசாயம் செய்ய 10 விவசாயிகள் முன் வந்தார்கள். அவர்களிடம், ‘எடுத்தவுடன் நமக்கு லாபம் வராது, இது ஒரு பரிசோதனை முயற்சிதான், அதன் பின்னால் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும்’ என்று எடுத்துச் சொன்னோம். ஏனென்றால், அரசு இதைக் கொள்முதல் செய்யாது. வியாபாரிகளிடம் கொடுக்க வேண்டும் அல்லது நாமே விற்பனை செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொன்னோம். அதைத்தொடர்ந்து விவசாயிகளும் உற்சாகமாக வேலையில் இறங்கினார்கள்.

இதற்கான விதை நெல்லை கும்பகோணம் விவசாயிகளிடமிருந்து வாங்கினோம். 120 நாள்கள்தான் இப்பகுதிக்குத் தண்ணீர் வரும். கறுப்புக் கவுனி 145 நாள்கள் வளரும். அதனால் தண்ணீர் வரும்போது மட்டு மல்லாமல் புழுதியிலும் நெல்லை விதைத்தோம். கிட்டத்தட்ட 6 அடிக்கும் மேலாக நெல் நன்றாக வளர்ந்தது. எங்களுடைய முதல் விவசாயம் லாபம் சம்பாதித்துத் தரும் என்பதைவிட இயற்கை முறையில் சிறப்பாக வளர்ந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. மகசூலும் அதிகம் வந்தது.

கறுப்புக் கவுனி அரிசி
கறுப்புக் கவுனி அரிசி

அதை அறுவடை செய்து, மதிப்புக்கூட்டி எங்கள் மேலவளவு உழவர் குழு பெயரிலேயே ‘பிராண்டை’ உருவாக்கி ‘பேக்கிங்’ செய்து விற்கத் தொடங்கினோம். முதலில் வேளாண் துறை அதிகாரிகளை அழைத்து வந்து விழா நடத்தி எங்கள் ‘பிராண்டை’ அறிமுகப் படுத்தினோம். எங்களுடைய ‘வாட்ஸ் அப்’ குழுக்கள், ‘ஃபேஸ்புக்’ குழுக்களிலும், பிற மாவட்ட ‘சோஷியல் மீடியா’க்களிலும் பகிர்ந்து வருகிறோம்.

மேலூரில் உள்ள ‘சூப்பர் மார்க்கெட்’, கடைகளில் கேட்டுள்ளார்கள். அடுத்து மதுரை உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் அனுப்ப இருக்கிறோம். எங்களுக்கு என்ன பிரச்னை, நிதி ஆதாரம் குறைவு. அதனால் தனியாகச் சந்தைப்படுத்த ஆள்பலம் இல்லை. மற்றபடி மக்களே இதன் மதிப்பை அறிந்து வாங்கத் தொடர்புகொண்டால் நாங்கள் அனுப்பி வைக்கிறோம். தற்போது கறுப்புக் கவுனி அரிசியை ஒரு கிலோ 165 ரூபாய்க்கும், அரைக்கிலோ 85 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறோம்.

வெளியூரில் உள்ள இயற்கை உரம் தயாரிக்கும் சிறு சிறு குழுக்களிடம் அவர்கள் பொருள்களை வாங்கிக்கொண்டு எங்கள் தயாரிப்பை அவர்களுக்குப் பண்டமாற்று முறையில் விற்பனை செய்யப் பேசி வருகிறோம். தற்போது மதுரையில் உள்ள தொழுவம் என்ற இயற்கை உரம் தயாரிக்கும் குழுவிடம் பஞ்சகவ்யாவை வாங்கிக் கொண்டு அதற்கு இணையாக எங்கள் அரிசியைக் கொடுத்துள்ளோம்.

அரசு மனது வைத்து இது போன்ற பாரம்பர்ய நெல் ரகங்களைக் கொள்முதல் செய்தால், இன்னும் அதிகமாக உற்பத்தி செய்து விவசாயிகளைப் பொருளாதார ரீதியாகத் தரம் உயர்த்துவோம். அது மட்டுமல்லாமல் வைகைப் பாசனத்தில் பயன்பெறும் 6 மாவட்டங்களில் இருந்த பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியை இங்கு சிலர் செய்து வருகிறார்கள். அந்தளவுக்கு இப்பகுதியில் அருமையான நெல் ரகங்கள் இருந்துள்ளன. அவை அனைத்தையும் மீண்டும் இயற்கை முறையில் வளர்க்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதன் மூலம் மண்ணையும் ரசாயனம் இல்லாமல் காப்பதும் நோக்கம்.

பாரம்பர்ய நெல் சாகுபடி
பாரம்பர்ய நெல் சாகுபடி

எங்கள் உற்பத்தியாளர் குழு மட்டுமல்லாமல் கொட்டாம்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான உதவிகள், ஆலோசனைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். 900 விவசாயிகளுக்கு, சொட்டுநீர்ப் பாசன வசதியை முறையாகச் செய்து கொடுத்துள்ளோம். மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள், சலுகைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தி முடிந்தவரையில் அதைப் பெற்றுக் கொடுக்கவும் வேலை செய்கிறோம். அடுத்து கடலை எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யத் திட்ட மிட்டுள்ளோம்” என்றார்.

மென்பொருள் பொறியாளரான கோபால், ஒருபக்கம் நிறுவன வேலைகளைக் கவனித்துக்கொண்டு மற்றொரு பக்கம் சொந்த ஊர் மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திருப்பவும் அவர்களைப் பொருளாதார ரீதியாக உயர்த்தவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். விவசாயிகளே வியாபாரியாகவும், பிராண்டாகவும் மாறினால்தான் அவர்கள் வாழ்க்கை உயரும் என்று நம்புகிறார்.

தொடர்புக்கு, கோபால்,

செல்போன்: 94880 87588

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism