Published:Updated:

`வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!' - விவசாயிகளின் வேண்டுகோள்

நீண்ட கால இடைவளிக்குப் பின் அக்டோபர் 2-ம் தேதி சமுக இடைவெளியுடன், பல்வேறு கட்டுப்பாடுகளுடன், தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்களை நடத்துவதற்கு தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் மின்திருத்தச்சட்டங்களுக்கு எதிராக, மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றிட முதல்வர் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் கூறியுள்ளார்.

சுந்தர விமலநாதன்
சுந்தர விமலநாதன்

இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இந்தியாவில் உள்ள அனைத்து உழவர்கள், உழவர் உழைப்பாளர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரங்களை அழித்தொழிக்கும், உழவர் நலனிற்கு பேரழிவுகளை ஏற்படுத்தி, உழவர்களைப் பெருநிறுவன முதலாளிகளுக்கு நிரந்தர அடிமைகளாக்கும் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் முற்றிலுமாக விலக்கிக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து உழவர்களின் விருப்பத்தினை, உணர்வினை வெளிப்படுத்தும் விதமாகத் தமிழக சட்டப் பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ள முதல்வருக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு, மேலும் சிலவற்றை அவரின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம்: விவசாயிகளிடம் 'ஸ்கோர்' செய்த கட்சிகள் எவை?

3 வேளாண் கறுப்புச் சட்டங்களை, பெருந்தொற்று காலத்தில் ஒன்றிய அரசு, உழவர் நலனிற்கெதிராக, பெருநிறுவனங்களின் நலனிற்கு ஆதரவாக கொண்டு வந்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், அதைத் துணிச்சலுடன் எதிர்த்து, தமிழகத்தில் அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும், கட்சி சார்பாக நடத்திய கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியதை நாங்கள் மறக்கவில்லை!

இந்நிலையில் சென்ற ஆண்டிலிருந்து கொரோனா தாக்குதலால், ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டங்கள் மாநிலம் முழுவதும் நடைபெறாத நிலை ஏற்பட்டது. இதனால், மேற்கண்ட 3 வேளாண் கறுப்புச் சட்டங்களுக்கெதிராக கிராம ஊராட்சிகளில் உள்ள உழவர்கள், தங்களது உணர்வுகளை, உலகிற்கும், ஒன்றிய அரசிற்கும் உணர வைத்திட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

நீண்ட கால இடைவளிக்குப் பின் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளில், சமுக இடைவெளியுடன், பல்வேறு கட்டுப்பாடுகளுடன், தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்களை நடத்துவதற்கு தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

கிராம சபை கூட்டம் [கோப்பு படம்]
கிராம சபை கூட்டம் [கோப்பு படம்]
பயிர்க்கடன் தள்ளுபடி, பாடத்தில் நம்மாழ்வார் கருத்துகள்; முதல்வருடனான சந்திப்பில் விவசாயிகள் கோரிக்கை

தமிழக சட்டப் பேரவையில் மூன்று வேளாண் சட்டங்களுக்கெதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது போன்றே, வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி கிராமசபைக் கூட்டங்களில், தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து சிற்றூராட்சிகளிலும், இந்திய அரசு 2020-ல் கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்கள் மற்றும் 2020-ல் கொண்டு வர முயற்சித்து நிலுவையில் உள்ள புதிய மின் சட்டம் 2020-க்கும் எதிராக, கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றிட முதல்வர் ஆணை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். வேளாண் சட்டங்களை எதிர்க்கின்ற அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்மாதிரி மாநிலம் என்பதை இந்திய அரசிற்குப் புரிய வைப்போம். பிறமாநில முதல்வர்களும், காந்திப் பிறந்த நாளில் அம்மாநிலங்களில் நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு