Published:Updated:

நாகையில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை: இது நியாயமா முதல்வரே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை (Representational Image)
பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை (Representational Image)

``பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் 2020-ல், தடைசெய்யப்பட்ட பட்டியலில் பெட்ரோகெமிக்கல் தொழில்கள் இல்லைதான். ஆனால், ஹைட்ரோ கார்பன் எடுப்பது தடை என்பதற்கு, அதோடு சேர்ந்த சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம், பெட்ரோ கெமிக்கல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்றவையும் தடை என்பதே பொருள்."

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ-கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அடங்கிய தொகுப்பை உருவாக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய 50 லட்சம் ரூபாயை தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இது விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்களை இமை காப்பது போல், விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாப்பேன் என்று சொன்ன தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என தரப்பினரும் வலியுறுத்துகிறார்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக, மத்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி எண்ணெய்-எரிவாயு எடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பல விதங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில்தான் மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் என மிகவும் ஆபத்தான திட்டங்களை இங்கு செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

 ஹைட்ரோ கார்பன் குழாய்
ஹைட்ரோ கார்பன் குழாய்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? - நம்பிக்கை அளிக்கும் ஆய்வுக்குழு!

இதனால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் என இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தியதன் விளைவாக, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.

இனிமேல் கவலை இல்லை என இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தார்கள். குறிப்பாக, தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற எண்ணம் நிலவியது. ஆனால். இந்த நம்பிக்கையை நிலைகுலைய வைக்கும் விதமாக, தற்போது டெல்டா பகுதியில் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை தி.மு.க அரசு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனிடம் நாம் பேசியபோது, ``பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் பெட்ரோகெமிக்கல் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளுவது என்பது வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரானது. அச்சட்டத்தை செயலிழக்கச் செய்யக்கூடிய முயற்சியாகும். தமிழக அரசு வேளாண்மையைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டுமேயொழிய, தமிழ்நாட்டின் உணவு உறுதிப்பாட்டைக் குலைத்துவிடக் கூடாது. காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோகெமிக்கல் தொழில்களைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெட்ரோலிய கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய தொகுப்பு உருவாக்குவதற்கான, விரிவான திட்ட அறிக்கைத் தயாரிப்பு முயற்சியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

பேராசிரியர் ஜெயராமன்
பேராசிரியர் ஜெயராமன்

நாகப்பட்டினம் பனங்குடியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) எனப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆண்டுதோறும் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெயை சுத்திகரிப்பு செய்து வந்துள்ளது. இதிலேயே அப்பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டது. இந்நிலையில், அதை மேலும் விரிவாக்கம் செய்து ஆண்டுதோறும் 9 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் அளவுக்கு திறன் உயர்த்தும் பணிகள் தொடங்கிவிட்டன. இதற்காக 600 ஏக்கருக்கும் மேலான நிலம் கையகப்படுத்துவதற்கான உரிமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் திறன் உயர்த்த ரூ.35,000 கோடியில் வேலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. 48 மாதங்களில் இப்பணி முடியும். இது குறித்து, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தன்னுடைய கடும் கண்டனங்களை ஏற்கெனவே பதிவு செய்தது. அரசுக்கும் இது குறித்த பாதிப்புகளை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பியுள்ளது. இந்த சி.பி.சி.எல் ஆலையின் விரிவாக்கப் பணிகள் முடிவடையும் நேரத்தில், ஆலையைச் சுற்றி பெட்ரோலிய கெமிக்கல் நிறுவனங்களின் தொகுப்பு இருந்தால், சுத்திகரிப்பு ஆலைகளின் துணை அலகுகளாகப் பல சிறு, குறு நிறுவனங்கள் அமையும் என்று இப்போது வெளியிடப்பட்டுள்ள ஏல அறிவிப்பு ஆவணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அர்த்தம், இப்பகுதியை பெட்ரோலிய ரசாயன மண்டலம் ஆக்கிவிடுவது என்பதுதான்.

பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை
பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை

இப்பகுதி, நாகை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வேளாண் மண்டலப் பகுதிக்குள் அமைந்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 20.2.2020 அன்று, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்தின் முன்வரைவு சட்டமன்றத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டபோது, பிரிவு 4 உட்பிரிவு 2(b) இன் கீழ், `உட்கட்டமைப்பு திட்டங்களான துறைமுகம், குழாய்கள், சாலை, தொலைத்தொடர்பு, எரிசக்தி, குடிநீர் வழங்கல் மற்றும் இதர பயன்பாட்டுக்கான திட்டங்களை (other utilities) இச்சட்டம் கட்டுப்படுத்தாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. `இதில் other utilities என்பதில் பெட்ரோல், காஸ் ஆகியவை வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்' என்று அப்போது தி.மு.க கேள்வி எழுப்பியது. அன்று சட்டமன்ற உறுப்பினராக அவையில் இருந்த, இன்றைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் அங்கு வருவதை எந்த வகையில் இந்தச் சட்டம் தடுக்கவிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். இது விவசாயிகளுக்கும் வேளாண்மையைப் பாதுகாக்க விரும்பும் செயல்பாட்டாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இதுபோன்ற பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வருவதை தி.மு.க விரும்பவில்லை எனத் தமிழ்நாடு மக்கள் அனைவருமே நம்பினார்கள்.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போது முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்கிறார்கள். காவிரி டெல்டா மண்டலத்துக்கு உட்பட்ட நாகப்பட்டினம் மண்டலத்தில் பெட்ரோகெமிக்கல் மண்டலத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கையைப் பெறுவதற்காக, 50 லட்ச ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கையை எம்.எஸ்.எம். டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் புரொமோஷன் பீரோ (MSM Trade and Investment Promotion Bureau) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இது அதிர்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் 2020-ல், தடைசெய்யப்பட்ட பட்டியலில் பெட்ரோகெமிக்கல் தொழில்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால், ஹைட்ரோ கார்பன்கள் எடுப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதன் பொருள், அதோடு சேர்ந்த சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம், பெட்ரோ கெமிக்கல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்றவையும் தடை செய்யப்பட்டவை என்பதே அதன் உண்மைப் பொருள் ஆகும்.

ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன்
`மீண்டும் வழங்கப்படும் கணினி சிட்டா; கூடவே இதையும் செய்யுங்கள்!' - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

தமிழ்நாடு வேளாண் மண்டல பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாட்டு சட்டப்பிரிவு 22 (2) -ல், இரண்டாவது அட்டவணையில் உள்ள தொழிற்சாலைகளை நீக்கவோ அல்லது சேர்க்கவோ வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவைப் பயன்படுத்தி, அச்சட்டத்தை மேலும் வலுவுள்ளதாகச் செய்ய வேண்டும். தடைசெய்யப்பட்ட தொழில்களில் மேலும் பலவற்றை சேர்க்க வேண்டியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பரப்பு முழுவதுமாக சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், அபாயகரமான தொழில்களை அனுமதிக்க தமிழக அரசு முடிவெடுக்கக் கூடாது. கண்ணின் இமைகள் காப்பதுபோல வேளாண்மையையும், விவசாயிகளும் காப்போம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உறுதியளித்திருக்கிறார். அது மிகுந்த பாராட்டுக்குள்ளானது.

இந்நிலையில், இத்தகைய வேளாண் மண்டலத்தைப் பாதிக்கும் திட்டங்களைக் கொண்டு வருவது ஒட்டுமொத்தப் படுகை மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய தவறுகளைச் செய்யாமல் தவிர்ப்பது இன்றைய அரசுக்கு நற்பெயரை அளிக்கும். வேளாண் மண்டலப் பகுதிக்கு பெட்ரோகெமிக்கல் தொழில் நிறுவனங்களை உருவாக்கும் இத்தகைய முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் 2020-ன் வரம்புக்குள் காவிரிப்படுகை முழுவதையும் கொண்டு வர வேண்டும். காவிரிப்படுகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பழைய எண்ணெய் எரிவாயுத் திட்டங்களையும் நிறுத்த வேண்டும். நாகப்பட்டினம் பனங்குடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் (CPCL) திறன் உயர்த்தும் பணி கைவிடப்பட வேண்டும்’’ என வலியுறுத்துகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு