Published:Updated:

கிசான் சம்மான் ஊழல்: `களவாடப்பட்டது 321 கோடி, கைப்பற்றப்பட்டது 162 கோடிதானா?'- கொதிக்கும் விவசாயிகள்

போலி பயனாளிகள் மற்றும் இந்த முறைகேட்டில் முக்கிய மூளையாக இருந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. பணி இடை நீக்கம் கூட செய்யவில்லை. இவர்களின் பட்டியலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டில் நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் விவசாயிகள் அல்லாத போலி பயனாளிகள் 6.97 லட்சம் பேர், முறைகேடாக இதில் பயனடைந்துள்ளார்கள். 321 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், 162 கோடி ரூபாய் மட்டுமே தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது. மீதித்தொகை எங்கே, ஏன் முழுமையாக மீட்கப்படவில்லை, முறைகேட்டில் ஈடுபட்ட போலி பயனாளிகள் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மீது ஏன் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

விவசாய நிலம்
விவசாய நிலம்

மத்திய அரசு 2019-ம் ஆண்டு விவசாயிகளின் நலன் கருதி, பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற பெயரில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி, விவசாயிகள் வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6,000 செலுத்தப்பட்டது. இந்நிலையில்தான் விவசாயிகள் அல்லாத பலர் இத்திட்டத்தில் முறைகேடாகப் பயன் அடைவதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் கிளம்பின. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இந்த முறைகேடு அதிக அளவில் நடைபெற்றுள்ளதாகத் தமிழக வேளாண்மைத்துறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது.

இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால், தமிழக காவல்துறையின் கீழ் இயங்கும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இ.சேவை மையம் நடத்துபவர்கள், புரோக்கர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் சிலர் கூட்டாக கைகோத்து, இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

விவசாயம்
விவசாயம்

இத்திட்டத்தில் பயன் அடைய, தமிழ்நாட்டில் 2018 மார்ச் முதல் 2019 மார்ச் வரை 27 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 வரை 6 லட்சம் பேரும், 2019 ஆகஸ்ட் முதல் 2019 நவம்பர் வரை ஒரு லட்சம் பேரும் பதிவு செய்துள்ளனர். 2019 டிசம்பர் - 2020 மார்ச் வரை 3 லட்சம் பதிவு செய்திருக்கிறார்கள். ஏப்ரல் 2020 - ஜூலை 2020 வரை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சம். இந்த 4 மாதத்தில்தான் போலியாக பலர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் என்ற போர்வையில் 6.97 லட்சம் பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.321,36,32,000 மீட்கப்பட வேண்டும் எனக் காவல்துறை மற்றும் வேளாண்மைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், 162. 54 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், ``இத்திட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. ஆனால், குறைவான தொகை மட்டுமே வெளியில் காட்டப்படுகிறது. இது மத்திய அரசின் திட்டம் என்பதாலும், தமிழக வேளாண்மைத்துறை அதிகாரிகள் சிலர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாலும், இதைத் தமிழக காவல்துறை விசாரிக்கக் கூடாது; சி.பி.ஐ விசாரணை செய்தால்தான் உண்மையான குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும் என நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். ஆனால் தமிழக அரசு கண் துடைப்புக்காக, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது.

சுவாமிமலை சுந்தர விமல்நாதன்
சுவாமிமலை சுந்தர விமல்நாதன்

போலி பயனாளிகள் மற்றும் இந்த முறைகேட்டில் முக்கிய மூளையாக இருந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. பணி இடை நீக்கம் கூட செய்யவில்லை. இவர்கள் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இவர்களின் பட்டியலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். முறைகேடு செய்யப்பட்ட பணத்தை வசூலிக்கத் தவறிய வேளாண் அதிகாரிகளின் பட்டியலையும் வெளியிட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சி.பி,ஐ விசாரணை மிகவும் அவசியம். ஆனால், மத்திய அரசு இதில் ஏனோ மவுனம் சாதிக்கிறது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, விவசாயிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்'’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு