Published:Updated:

``தீபாவளிக்கு முன்னரே இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்!'' - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

``2020-21-ம் ஆண்டு சம்பா மற்றும் தாளடி நெற்ப் பயிர்கள் நிவர், புரெவி புயல்கள் மற்றும் பருவம் தவறிப் பெய்த தொடர் கனமழையால் பாதிப்படைந்தது. இதற்கு சில வருவாய் கிராமங்களில் இழப்பீடு அறிவிக்கப்பட்ட நிலையில் சில இடங்களுக்கு பயிர் இன்ஷுரன்ஸ் தொகை அறிவிக்கப்படாமல் உள்ளது." - விவசாயிகள்

பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை வழங்கபடாத வருவாய் கிராமங்களுக்கும் உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரில் அமைந்துள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பலரும் பலரும் கலந்துகொண்டார்கள். கடந்த ஆண்டு சம்பா, தாளடி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு, புயல் மற்றும் பருவம் தவறிய மழையால் மகசூல் இழந்த அனைத்து விவசாயிகளுக்கு பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இதனை தீபாவளி பண்டிக்கைக்கு முன்பே வழங்க வேண்டும் எனவும் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தில் விவசாயிகள்
போராட்டத்தில் விவசாயிகள்
`எங்க 22 கிராமங்களுக்கு மட்டும் ஏன் இழப்பீடு இல்ல?' - ஆதங்கத்தில் விவசாயிகள்

இதுகுறித்து விரிவாகப் பேசிய திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, ``2020-21-ம் ஆண்டுக்குரிய சம்பா மற்றும் தாளடி பயிறுக்கான பயிர் இன்ஷுரன்ஸ் தொகை வழங்கப்பட்டிருக்கும் கிராமங்களில் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட ஆதிச்சபுரம் கோட்டூர் குன்னியூர் பெருகவாழ்ந்தான், தெற்கு நாணலூர், இடும்பவனம் தெற்குகாடு, தில்லைவிளாகம் ஆலிவலம் அம்மனூர் ஆண்டாங்கரை, ஆதனூர் திருவலஞ்சுழி, தேசிங்குராஜபுரம், மேட்டுப்பாளையம், திருப்பத்தூர், ரெங்கநாதபுரம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கு பயிர் இன்ஷுரன்ஸ் தொகை அறிவிக்கபட வில்லை. இது இப்பகுதி விவசாயிகளை மிகுந்த ஏமாற்றத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த வருவாய் கிராமங்களில் கடந்த 2020-21-ம் ஆண்டு சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நிவர், புரெவி புயல்கள் மற்றும் பருவம் தவறிப் பெய்த தொடர் கனமழை ஆகியவற்றால் பாதிப்படைந்தது அனைவரும் அறிந்ததுதான். மேலும் அருகருகே உள்ள வருவாய் கிராமங்களில் இழப்பீடு அறிவிக்கப்பட்ட நிலையில் சில இடங்களுக்கு பயிர் இன்ஷுரன்ஸ் தொகை அறிவிக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேபோல சில வருவாய் கிராமங்களில் மிக குறைந்த சதவீதமே இழப்பீட்டுத் தொகை அறிவித்திருப்பதும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில வருவாய் கிராமங்களுக்கு பயிர் இன்ஷுரன்ஸ் தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, இன்னும் வழங்கப்படாமலே இருக்கிறது.

போராட்டத்தில் விவசாயிகள்
போராட்டத்தில் விவசாயிகள்
`பயிர் இழப்பீடு விவரங்களை இணையத்தில் வெளியிடவேண்டும்!' - விவசாய ஆர்வலரின் கோரிக்கை

அந்த வருவாய் கிராமங்களுக்கும் உடனடியாக இன்ஷுரன்ஸ் தொகையை விடுவித்திட வேண்டும். தமிழக அரசு, விவசாயிகளின் இக்கோரிக்கைகள் தொடர்பாக கனிவுடன் பரிசீலனை செய்து, பயிர்க்காப்பீட்டு நிறுவனங்களிடம் வலியுறுத்தி விவசாயிகளுக்குப் பயிர்காப்பீட்டுத்தொகை பெற்றுத்தர வேண்டும். பயிர்காப்பீட்டுத் தொகை விடுவிக்கபடாமல் உள்ள வருவாய் கிராமங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படுவதற்கும், அதை தீபாவளி பண்டிக்கைக்கு முன்கூட்டியே கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு