Published:Updated:

முடங்கிய இணையதள சர்வர்; சம்பா பயிர் இன்ஷூரன்ஸ் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்; உதவுமா அரசு?

``தமிழக அரசே, விவசாயிகளுக்காகக் காப்பீடு செலுத்தி, பயிர் இன்ஷூரன்ஸ் செய்திருந்தால் இந்த நெருக்கடியான சூழல் உருவாகியிருக்காது. இழப்பீடு கிடைக்கும்போது அந்தத் தொகையைப் பிடித்தம் செய்திருக்கலாம். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஒரு முறை அதுபோல் செய்யப்பட்டது." - சுகுமாறன்

சம்பா நெற்பயிர்களை இன்ஷூரன்ஸ் செய்வதற்கான இணையதளத்தில், கடந்த மூன்று நாள்களாக நிலவி வந்த சர்வர் முடக்கத்தால், ஏராளமான விவசாயிகள் தங்களது சம்பா நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியாத இக்கட்டான நிலை உருவானது. தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் உட்பட 26 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது சம்பா நெற்பயிர்களுக்கு நவம்பர் 15-ம் தேதிக்குள் ப்ரீமியம் செலுத்தி காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் காலக்கெடு விதித்தன.

ஆனால், தொடர் கனமழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்குள்ள அனைத்து விவசாயிகளாலும் முழுமையாகக் காப்பீடு செய்ய முடியாத நெருக்கடியான சூழல் உருவானது. இதனால் டிசம்பர் 15-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என டெல்டா விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள். ஆனால், இதை ஏற்க பயிர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மறுத்துவிட்டன. இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக இதற்கான இணையதளத்தில் சர்வர் முடங்கியதால், பயிர் இன்ஷூரன்ஸ் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்திருக்கிறார்கள்.

 நெற்பயிர்
நெற்பயிர்
சம்பா பயிர் காப்பீடு: `டிசம்பர் 15 வரை அவகாசம் வேண்டும்! - டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல்

தங்களது நெற்பயிர்களை காப்பீடு செய்தால்தான், இயற்கை சீற்றங்கள் மற்றும் பூச்சி, நோய்த்தாக்குதல்களால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இழப்பீடு பெற்று தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஓரளவுக்காவது ஈடு கட்ட முடியும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், இந்த ஆண்டு குறுவை நெற்பயிர்களுக்கு பயிர் இன்ஷூரன்ஸ் திட்டமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறுவை அறுவடை நேரத்தில் பெய்த கனமழையால், பல விவசாயிகள் மகசூல் இழப்பைச் சந்தித்தும்கூட அவர்களால் இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்பட்டது.

சம்பா, தாளடி நெற்பயிர்களுக்காவது இன்ஷூரன்ஸ் செய்து விடலாம் என விவசாயிகள் நினைத்திருந்த நேரத்தில் இதில் ஏராளமான இடர்ப்பாடுகள் ஏற்பட்டன. தொடர் கனமழையால் குறுவை அறுவடையில் காலதாமதம், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதிலும் பிரச்னை, இதற்கிடையே இந்துசமய அறநிலைத் துறைக்குச் சொந்தமான குத்தகை நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள் கணினி சிட்டா பெற முடியாத வகையில் ஒரு மாதத்துக்கும் மேலாக, இதற்கான இணையதளம் முடக்கி வைக்கப்பட்டது எனப் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருந்தன.

மேலும், கடந்த பத்து நாள்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையாலும் விவசாயிகள் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதனால் இங்குள்ள அனைத்து விவசாயிகளாலும் நவம்பர் 15-ம் தேதிக்குள் பயிர் இன்ஷூரன்ஸ் செய்ய இயலாது எனவும், டிசம்பர் 15-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தார்கள். தமிழக அரசு, இது தொடர்பாகப் பயிர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதியும்கூட காலநீட்டிப்பு செய்யப்படவில்லை. நவம்பர் 15 -ம் தேதிக்குள் ப்ரீமியம் செலுத்தி, விவசாயிகள் தங்களது நெற்பயிர்களை இன்ஷுரன்ஸ் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதால், கடந்த மூன்று நாள்களாக இதற்கான இணையதளத்தின் சர்வர் பெரும்பாலான நேரம் முடங்கியது.

சுகுமாறன்
சுகுமாறன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி சுகுமாறன், ``இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும்கூட, விவசாயிகளின் வயல்களுக்குத் தண்ணீர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு பல விவசாயிகள் மிகவும் தாமதமாகத்தான் குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டார்கள். இதனால் குறுவை நெல்லை அறுவடை செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது. கொள்முதல் நிலையங்களின் நிர்வாகச் சீர்கேடுகளாலும் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டார்கள். இதற்கிடையே தொடர் கனமழையாலும் சிரமம் ஏற்பட்டது. பயிர் இன்ஷூரன்ஸ் செய்ய, வி.ஏ.ஓ-விடம் சிட்டா அடங்கல் பெற வேண்டும் என்பது விதிமுறை.

நாற்று நடவு செய்யப்பட்டிருந்தால்தான் சிட்டா அடங்கல் பெற முடியும். கனமழை உள்ளிட்ட இன்னும் சில பிரச்னைகளால், நிறைய விவசாயிகள் நடவுப்பணிகளை மேற்கொள்ளவில்லை. நடவு செய்திருந்த விவசாயிகளுக்கும்கூட சிட்டா அடங்கல் கிடைப்பதில் பெரும் அலைக்கழிப்பு ஏற்பட்டது. ப்ரீமியம் செலுத்த காலநீட்டிப்பு கிடையாது என உறுதியானதால், கடந்த மூன்று நாள்களாக, 26 மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், ஆன்லைனில் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முயன்றதால், பெரும்பாலான நேரம் சர்வர் முடங்கியது.

`மீண்டும் வழங்கப்படும் கணினி சிட்டா; கூடவே இதையும் செய்யுங்கள்!' - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

இதனால் இ-சேவை மையங்கள் மூடப்பட்டன. தமிழக அரசே, விவசாயிகளுக்காகக் காப்பீடு செலுத்தி, பயிர் இன்ஷூரன்ஸ் செய்திருந்தால் இந்த நெருக்கடியான சூழல் உருவாகியிருக்காது. இழப்பீடு கிடைக்கும்போது அந்தத் தொகையைப் பிடித்தம் செய்திருக்கலாம். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஒரு முறை அதுபோல் செய்யப்பட்டது’’ எனத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் இதுகுறித்து பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன், ``இப்போதும்கூட காலம் கடந்துவிடவில்லை. மத்திய அரசு நினைத்தால், மீதமுள்ள விவசாயிகளும் பயிர் இன்ஷூரன்ஸ் செய்ய நடவடிக்கை எடுக்க முடியும். இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவங்களும் அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டதுதான். நவம்பர் 15-ம் தேதிக்குள் ப்ரீமியம் செலுத்தியே ஆக வேண்டும் தனது விதிமுறையில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பிடிவாதமாக இருப்பது கேலிக்கூத்தானது. விவசாயிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட விதிமுறைகளை இந்நிறுவனங்கள் இதுவரையிலும் ஒரு முறைகூட கடைப்பிடித்ததே இல்லை.

சுந்தர விமலநாதன்
சுந்தர விமலநாதன்

பயிர் அறுவடை சோதனை முடிந்து அடுத்த ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்து, அடுத்த நான்கு வாரத்துக்குள், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிவிட வேண்டும் என சட்டப்படியான விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாதங்கள் கடந்தாலும் இழப்பீடு வழங்குவதில்லை. விவசாயிகள் பல போராட்டங்களை நடத்திய பிறகும், நீதிமன்றம் சென்ற பிறகும்தான் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதிலும் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுகின்றன. எனவே, விதிமுறைகளைப் பற்றிப் பேச, பயிர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை. ஆனால், விவசாயிகளோ மிகவும் நியாயமான காரணங்களுக்காகத்தான், ப்ரீமியம் செலுத்த காலநீட்டிப்பு கேட்கிறோம். கண்டிப்பாக இதைச் செய்தே ஆக வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு