Published:Updated:

இறக்குமதி கிராம்புக்கு வரிக் குறைப்பு... வீழ்ந்த குமரி கிராம்பு விலை... விவசாயிகள் வேதனை!

கன்னியாகுமரி மலைத்தோட்ட கிராம்பு
கன்னியாகுமரி மலைத்தோட்ட கிராம்பு

வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் கிராம்பு இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. பின்னர், அவை இந்தியாவில் விளைந்த கிராம்பு எனக் கூறப்பட்டு பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைத் தோட்டங்களில் கிராம்பு அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. தடிக்காரன்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான மாறாமலை, பாலமோர், கரும்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவில் கிராம்பு பயிரிடப்பட்டுள்ளது. இப்போது கிராம்பு விளைந்து, அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சமையலுக்கும் எண்ணெய் தயாரிப்பதற்கும் கிராம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கன்னியாகுமரி மாவட்ட மலைத்தோட்டங்களில் ஆண்டுக்கு 1,000 டன் வரை கிராம்பு உற்பத்தியாகிறது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கிராம்பு அறுவடை நடைபெற்று வருகிறது.

கிராம்பு மரங்களைப் பராமரிக்கவும் அறுவடைக்காகவும் புதுக்கோட்டை, மதுரை, தேனி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கிராம்பு தோட்டங்களில் தங்கியிருந்து அறுவடை பணிகளைச் செய்து வருகிறார்கள். இங்கு அறுவடை செய்யப்பட்ட கிராம்புகள் உலரவைக்கப்பட்டு பின்னர்  விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

அறுவடை செய்யப்பட்ட கிராம்புகளை எடுத்துச் செல்லும் தொழிலாளர்கள்
அறுவடை செய்யப்பட்ட கிராம்புகளை எடுத்துச் செல்லும் தொழிலாளர்கள்

கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய பங்காற்றியது கிராம்பு. இந்த நிலையில் கன்னியாகுமரி மலைத் தோட்டங்களில் அறுவடை செய்யப்படும் கிராம்புகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிரிடப்படும் கிராம்பு உலகத்தரம் வாய்ந்தது. குமரி கிராம்புக்கு சர்வதேச சந்தையில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், தற்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிராம்புக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

இதனால் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் கிராம்பு இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. பின்னர் அவை இந்தியாவில் விளைந்த கிராம்பு எனக் கூறப்பட்டு பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவில் விளையும் கிராம்புகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு கிலோ 900 ரூபாய் விற்ற கிராம்பு, இந்த ஆண்டு 500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிரிடப்படும் கிராம்புகளை நேரடியாக அரசே கொள்முதல் செய்து உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிராம்புக்கு வரி விதிக்க வேண்டும்'' என்றனர்.

கிராம்பு மரங்கள்
கிராம்பு மரங்கள்

கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் சிம்சன் கூறுகையில், "கிராம்பு விவசாயிகளைப் பாதுகாக்க அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம்புக்கு சரியான விலை நிர்ணயம் செய்து நேரடியாகக் கொள்முதல் செய்து மானியம் வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் கிராம்பு இறக்குமதி ஆவதைக் கட்டுப்படுத்தி அதற்கு வரி விதித்தால் மட்டுமே இந்திய நாட்டின் கிராம்பு உற்பத்தியாளர்கள் இந்த பிரச்னைகளிலிருந்து மீள முடியும். கிராம்பு விலை குறைவால் நேரடியாகவும் மறைமுகமாகவும்  சுமார் 20,000 மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு