Published:Updated:

நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பர்ய நெல் மையம்... கூடவே இவற்றையும் செய்யுமா தமிழக அரசு?

நெல் ஜெயராமன்

இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பர்ய நெல் ரகங்களை விவசாயிகளிடம் பரவலாகக் கொண்டு செல்லவும், நெல் ஜெயராமன் ஆற்றி வந்த உயரிய சேவைக்கு மரியாதையும் அங்கீகாரமும் அளிக்கும் விதமாகவும் அவரது பெயரில் பாரம்பர்ய நெல் மையம் அமைக்க தமிழக அரசு தற்போது முடிவெடுதுள்ளது.

நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பர்ய நெல் மையம்... கூடவே இவற்றையும் செய்யுமா தமிழக அரசு?

இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பர்ய நெல் ரகங்களை விவசாயிகளிடம் பரவலாகக் கொண்டு செல்லவும், நெல் ஜெயராமன் ஆற்றி வந்த உயரிய சேவைக்கு மரியாதையும் அங்கீகாரமும் அளிக்கும் விதமாகவும் அவரது பெயரில் பாரம்பர்ய நெல் மையம் அமைக்க தமிழக அரசு தற்போது முடிவெடுதுள்ளது.

Published:Updated:
நெல் ஜெயராமன்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நெல் ஜெயராமன் பெயரில் 47.87 லட்சம் கோடி ரூபாய் செலவில் பாரம்பர்ய நெல் மையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு இயற்கை விவசாயிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் இம்மையத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து சில முக்கியமான ஆலோசனைகளைத் தெரிவிக்கிறார்கள்.

இடைக்கால பட்ஜெட்
இடைக்கால பட்ஜெட்

பசுமைப் புரட்சிக்கு முன்பு தமிழ்நாட்டில் மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி, பூங்கார், கருடன் சம்பா, கிச்சலி சம்பா, ஜீரக சம்பா, குருவிக்கார், காட்டுயானம் என இன்னும் ஏராளமான பாரம்பர்ய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு வந்தன. இவை வறட்சி மற்றும் கனமழையிலும் தாக்குப்பிடித்து வளரக்கூடியவை. இயல்பாகவே இதுபோன்ற நெல் ரகங்கங்களில் ஏராளமான சத்துகளும் மருத்துவக் குணங்களும் நிறைந்திருக்கும். ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல், இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி, இவை விளைவிக்கப்பட்டதால், ஆரோக்கியமான உணவாக இருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காலப்போக்கில் மத்திய மாநில அரசுகளின் தவறான வழிநடத்துதலால், பாரம்பர்ய நெல் ரகங்கள் காணாமல் போயின. நம் விவசாயிகள், நவீன நெல் ரகங்களுக்கு மாறியதோடு, அதிகளவில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதனால் விவசாயிகளுக்கு செலவு அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், இதைச் சாப்பிடும் மக்கள் நோய் நொடிகளுக்கும் ஆளானார்கள்.

இந்நிலையில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார். அவரது முயற்சிகளுக்கு பக்கபலமாக நின்றவர்தான் நெல் ஜெயராமன். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் ஆதிரெங்கம் கிராமத்தில் `நமது நெல்லை காப்போம்' அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக நெல் திருவிழாவை நடத்தி, பாரம்பர்ய நெல் விதைகளை விவசாயிகளிடம் பரவலாக்கினார். இந்நிலையில்தான் புற்றுநோய் பாதிப்பால் இரண்டு ஆண்டுக்கு முன்பு நெல் ஜெயராமன் காலமானார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 2021
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 2021

இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பர்ய நெல் ரகங்களை விவசாயிகளிடம் பரவலாகக் கொண்டு செல்லவும், நெல் ஜெயராமன் ஆற்றி வந்த உயரிய சேவைக்கு மரியாதையும் அங்கீகாரமும் அளிக்கும் விதமாகவும் அவரது பெயரில் பாரம்பர்ய நெல் மையம் அமைக்க தமிழக அரசு தற்போது முடிவெடுதுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி ராமலிங்கம், ``தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கக் கூடியது. இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் அவசியமானது. ஆனால், இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை மிகவும் குறைவு. 47.87 லட்சம் ரூபாய் என்பது மிகவும் சொற்ப தொகை. இந்தத் தொகையை முழுமையாக நேர்மையாகச் செலவு செய்தாலுமேகூட இதனால் உருப்படியாக எதுவும் நடந்துவிட வாய்ப்பில்லை.

இத்தொகையில் அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் கமிஷன் அடித்தால், அதுபோக, இதில் என்ன பெரிதாக மிச்சமிருக்கும். வேளாண்மைத்துறையின் மற்ற திட்டங்களுக்கெல்லாம் கோடி கோடியாக நிதி ஒதுக்குகிறார்கள். குறிப்பாக, ரசாயன வேளாண்மை தொடர்பான செயல்பாடுகளுக்கு அதிகளவில் பணம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், மக்களின் வாழ்க்கையை ஆரோக்கியமாகப் பாதுகாக்கக்கூடிய இயற்கை வேளாண்மைக்கும் பாரம்பர்ய நெல் ரகங்களுக்கும் அதிகமாக நிதி ஒதுக்க, ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லை. தற்போதைய அறிவிப்பு வெறும் கண் துடைப்பாக இருந்துவிடக்கூடாது.

ஏற்கெனவே வேளாண்மைத்துறையின் சார்பில் கிராமப்புறங்களில் இயற்கை உழவர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த ஒரு செயல்பாடும் கிடையாது. இக்குழுவில் உள்ள விவசாயிகள், இயற்கை விவசாயம் செய்கிறார்களா, இல்லையா என எதையுமே வேளாண்மைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியில் ஒரு பகுதியை மட்டும் இயற்கை உழவர் குழுவில் உள்ள விவசாயிகளிடம் கொடுத்து விட்டு மீதித் தொகையை வேளாண் அலுவலர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். நெல் ஜெயராமன் பெயரில் தற்போது அமைக்கப்படும் மையம் அதுபோல் ஆகிவிடக் கூடாது.

நெல் ஜெயராமன்
நெல் ஜெயராமன்

பாரம்பர்ய நெல் ரகங்களை தேடிக் கண்டுப்பிடித்து பாதுகாப்பதோடு, இவற்றை அதிகளவில் உற்பத்தி செய்து, தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளிடம் பரவலாக்க வேண்டும், இயற்கை வேளாண்மைப் பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இம்மையத்துக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கும் இதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் முன்னோடி இயற்கை விவசாயிகளைக் கொண்டு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்த மையம் ஆக்கபூர்வமாகவும் விவசாயிகளுக்கு உண்மையாகவே பயன் அளிக்கக்கூடிய விதத்திலும் செயல்பட வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

சமீபகாலமாக, இயற்கை வேளாண்மைக்கும் பாரம்பர்ய நெல் ரகங்களுக்கும் மக்களிடம் பரவலாக வரவேற்பு அதிகரித்துள்ளது. இது தேர்தல் நேரம்... இதை வைத்து அரசியல் செய்து ஆதாயம் தேடக்கூடிய வெற்று அறிவிப்பாக இது இருந்துவிடக்கூடாது. ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும்.