Published:Updated:

`கட்டடம் இடிந்தால் கட்டி விடலாம்; விளை நிலம் அழிந்தால்..? - குழாய் பதிப்பால் விவசாயிகள் வேதனை

கே.குணசீலன்
ம.அரவிந்த்

தஞ்சாவூர் அருகே விளை நிலங்களில் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஓ.சி அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊர்மக்கள் மற்றும் அதிகாரிகள்
ஊர்மக்கள் மற்றும் அதிகாரிகள் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் அருகே விளை நிலங்களில் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஓ.சி அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர். நகரத்திற்குள் குழாய் பதித்தால் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் சேதமடையும் அதற்காகவே விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். கட்டடங்கள் இடிந்தால் திரும்பவும் கட்டி கொள்ளலாம் விளை நிலம் அழிந்தால் திரும்பவும் விளைச்சலுக்கு ஏற்றார் போல் உருவாக்க முடியுமா என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பேச்சு வார்த்தையின் போது
பேச்சு வார்த்தையின் போது
ம.அரவிந்த்

இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள நரிமணத்தில் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் குருடாயில் கொண்டுவரப்பட்டு இந்த நிறுவனத்தில் சுத்திகரிக்கப்பு செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுத்திகரிப்பு செய்யப்படும் பெட்ரோல், டீசல், கேஸ், மண்எண்ணெய் உள்ளிட்டவை திருச்சி மாவட்டம் வாளமர்கோட்டையில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. டேங்கர் லாரிகள் மூலம் இவை கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

தற்போது இதனை பூமிக்கு அடியில் குழாய் பதித்து அதன் மூலம் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக விளை நிலங்களுக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. நரிமணத்தில் இருந்து திருவாரூர் தஞ்சாவூர் வழியாக திருச்சி வரை மொத்தம் 116 கி.மீ. தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. தற்போது தஞ்சாவூர் அம்மாப்பேட்டை வரை 68 கி.மீ.வரை பணிகள் முடிவடைந்து விட்டன.

பாதுகாப்பு பணியில் போலீசார்
பாதுகாப்பு பணியில் போலீசார்

இதனையடுத்து தஞ்சை அடுத்த சூரக்கேட்டை பகுதியில் விளைநிலங்களில் குழாய்கள் பதிப்பதற்காக குழாய்கள் லாரிகளில் கொண்டுவரப்பட்டன. குழாய் பதிப்பதற்காக ராட்சஸ இயந்திரமும் வந்தது.இதனையறிந்த விவசாயிகள் திரண்டதோடு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் குழாய்கள் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டன. இந்த நிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐ.ஓ.சி கட்டுமான பிரிவு பொது மேலாளர் யோவான்குமார், முதன்மை கட்டுமான அதிகாரி முருகேசன், தமிழக அரசு அதிகாரிகள் வந்தனர். பாதுகாப்பிற்கு காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்.

ஐ.ஓ.சி அதிகாரிகளை விவசாயிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு, விளை நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கக்கூடாது. இதனால் எங்களுடைய மண் மற்றும் நீர்வளம் பாதிக்கப்படும். குழாய்களை சாலை மார்க்கமாக பதியுங்கள் என கூறினர்.அதிகாரிகள் குழாய்கள் பதிப்பதால் விவசாயம் பாதிக்கப்படாது என கூறியும் அதனை விவசாயிகள் ஏற்கவில்லை. இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.இது குறித்து ஐ.ஓ.சி., கட்டுமான பிரிவு பொது மேலாளர் யோவான்குமார், அதிகாரி முருகேசன் ஆகியோர் கூறுகையில், ``இந்தியா மட்டும் அல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விளை நிலங்கள் வழியாத்தான் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக குழாய்கள் பதிக்கவில்லை.

ஐ.ஓ.சி அதிகாரிகள்
ஐ.ஓ.சி அதிகாரிகள்

நரிமணத்தில் இருந்து சுகத்திரிக்கப்படும் பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்எண்ணெய் ஆகியவற்றை எடுத்துச்செல்வதற்காகத்தான் குழாய்கள் பதிக்கிறோம். 8 இஞ்ச அளவு கொண்ட குழாய்கள் 6 அடிக்கு கீழே பதிக்கிறோம். இதற்காக நிலம் 18 மீட்டர் எடுப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டு அதற்கான இழப்பீடும் வழங்கப்படும். அந்த இடத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். அது விவசாயிகளின் நிலம் தான்.அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.இதனால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.பாதிப்பு ஏற்பட்டால் அதற்கும் உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படும். விவசாயிகள் சரியான புரிதல் இல்லாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.இது குறித்து மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை 142 கி.மீ. தூரமும் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு 80 சதவீதம் ணிகள் முடிவடைந்து விட்டன” என்றார்.

விவசாயி மாரிமுத்துவிடம் பேசினோம், ``தண்ணீர் தட்டுப்பாட்டால் முப்போகம் விளைந்த பூமியில் இன்றைக்கு ஒரு போக விவசாயம் கூட செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மண்ணை மலடாக்குகிற திட்டத்திற்கு வேகம் காட்டும் அரசு தண்ணீரை கொண்டு வருவதற்கு ஏன் வேகத்தை காட்டவில்லை. 5 அடி ஆழம் சுமார் 54 அடி அகலத்தில் குழிகள் எடுத்து அதனுள் குழாய்கள் பதிக்க உள்ளனர். குழாய் உடைப்பு ஏற்படாது அது போன்று எங்கும் நடக்கவில்லை என கூறுகின்றனர். ஏன் நீங்கள் சாலைமார்க்கமாகவோ அல்லது இரயில் பாதை மார்க்கமாகவோ இதை செய்து கொள்ள வேண்டியதுதானே என்றோம்.

மாரிமுத்து
மாரிமுத்து

அதற்கு அப்படி செய்தால் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் சேதமடையும் குழி எடுப்பதன் ஆழமும் அதிகபடுத்த வேண்டும் அதற்காகத்தான் விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்கிறோம் என்கிறார்கள். கட்டடங்கள் இடிந்தால் திரும்பவும் கட்டி கொள்ளலாம் விளை நிலம் அழிந்தால் திரும்பவும் விளைச்சலுக்கு ஏற்றார் போல் உருவாக்க முடியுமா? மேலும் குழாய் பதிக்கும் இடத்திற்கு அருகில் மரம் வளர்க்க கூடாது வேர் சென்று குழாய் பாதிப்படைந்து விடும் என்கிறார்கள். 5 அடி ஆழத்தில் குழாய் பதிப்பதால் நிச்சயமாக நாங்கள் டிராக்டர் கொண்டு உழவு ஓட்ட முடியாது அப்படியே ஓட்டினால் குழாய் உடையும் பெட்ரோல் உள்ளிட்டவை வயலில் பாய்ந்து விளை நிலங்கள் பாதிப்படையும் அபாயம் ஏற்படும் அதனால் நாங்கள் குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம்” என்றார்.