Published:Updated:

கருகும் குறுவை, முடங்கும் சம்பா; கைவிட்ட அதிகாரிகள்; ஆதங்கத்தில் டெல்டா விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டெல்டா - குறுவை நெற்பயிர்கள்
டெல்டா - குறுவை நெற்பயிர்கள்

``உடனடியாக கர்நாடகாவிடமிருந்து காவிரி பங்கு நீரை பெற்றுத்தர காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசும் அழுத்தம் கொடுத்து தண்ணீரை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் இவை கருகும் நிலை உருவாகி வருகின்றன. கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு சட்டப்படி தரவேண்டிய காவிரி பங்கு நீரை கொடுக்காமல் இருப்பதாலேயே இந்த நிலை உருவாகியுள்ளதாக, காவிரி டெல்டா விவசாயிகள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

மேலும் இதனால் சம்பா சாகுபடியையும் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. இது டெல்டா விவசாயிகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், இந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என கவலை தெரிவிக்கிறார்கள்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்
கருகும் நாற்றுகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்; டெல்டாவில் சீராக நடக்குமா குறுவை சாகுபடி?

``காவிரி டெல்டாவில் தண்ணீர் இன்றிக் குறுவைப் பயிர்கள் கருகத் தொடங்கியதற்கும், சம்பா சாகுபடியைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதற்கும் காவிரி மேலாண்மை ஆணையம் பொறுப்பேற்க வேண்டும்" என இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள கச்சனம், ஆலத்தம்பாடி, விளக்குடி, மணலி, பொன்னிறை உள்ளிட்ட கிராமங்களிலும் நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை, கொக்கலாடி ஆகிய கிராமங்களிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவைப் பயிர்களின் வறட்சியான நிலையைத் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார்.

பின்னர் அவரிடம் பேசியபோது, ``தமிழ்நாட்டில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதை நம்பி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இதில், ஒரு லட்சம் ஏக்கரில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சாகுபடி பணிகளை முழுமையாக தொடர முடியாமல் போய்விட்டது. வருங்காலத்தில் முற்றிலும் குறுவை கருகி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 13 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட வேண்டிய சம்பா, தாளடி சாகுபடியை தொடங்க முடியாமலும் முட்டுக்கட்டைப் போடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் செய்வதறியாது பரிதவிக்கின்றனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரைச் சந்தித்து, கர்நாடக அணைகளை நேரில் பார்வையிட்டு, தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்கு, உடனடியாகச் சென்று பார்வையிட்டு ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்கான தண்ணீரை பெற்றுத் தருவதாக அவர் உறுதியளித்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே, தண்ணீர் இன்றி குறுவைப் பயிர்கள் கருகி வருவதற்கும், சம்பா சாகுபடியைத் தொடங்க முடியாமல் உள்ளதற்கும் காவிரி மேலாண்மை ஆணையமே பொறுப்பேற்க வேண்டும் என வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக கர்நாடகாவிடமிருந்து காவிரி பங்கு நீரைப் பெற்றுத்தர காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உரிய அழுத்ததை கொடுத்து தண்ணீரை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தார்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்
தமிழகம் முழு இயற்கை விவசாய மாநிலமாக மாற அரசு செய்யவேண்டியவை என்னென்ன? விரிவான அலசல்!

திருவாரூர், நாகப்பட்டினம் மட்டுமல்ல... காவிரி பாசன தலைமடைப் பகுதியான தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களிலுமே கூட குறுவை நெல் சாகுபடிக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள். குறிப்பாக இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்குப் பாசனம் அளிக்கக்கூடிய குடமுருட்டி ஆற்றில் குறைவான அளவு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவதால், நெல் சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாத இக்கட்டான நிலைக்கு இப்பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். இப்படியாக டெல்டா மாவட்டங்கள் முழுவதுமே ஆங்காங்கே ஆதங்கக் குரல்கள் ஒலிக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு