Published:Updated:

`நெல் போலவே காய்கறிகளையும் அரசே கொள்முதல் செய்யணும்!' - இந்த ஆண்டும் தொடரும் கோரிக்கை

``விவசாயிகளால் மக்களிடம் நேரடியாக விற்பனை செய்ய முடியவில்லை. விவசாயிகள் பெயரில் வியாபாரிகளே விற்பனை செய்கிறார்கள்” என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகப் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் தொற்று கட்டுக்குள் வராததால் கடந்த மே 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தளர்வுகளில்லா முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. மீண்டும் வரும் 7-ம் தேதி வரை தளர்வுகளில்லா முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள் விற்பனை
காய்கறிகள் விற்பனை

தளர்வுகளில்லா முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டவுடன் விவசாயிகள் தங்களது விளை பொருள்களான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்திட மிகுந்த சிரமப்பட்டனர். `விவசாயிகள் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையினர் மூலம் அனுமதி பெற்று தங்களது விளைபொருள்களை வாகனங்கள் மூலம் பொது மக்களிடம் நேரடியாகவே விற்பனை செய்யலாம்’ என அரசு அறிவித்துள்ளது. ஆனால், `வேளாண்மைத்துறை அதிகாரிகள் அனுமதித்தாலும் போலீஸார் விளைபொருளை விற்பனை செய்ய அனுமதிப்பதில்லை’ என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜாவிடம் பேசினோம், ``மே 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையிலான ஊரடங்கு நாட்களில் நண்பகல் 12 மணி வரை, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தால் அந்தந்தப் பகுதிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சந்தையைப் போலவே காய்கறிகள் விற்பனை நடந்துட்டு வந்துச்சு. அந்த நாள்கள்ல எங்களோட விளைபொருளை விற்பனை செய்ய எந்த வில்லங்கமும் இல்லாமல் இருந்துச்சு. அந்தச் சந்தையில ஒரு வியாபாரியிடம் இல்லேன்னாலும், இன்னொரு வியாபாரிக்கிட்ட விற்பனை செஞ்சோம்.

காய்கறிகள் விற்பனை
காய்கறிகள் விற்பனை

அடுத்த மாவட்டத்துக்கும் விளைபொருளை விற்பனை செய்ய எந்தத் தடையும் இல்லாம எடுத்துட்டுப் போனோம். ஆனா, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள்கள்ல விளைபொருளை விற்பனை செய்ய முடியாம ரொம்ப சிரமப்பட்டோம். காய்கறிகள், பழங்களைப் பறிச்சாலும் விற்பனை செய்ய முடியலை. பறிப்புக்கூலிகூட கிடைக்க மாட்டேங்குது. விவசாயிகளே விளைபொருளை பொதுமக்களிடம்ட விற்பனை செய்யலாம்னு அரசு சொல்லிருக்கு. வாகன வசதி இருக்குற விவசாயிங்க விளைபொருளைப் பறிச்சு விற்பனைக்காக கொண்டுட்டுப் போவாங்க. அன்னைக்குப் பறிச்சு அன்னைக்கே வித்தாதான் காசுன்னு இருக்குற விவசாயிகள் என்ன செய்யுவாங்க?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அங்க... இங்க...ன்னு கடனை வாங்கி வண்டி வாடகைக்குப் பிடிச்சு காய்கறிகளை விற்பனை செய்யலான்னு பார்த்தா அனுமதி வாங்குறது பெரிய விஷயமா இருக்கு. விவசாயிகள்ங்குற போர்வையில இருக்குற இடைத்தரகர்கள், வியாபாரிகளுக்குதான் அதிகாரிகள் முதல்ல அனுமதி கொடுக்குறாங்க. கிடைச்சது போதும்னு சில விவசாயிங்க, வியாபாரிகள்ட்டயே வித்துடுறாங்க. `உங்களுக்குத் தேவையான காய்கறிகள் உங்க வீடு தேடி வரும்’னு அரசு தரப்புல அறிவிச்சு விளம்பரப்படுத்துறாங்க. ஆனா, பல பகுதிகள்ல மக்களுக்கு காய்கறிகள் கிடைக்கல. அப்படிக் கிடைச்சாலும் காய்கறிகளை வியாபாரிகள், மூணு மடங்கு நாலு மடங்கு விலை சொல்லி விற்கிறாங்க.

காய்கறிகள் விற்பனை
காய்கறிகள் விற்பனை

விவசாயிகள் விளைபொருளை விற்பனை செய்யுறோம்னு அரசு சொல்லுறதெல்லாம் எங்களுக்கு திருப்தி இல்ல. இந்த மாதிரி சூழ்நிலையில, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் நேரடியா நெல் கொள்முதல் செய்யுறதைப்போல, காய்கறிகளையும் அரசே நேரடியாக் கொள்முதல் செய்யணும். இதே கோரிக்கையை வலியுறுத்தி போன வருச ஊரடங்குலயே சில விவசாய அமைப்புகள், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விவசாய விளை பொருள்களை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனுத்தாக்கல் செஞ்சாங்க. அந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை அரசே நேரடியாக் கொள்முதல் செய்யணும்னு உத்தரவிட்டு, மாநில அரசின் பதிலைக் கேட்டது.

இந்த வருச ஊரடங்கு வரைக்கும் அதே நிலைமையிலதான் இருக்கு. இந்த மாதிரி சூழ்நிலையில விவசாயிகள் கண்ணீரைத் துடைக்க வேண்டிய அரசே, கண்ணீர் சிந்தக் காரணமா இருக்கலாமா? தற்போது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்துலயாவது விவசாயிகளுக்கு அரசு உதவணும்” என்றார்.

இதுகுறித்து வேளாண் விற்பனைத்துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம், ``ஊரடங்கு நாள்களில் பொது மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக, விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை பொதுமக்களிடம் அவர்களே நேரடியாக விற்பனை செய்யும் வகையில் மாவட்டம் வாரியாகத் தோட்டக்கலைத்துறை, வேளாண்விற்பனைத்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளோம்.

காய்கறி விற்பனை
காய்கறி விற்பனை

அந்த எண்ணை, விவசாயிகள் தொடர்பு கொண்டுப் பேசினால், விவசாயிகளின் விளைபொருளை சந்தைப்படுத்திட தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கிறோம். விவசாயிகள் தாங்களாகவே வாகனம் மூலம் விற்பனை செய்ய விரும்பினால், அதற்கான அனுமதியையும் வழங்கி வருகிறோம். முறையாக அனுமதி பெற்ற வாகனங்களை செல்ல விடாமல் அதிகாரிகளோ, போலீஸாரோ தடுப்பதில்லை. அப்படி ஏதும் நிகழ்ந்தால் வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். விளைபொருளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம்” என்றனர். இதுபோன்ற சூழலில் விவசாயிகளுக்கு முழு மூச்சாக உதவுவதும் அரசின் கடமையாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு