Published:Updated:

``வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு வரி தவிர்க்கப்படும்!’’ - நிர்மலா சீதாராமன் சொல்வது உண்மையா?

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் ( படம்: விகடன் / பெ.ராகேஷ் )

``விவசாய விளைபொருள்களை மாநிலங்களுக்குள் விற்பனை செய்யும்போது 8.5 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். புதிய வேளாண் சட்டத்தின் பலனாக இனி அந்த வரி கிடையாது" என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இது எந்தளவுக்கு விவசாயிகளுக்கு நன்மை செய்யும்?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் அண்மையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் நலன் கருதியே இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அவர் பேசுகையில், ``விவசாய விளைபொருள்களை மாநிலங்களுக்குள் விற்பனை செய்யும்போது 8.5 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். புதிய வேளாண் சட்டத்தின் பலனாக, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வெளிமாநிலங்களுக்கு விளைபொருள்களை விற்பனை செய்ய, இனி வரி கிடையாது. இதனால் விவசாயிகள் பலன் அடைவார்கள்" எனத் தெரிவித்திருந்தார். இது எந்தளவுக்கு விவசாயிகளுக்கு நன்மை செய்யும்? என வேளாண் பொருளியல் ஆய்வாளரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளருமான கி.வெங்கட்ராமனிடம் கருத்து கேட்டோம்.

Farmer
Farmer
AP Photo / Rajesh Kumar Singh

வேளாண் சட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்த மேலும் பல கருத்துகள் குறித்தும் நம்மிடம் விரிவாகப் பேசிய கி.வெங்கட்ராமன், ``விளைபொருள்களை அந்தந்த மாநிலங்களுக்குள் விற்பனை செய்ய சில கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் அதற்காக விவசாயிகள் 8.5 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அந்தந்த மாநிலங்களில் சந்தைகள் இருந்தாலும், இனி டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்ய முடியும். இதற்கு எந்த வரியும் கிடையாது என்கிறார் நிர்மலா சீதாராமன். இதனால், விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடையாது. சிறு வியாபாரிகளும் கூட, டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பயன்படுத்தி, வெளிமாநிலங்களில் விளைபொருள்களை விற்பனை செய்வதென்பது இயலாத காரியம். கார்ப்பரேட் கம்பெனிகள்தான், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயன் அடையும். சிறு வியாபாரிகள் ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே விவசாயிகல் நம்பியிருக்க வேண்டிய சூழல் உருவாகும். ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு ஆசைகாட்ட, ஓரளவுக்கு கூடுதல் விலை கொடுத்து, விவசாயிகளின் விளைபொருள்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும். அதன் பிறகு, தங்களது வேலையைக் காட்டிவிடுவார்கள்.

விவசாயிகள் இயல்பாகவே கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் செல்லக்கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளது. அரசு வங்கிகள் படிபடியாகத் தனியார் மயமாவதால் விவசாயக் கடன்கள் வழங்கப்படுவதில்லை. கூட்டுறவு வங்கிகளோ, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டன. விவசாயிகள் இனி விவசாயம் தொடர்பான கடன்கள் பெறுவதென்பது இயலாத காரியம். இந்நிலையில், விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகும். அவர்களிடம் விவசாயிகள் அடிமையாகக் கூடிய அவலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

கி. வெங்கட்ராமன்
கி. வெங்கட்ராமன்

நெல், கோதுமை உள்ளிட்ட 25 பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும்கூட, பெரும்பாலான பொருள்களுக்கு அது கிடைக்காமலே இருந்ததாகவும் இனி பட்டியலில் உள்ள அனைத்து விளைபொருள்களுக்கும் இது வழங்கப்படும் என நிர்மலா சீதாரமன் சொல்கிறார். இது ஏமாற்று பேச்சு. நெல், கோதுமை போலவே மற்ற விளைபொருள்களையும் அரசாங்கம் கொள்முதல் செய்தால்தான், அந்தந்தப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்படும். மத்திய அரசு கண்டிப்பாக இதைச் செய்யாது. புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தின் மூலம் இனிவரும் காலங்களில், நெல், கோதுமை ஆகியவற்றையே அரசு கொள்முதல் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் தனது பேச்சின்போது, ``இது சீர்திருத்த முயற்சி. பலவிதமான விளைபொருள்களை விவசாயிகள் உற்பத்தி செய்கிறார்கள். தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ளலாம். எந்த விலையில் யாருக்கு விற்பனை செய்வது என்பதை விவசாயிகளே முடிவு செய்துகொள்ளலாம். வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்ற தேவையற்ற அச்சம் நிலவுகிறது. விவசாய உற்பத்திக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

Indian farmers raise their shawls and shout anti-government slogans during a protest against farm bills in Bengaluru, India
Indian farmers raise their shawls and shout anti-government slogans during a protest against farm bills in Bengaluru, India
AP Photo/Aijaz Rahi

பயிர் மீதான உரிமை மட்டுமே ஒப்பந்தம் போடும் நிறுவனத்துக்கு தரப்படுகிறது. நிலத்தின் மீது எந்த உரிமையையும் ஒப்பந்த நிறுவனத்தினர் கேடக மாட்டார்கள்’’ எனத் தெரிவித்திருந்தார். இது குறித்துப் பேசும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், `விளைபொருள்களை எங்கு வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ளலாம் என்பது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுதான். பயிரின் மீதான உரிமை மட்டுமே ஒப்பந்தம் போடும் நிறுனத்துக்கு தரப்படும் என்பதே மிகவும் ஆபத்தானது. பயிர் உரிமை கைவிட்டுப் போனாலே, படிபடியாக விவசாயிகள் தங்களது நிலத்தின் மீதான உரிமையை இழக்க நேரிடும் எனக் கவலை தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு