Published:Updated:

`31.67 டிஎம்சி-யை தராத கர்நாடகா; மௌனம் காக்கிறதா தமிழக அரசு?' - குற்றம்சாட்டும் செயற்பாட்டாளர்

``தமிழக அரசு ஏன் வெளிப்படையாக இதுகுறித்து பேச மறுக்கிறது. தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள், ஏன் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சியான அதிமுக ஏன் தமிழக அரசை கண்டிக்கவில்லை."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உச்ச நீதிமன்ற இறுதித்தீர்ப்பின்படி, ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் தர வேண்டிய பங்குநீர் முழுமையாக வழங்கப்படவில்லை. சட்டப்படி வழங்க வேண்டிய மொத்த நீரில் 31.67 டிஎம்சி தண்ணீர் தர வேண்டியுள்ளது. உரிய நேரத்தில் இந்த தண்ணீர் கிடைத்தால்தான், டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். ஆனால் இதனை பெற தமிழக அரசு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனவும், பங்குநீரை தர மறுக்கும் கர்நாடகாவிற்கு , தமிழக அரசு வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

விவசாயம்
விவசாயம்
`காவிரி ஆணையத்தால் நமக்கு எந்தப் பலனும் இல்லை; கலைத்துவிடலாம்!' - கொதிக்கும் பெ.மணியரசன்

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய காவிரி உரிமை மீட்புக்குழுவின் பொறுப்பாளர்களின் ஒருவரான மருத்துவர் பாரதிச்செல்வன், ``உச்சநீதிமன்ற இறுதிதீர்ப்பின்படி, கர்நாடகம், தமிழ்நாட்டிற்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை 123.14 டிஎம்சி காவிரிநீர் தர வேண்டும். ஆனால் 91.46 டிஎம்சி நீர்தான் கொடுக்கப்பட்டுள்ளது. மீதி 31.67 டிஎம்சி நீரை கொடுக்க மறுக்கிறது. இது சட்டத்திற்கு புறம்பானது. கடந்த மூன்று மாதங்களில் மூன்று முறை காவிரி ஆணையக் கூட்டம் நடந்துள்ளது. ஆனாலும் கூட காவிரி ஆணையத்தால், அந்த தண்ணீரை பெற்றுத் தர முடியவில்லை. காவிரி ஆணையம் அமைப்பதற்கு முன்பு என்ன நிலைமை இருந்ததோ, அதே நிலைமைதான் தற்போதும் உள்ளது. முன்பு மத்திய நீர்வளத்துறையிடம் முறையிட்டோம். தற்போது காவிரி ஆணையத்திடம் முறையிடுகிறோம். இது மட்டும்தான் வேறுபாடு.

ஜூன்-செப்டம்பர் வரை கர்நாடகம் சட்டப்படி தர வேண்டிய தண்ணீரில் 19 ஆண்டுகள் விதிமுறை மீறப்பட்டுள்ளது. முழுமையாக தண்ணீர் தரவில்லை. மீதி 11 ஆண்டுகளில் கர்நாடகாவில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், அதை சமாளிக்க முடியாமல், தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்டார்கள். காவிரி ஆணையம் அமைக்கப்பட்ட பிறகும் கூட, தமிழக விவசாயிகளுக்கு நீதி கிடைக்கவில்லை. சட்டத்தை மீறி செயல்படும் கர்நாடக அரசு மீது, காவிரி ஆணையம் சட்டப்பூர்வமான எந்த ஒரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.

மருத்துவர் பாரதிச்செல்வன்
மருத்துவர் பாரதிச்செல்வன்

கர்நாடகாவில் மழை குறைவாக பொழிந்துள்ளதாகவும், தங்களது அணைகளில் தண்ணீர் குறைவாக இருப்பதாலும், தமிழ்நாட்டிற்கு உரிய பங்குநீரை முழுமையாக தர முடியவில்லை என காவிரி ஆணையக் கூட்டங்களில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இது ஏற்புடையதல்ல. எத்தனை சதவீதம் மழைப்பொழிவோ, அதற்கு ஏற்ப குறைத்துக் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஜூன் - செப்டம்பர் வரை கர்நாடகம் மற்றும் கேரளாவில் காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் வழக்கமாக பெய்யும் மழை அளவு எவ்வளவு ? தற்போதை பற்றாக்குறை மழை அளவு எவ்வளவு என்பதை கணக்கிட்டு, அதற்கு ஏற்பதான் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் தண்ணிர் வேண்டும். 10 சதவீதம் மழைப்பொழிவு குறைவு என்றால், 12 டிஎம்சி குறைத்து வழங்கலாம். 25 சதவீதத்திற்கு மேல் மழைப்பொழிவு குறைவாக இருந்தால்தான், 31 டிஎம்சி குறைக்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் இந்த புள்ளிவிவரங்களை கர்நாடகம் வெளிப்படையாக சொல்ல மறுக்கிறது. தமிழக அதிகாரிகளாவது இந்த தரவுகளுடன் காவிரி ஆணைய கூட்டத்திற்கு சென்றார்களா? இதனை வாதமாக வைத்து, முறையிட்டார்களா எனத் தெரியவில்லை. தமிழக அரசு ஏன் வெளிப்படையாக இதுகுறித்து பேச மறுக்கிறது. தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள், ஏன் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சியான அதிமுக ஏன் தமிழக அரசை கண்டிக்கவில்லை. மற்ற கட்சிகளுமே கூட காவிரி பங்குநீர் விவகாரத்தில் மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது.

காவிரி நீர்
காவிரி நீர்
காவிரி நீர்:``உத்தரவிட்டால் போதாது; மேலாண்மை ஆணையம் நீரைப் பெற்றுத் தர வேண்டும்!"-டெல்டா விவசாயிகள்

சட்டப்படியான உத்தரவை நடைமுறைப்படுத்த மறுக்கும் கர்நாடக அரசு மீது, காவிரி ஆணையமும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தேவைப்படும் காலத்தில் காவிரிநீரை தராமல், வெள்ள காலத்தில் வேறு வழியில்லாமல், தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்டு, போலி கணக்கு காட்டும் கர்நாடகத்தையும் இதற்கு துணைபோகும் காவிரி ஆணையத்தையும் அதிகாரமற்ற ஆணையம் அமைத்த மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் அரசையும், அநீதியை முறையாக தட்டிக் கேட்காமல் மௌனம் சாதிக்கும் தமிழ்நாடு அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம். இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு