Published:Updated:

``எங்களை அவமதித்தவரையே உறுப்பினராக நியமிப்பதா?" - மாவட்ட கண்காணிப்பு குழுவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையம்
நேரடி நெல் கொள்முதல் நிலையம்

நெல் கொள்முதல் நிலைய விவகாரத்தில் விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்டவரைக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக்கி திருடன் கையிலேயே சாவியைக் கொடுத்தது போல் செய்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விவசாயிகள் சாகுபடி செய்த நெல் மூட்டைகளுக்கு இடைத்தரகர்களின்றி உரிய லாபம் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 99 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு முதல் கொள்முதல் வரையிலும் நெல் கொள்முதல் நிலையத்தைக் கண்காணிக்கும் வகையில், குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் தலைவராக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஒருங்கிணைப்பாளராகவும், வேளாண்மை இணை இயக்குநர், தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர், 2 முன்னோடி விவசாயிகள் என மொத்தம் 6 பேர் இக்குழுவில் உள்ளனர்.

கண்காணிப்புக் குழு அரசாணை
கண்காணிப்புக் குழு அரசாணை
நெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..!'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ

இக்குழுவானது அறுவடை சமயங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அவ்வப்போது ஆய்வு செய்வதுடன் மாதம் ஒருமுறை ஆய்வுக் கூட்டம் நடத்தி அதன் நடவடிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இக்குழுவில் முன்னோடி விவசாயிகளாக கந்தர்வக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுபற்றி விவசாயிகளிடம் கேட்டபோது, ``பரமசிவம் வெள்ளாளவிடுதி நெல் கொள்முதல் நிலையம் தன் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக மனு போட்டுத் திறக்கவிடாமல் தடுத்தார். கிட்டத்தட்ட 30 நாள்களுக்கும் மேலாக அங்கு நெல் கொள்முதல் நடக்கவில்லை. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதற்கிடையே, விவசாயிகளுக்கு ஆதரவாக அவரிடம் பேசிய கறம்பக்குடி கம்யூனிஸ்ட் கந்தர்வக்கோட்டை ஒன்றிய செயலாளர் அரசப்பனை தகாத வார்த்தைகளில் பேசி செருப்பால் அடிக்க முயன்றார். இப்படி விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்டவரைக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக்கி திருடன் கையிலேயே சாவியைக் கொடுத்தது போல் செய்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். பரமசிவத்தை உறுப்பினராக்கி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஆட்சிக் காலங்களில் அதிமுக பிரமுகர் ஒருவர் முன்னோடி விவசாயியாக அறிவிக்கப்பட்டாலும், மற்றொருவர் விவசாயியாக இருப்பார்கள். மாவட்டத்தில் முன்னோடி விவசாயிகள் ஏராளமானோர் இருந்தும் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி திமுக ஒன்றிய செயலாளர்களைத் தேர்வு செய்து முன்னோடி விவசாய உறுப்பினர்களாக்கியுள்ளனர். ஒரு தலைப்பட்சமாக அறிவிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவைக் கலைத்துவிட்டு புதிய குழுவை உருவாக்க வேண்டும்" என்றனர்.

முதல்வருக்கு விவசாயிகள் எழுதியுள்ள கடிதம்
முதல்வருக்கு விவசாயிகள் எழுதியுள்ள கடிதம்
நெல் கொள்முதல் லஞ்சம்: அடுத்தடுத்து பிடிபடும் அதிகாரிகள்; துணிச்சலோடு அம்பலப்படுத்தும் விவசாயிகள்!

இந்நிலையில் கல்லணைக் கால்வாய் கடைமடைப் பகுதி பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், ``கல்லணைக் கால்வாய் கடைமடைப் பகுதிகளிலேயே அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல், ஆவுடையார் கோவில், மணமேல்குடி, அறந்தாங்கி, திருவரங்குளம் பகுதிகளிலும் அதிகளவு நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனாலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்கும் கண்காணிப்புக் குழுவில் இங்குள்ள விவசாயிகள் யாரும் உறுப்பினர்களாக நியமிக்கப்படவில்லை. தமிழக முதல்வர் இதனை மறு ஆய்வு செய்து புறக்கணிக்கப்பட்ட இப்பகுதி விவசாயிகளையும் இணைக்க ஆவண செய்ய வேண்டும்" என்று கடிதம் அனுப்பியுள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தினரிடம் இதுபற்றி கேட்டபோது, ``விவசாயிகள் என்ற அடிப்படையில்தான் முன்னோடி விவசாயிகளாகக் கண்காணிப்புக் குழுவில் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு