Published:Updated:

வெற்றிலை சாகுபடிக்கு புது சிக்கல்; 5 மடங்கு உயர்ந்த அகத்தி, செம்பை விதைகள்; என்ன பிரச்னை?

வெற்றிலை விவசாயம்
வெற்றிலை விவசாயம் ( நா.ராஜமுருகன் )

``வெற்றிலை சாகுபடியைப் பொறுத்தவரை, அகத்தியும் செம்பையும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. வெற்றிலைக் கொடியை ஏற்றி படர விடுவதற்கு, கொடிக்கால்களாக அகத்தி, செம்பை விதைகளை விதைப்பு செய்து குறு மரங்களாகப் பயன்படுத்துகிறார்கள்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வெற்றிலைக் கொடிகளை ஏற்றி விட அகத்தி, செம்பை குறுமரங்கள் பல வகைகளிலும் உறுதுணையாக இருப்பதால், வெற்றிலை விவசாயிகள், இவற்றை கொடிக்கால்களுக்காக விதைப்பு செய்வது வழக்கம். இந்நிலையில் தற்போது இந்த விதைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு இவற்றின் விலை உயர்ந்துள்ளதால், வெற்றிலை விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள். குறிப்பாக, வெற்றிலை சாகுபடிக்குப் புகழ்பெற்ற தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள், கொடிக்கால் விதைப்புக்கு செய்வதறியாது நிற்கின்றனர்.

வெற்றிலை
வெற்றிலை
`அணை நிரம்பி வழிஞ்சும் பாசனத்திற்கு வழியில்லையே!' - ஆதங்கத்தில் கீழ்பவானி விவசாயிகள்; காரணம் என்ன?

தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் ஐந்து கிளை ஆறுகள் ஓடக்கூடிய திருவையாறு மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களான கீழத்திருப்பந்துருத்தி, மேலத்திருப்பந்துருத்தி, கண்டியூர், திருவளாம்பொழில், நடுக்காவேரி, கருப்பூர், மணத்திடல், ஆச்சனூர், பொன்னாவரை, மைக்கேல்பட்டி உள்ளிட்ட இன்னும் பல கிரமங்களில் வெற்றிலை சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை இந்திய அளவில் புகழ்மிக்கது. மாதத்துக்கு 2 - 3 கோடி ரூபாய் அளவுக்கு இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வெற்றிலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதி விவசாயிகள் வெற்றிலைக் கொடியை ஏற்றி படர விடுவதற்கு, கொடிக்கால்களாக அகத்தி மற்றும் செம்பை விதைகளை விதைப்பு செய்து மரங்களாக வளர்த்தெடுத்து பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில்தான் தற்போது இந்த விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த வெற்றிலை விவசாயி சுகுமாறன், ``வெற்றிலை சாகுபடியைப் பொறுத்தவரை அகத்தியும் செம்பையும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. வெற்றிலை உற்பத்தி வெற்றிகரமாக நடைபெற இந்த ரெண்டும் முக்கியம். இந்தப் பகுதி விவசாயிகள் ஒவ்வொருவரும் 20 - 25 சென்ட் பரப்புல வெற்றிலை சாகுபடி செய்றது வழக்கம். மழைக்காலம் ஆரம்பிக்கறதுனால, இப்போ அகத்தி, செம்பை விதைகளை விதைப்பு செஞ்சு, 60 - 65 நாள்கள்ல, சுமார் மூணு அடி உயரத்துல அவை வளர்ந்த பிறகு, வெற்றிலைக் கொடியை ஊன்றுவோம். அது அகத்தி, செம்பை மரங்கள்ல படர்ந்து வளரும். கொடிக்கால்களுக்கு இந்த இரண்டும்தான் மிகவும் ஏற்றது. அதுமட்டுமல்லாமல், வெற்றிலைக் கொடிகள் செழிப்பாக வளர்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான சூழலை, இவைதான் கொடுக்கும்.

விவசாயி சுகுமாறன்
விவசாயி சுகுமாறன்

வெற்றிலைக் கொடிகளுக்கு நிரந்தரமான வெயிலும் இருக்கக் கூடாது, நிரந்தரமான நிழலும் இருக்கக் கூடாது. இதுக்கு கொடிக்கால்களாக இருக்கக்கூடிய, அகத்தியும் செம்பையும் காற்றில் அசைந்து ஆடி, வெற்றிலைக்கு ஏற்ற நிழலையும் வெயிலையும் மாறி மாறி கொடுத்துக்கிட்டே இருக்கும். முருங்கையையும்கூட கொடிக்கால்களாக வளர்க்குறது உண்டு. ஆனால், அது பெரிய மரங்களாக வளர்றதுனால, வெற்றிலையோட வளர்ச்சியை அது பாதிக்கும். மேலும், காற்று வேகமாக அடிச்சா, முருங்கை கீழ சாஞ்சிடும்.

ஆனால், அகத்தியும் செம்பையும் அப்படியல்ல. அவ்வளவு சீக்கிரத்துல கீழே சாஞ்சிடாது. இதுமாதிரியான காரணங்களாலதான், வெற்றிலைக் கொடிக்காலுக்கு அகத்தியையும் செம்பையையும் பயன்படுத்துறோம். எங்கப் பகுதி விவசாயிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மற்ற பகுதிகள்ல வெற்றிலை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளும் இதைதான் விதைப்பு செய்றாங்க. 20 சென்ட்ல வெற்றிலை சாகுபடிக்கு, கொடிக்கால்கள் அமைக்க, மூணு கிலோ அகத்தி விதையையும் மூணு கிலோ செம்பை விதையையும் கலந்து விதைப்பு செய்வோம். இந்த விதைகளை, ஒரு கிலோ 300 ரூபாய்ங்கற விலையில வாங்குறதான் வழக்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், இப்ப ஒரு கிலோ 1,500 ரூபாய்னு விற்பனை செய்யப்படுது. இது ரொம்பவே அநியாய விலையாகவே இருந்தாலும்கூட, வேறு வழி இல்லாததால, இதை வாங்க விவசாயிகள் தயாராகத்தான் இருக்கோம். ஆனாலும், அவ்வளவு எளிதா கிடைக்க மாட்டேங்குது. கடுமையான தட்டுப்பாடு நிலவுது. கடந்த ஆண்டு பெய்த பருவம் தவறிய மழையால், செம்பை விதைகளுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதேசமயம் இந்தத் தட்டுப்பாட்டை செயற்கையாக மேலும் பூதாகரப்படுத்தி, அகத்தி, செம்பை இந்த இரண்டு விதைகளையுமே வியாபாரிகள், பல மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்றாங்க. வெற்றிலை விவசாயிகளின் நலன் கருதி, அகத்தி, செம்பை விதைகள் எல்லா பகுதிகள்லயும் இயல்பாக, நியாயமான விலையில கிடைக்க, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுக்கணும்’’ என வலியுறுத்தினார்.

வெற்றிலை
வெற்றிலை
அடங்கல் சான்று வழங்க தாமதம்; `சம்பா நெல் சாகுபடிக்கு பயிர்க் கடன் கிடைக்குமா?' - விவசாயிகள் வேதனை

இதற்கு வேறு என்னதான் மாற்றுவழி என இவரிடம் கேள்வி எழுப்பியபோது, ``வெற்றிலைக் கொடிக்கால்களை பொறுத்தவரைக்கும் அகத்தி, செம்பையைத் தவிர வேறு எதுவும் ஒத்து வராது. இந்த விதைகளை விவசாயிகள் மூலமாக போதுமான அளவுக்கு உற்பத்தி பண்ண வச்சு, தோட்டக்கலைத்துறை கொள்முதல் செய்யணும். இதை மானிய விலையில் வெற்றிலை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யலாம். இந்த விதைகளை அதிக அளவுல பதுக்கி வச்சு, அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடிய தனியார் வியாபாரிகள் மேல சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்யணும்’’ என்றார்.

இப்பிரச்னை குறித்து தஞ்சை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கலைச்செல்வனிடம் பேசியபோது, ``உச்சபட்ச சீஸன்ல விலை அதிகரிக்குறது இயல்பானது. ஆனால், அதேசமயம் இந்த விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலை, தனியார் கடைகள்ல கிடைக்குது. குறிப்பாக மதுரை, தேனி மாவட்டங்கள்ல தாராளமாகக் கிடைக்குது‘’ என்றார். விவசாயிகளுக்குத் தேவையான விதை, இடுபொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் அனைத்துப் பகுதிகளிலும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க செய்வதும், அரசின் கடமை அல்லவா. சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் தங்களது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு