Published:Updated:

“விளைஞ்ச நெல்ல விக்க முடியலை!” - கண்ணீரில் நனையும் விவசாயிகள்...

வெளி வியாபாரிங்க 62 கிலோ நெல் மூட்டைக்கு 900 ரூபாய்தான் தர்றாங்க. அதில்லாம எடை மெஷின் தில்லுமுல்லுல அஞ்சு கிலோ காலியாகிடும். அதனாலதான் கொள்முதல் நிலையத்துக்கு நெல்லை எடுத்துக்கிட்டு வந்தேன்.

பிரீமியம் ஸ்டோரி
‘காடு வெளைஞ்சென்ன மச்சான்... நமக்குக் கையும் காலும்தானே மிச்சம்!’ என்று பட்டுக்கோட்டையார் பாடல் எழுதி 60 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்னும் விவசாயிகளின் நிலைமையில் சிறு மாற்றமும் ஏற்படவில்லை. சாக்லேட்டிலிருந்து ராக்கெட் வரை எந்தப் பொருளை உற்பத்தி செய்தாலும், அந்தப் பொருளுக்கு அதன் உற்பத்தியாளர்தான் விலை நிர்ணயம் செய்கிறார். ஆனால், உலகுக்கே உணவு வழங்கும் விவசாயிகளால், தங்கள் உற்பத்திப் பொருள் களுக்கு விலை சொல்ல முடிவதில்லை. விவசாயிகளின் கடைசிப் புகலிடமான ‘அரசு கொள்முதல் நிலையங்களி’லும் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது பெருங்கொடுமை. பயிரை விளைவித்து அறுத்தெடுப்பதே கஷ்டமென்றால், அறுத்த நெல்லை ஓரளவுக்கு நல்ல விலைக்கு விற்று வீடு திரும்புவது கஷ்டத்திலும் பெரும் கஷ்டமாக இருக்கிறது!

இந்தப் பிரச்னை குறித்து பல்வேறு கடிதங்களும் அழைப்புகளும் விவசாயிகளிடமிருந்து வந்தபடியிருக்க, உண்மை நிலைமையை அறிந்து கொள்ளலாம் என ஒரு விசிட் அடித்தோம்...

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி அருகிலுள்ள நல்லாடை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், நெல்லைக் காயவைத்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேசியபோது, “இந்த வருஷம் ஆத்துல தண்ணி இருந்துச்சு. தேவையான நேரத்துல மழையும் வந்துச்சு, நல்ல விளைச்சலும் கிடைச்சுது. ஆனா, இன்னும் நெல்லை விக்க முடியாம அல்லாடுறேன். வாடகை வண்டிவெச்சு, கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு போனேன். அங்கே, ‘ஈரப்பதம் அதிகமா இருக்கு’னு சொல்லிட்டாங்க. மறுபடியும் வண்டி வாடகை, ஆள்கூலி செலவு பண்ணி எடுத்துட்டு வந்துட்டேன். பத்து நாளா காயவெக்கிறோம். தினமும் மழையில நனையிறதும், காய வெக்கிறதும்தான் பொழப்பா இருக்கு. எப்போ இது விலையாகப் போகுதோ தெரியலை...” என்றார் கவலையோடு.

“விளைஞ்ச நெல்ல விக்க முடியலை!” - கண்ணீரில் நனையும் விவசாயிகள்...

பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி, தரங்கம்பாடி அருகேயுள்ள திருவிளையாட்டம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காத்திருந்தார். “வெளி வியாபாரிங்க 62 கிலோ நெல் மூட்டைக்கு 900 ரூபாய்தான் தர்றாங்க. அதில்லாம எடை மெஷின் தில்லுமுல்லுல அஞ்சு கிலோ காலியாகிடும். அதனாலதான் கொள்முதல் நிலையத்துக்கு நெல்லை எடுத்துக்கிட்டு வந்தேன். இங்கே 42 கிலோ மூட்டைக்கு சன்ன ரகம்னா 762 ரூபாயும், மோட்டா ரகம்னா 740 ரூபாயும் கொடுப்பாங்க. ஆனா, மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கொடுக்கணும். வேற வழி இல்லை... போய்த் தொலையுதுன்னு கொடுக்க வேண்டியதுதான். ஆனாலும், எங்க நெல்லை எடை போடுறதுக்கு லேட் பண்றாங்க. வெளி வியாபாரிங்க கூடுதலா லஞ்சம் கொடுக்குறதால அவங்க கொண்டு வர்ற நெல்லைத்தான் முதல்ல எடுத்துக்குறாங்க. நெல்லைவெச்சுக்கிட்டு 20 நாளா கொள்முதல் நிலையத்துல காத்துக்கிடக்கேன். இன்னும் வித்த பாடில்லை” என்றார். குரலில் அவ்வளவு ஆதங்கம்!

மாரியப்பன்
மாரியப்பன்

அந்தக் கொள்முதல் நிலையத்துக்குள்ளிருந்த அலுவலரிடம் நம்மை அறிமுகப்படுத்தினோம். “தினமும் நிருபர்னு சொல்லிக்கிட்டு யாராவது வந்துடுறீங்க... இந்தாங்க வெச்சுக்கங்க. எதுவும் எழுதாதீங்க” என்று சொன்னபடி 200 ரூபாயை எடுத்து நீட்டினார். அந்தச் செயலை நாம் கடுமையாகக் கண்டித்த பிறகு மன்னிப்புக் கோரினார். தொடர்ந்து பேசியவர், “இங்கே ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் 10,000 மூட்டை இருக்கு. இட வசதி இங்கே அவ்வளவுதான். இதையெல்லாம், சித்தர்காடு குடோனுக்கு அனுப்பிவைக்கணும். அங்கே போதுமான லோடுமேன்கள் இல்லையாம். அதனால, ஒரு லாரி லோடு அனுப்பினா அதை இறக்க நாலு நாள்கள் ஆகுது. இங்கே ஒரு நாளைக்கு 800 மூட்டைகள்தான் கொள்முதல் செய்யணும்னு நிர்ணயம் செஞ்சிருக்காங்க. இதுல, எம்.எல்.ஏ., கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர்னு நிறைய பேர் சிபாரிசோட விவசாயிகள் வர்றாங்க. அதையும் தட்ட முடியலை. அதனாலதான் லேட் ஆகுது” என்றார்.

“நெல் கொள்முதலில், தமிழ்நாட்டில் மட்டும்தான் இவ்வளவு பிரச்னைகள்” என்று சொல்கிறார், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன். “சத்தீஸ்கர் மாநில அரசு, நெல் கொள்முதல்ல ரொம்ப சிறப்பாச் செயல்படுது. 2018-19-ம் ஆண்டுக்கு சத்தீஸ்கர் மாநிலத்துக்கு 47 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யத்தான் இந்திய உணவுக் கழகம் இலக்கு நிர்ணயம் செஞ்சிருந்தது. ஆனா, அந்த மாநில அரசு, 82.40 லட்சம் டன் கொள்முதல் செஞ்சுது. போன வருசம் டெல்டா விவசாயிகள் சில பேர் சத்தீஸ்கர் போயி, அங்கெல்லாம் கொள்முதல் எப்படி நடக்குதுனு நேர்ல பார்த்தோம். கொள்முதல் நிலையத்துக்கு நெல் எடுத்துக் கிட்டுப் போற விவசாயிங்க ஒரு நாள்கூடக் காத்திருக்கறதில்லை. விவசாயியோட பேரை கம்ப்யூட்டர்ல தட்டினாலே, அந்த விவசாயியைப் பத்தின எல்லாத் தகவலும் வந்துடுது. நிலத்தோட சர்வே நம்பர், இந்தப் பருவத்துல எத்தனை ஏக்கர்ல நெல் சாகுபடி செஞ்சிருக்கார், என்ன ரகம், விளைச்சல் எவ்வளவுனு எல்லா விவரங்களும் வந்துடுது. இதனால விவசாயிகள் அல்லாதவர்கள் அங்கே நெல் எடுத்துக்கிட்டுப் போக வாய்ப்பே இல்லை. ஒவ்வோரு கொள்முதல் நிலையமும் 4-7 ஏக்கர் பரப்பளவுல எல்லாவிதமான கட்டமைப்பு வசதிகளோடும் ரொம்ப சிறப்பா இருக்கு. ஒரே சமயத்துல பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளைக்கூட பாதுகாப்பா வைக்க முடியும்.

“விளைஞ்ச நெல்ல விக்க முடியலை!” - கண்ணீரில் நனையும் விவசாயிகள்...

ஆனா, தமிழ்நாட்டுல இருக்குற நெல்கொள்முதல் நிலையங்களோட நிலைமை ரொம்ப மோசம். அரை ஏக்கர் பரப்பளவுகூட இல்லை. கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உடனடியா குடோன்களுக்கோ, அரிசி ஆலைகளுக்கோ அனுப்பப்படுறதில்லை. இட வசதி இல்லைங்கற காரணத்தைக் காட்டி விவசாயிகளை அலைக்கழிக் கிறாங்க. முன்னாடியெல்லாம், ‘நடமாடும் கொள்முதல் நிலையம்’ திட்டம் மூலமா பெருவிவசாயிகளோட நிலத்துக்கே போயி, நெல்லை கொள்முதல் செஞ்சாங்க. இப்போ அது நடைமுறையில இல்லை. அதைச் செயல்படுத்தினால், கொள்முதல் நிலையங்கள்ல கூட்டம் குறையும். சத்தீஸ்கர் மாநிலத்துல கடைப்பிடிக்கப் படும் கம்ப்யூட்டர் நடைமுறைகளை இங்கேயும் சரியா கடைப்பிடிச்சாலே ‘வியாபாரிகளோட’ நெல் தடுக்கப்படும். கொள்முதல் நிலைய ஊழியர்கள், லஞ்சம் வாங்குறதுக்காக பொய்யான காரணங்களைச் சொல்லி விவசாயிகளைக் காக்கவைக்க முடியாது” என்றார் சுந்தர விமல்நாதன்.

வேளாண் விற்பனைப் பிரிவின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் பொன்னம்பலம். இவர் தற்போது ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கத்தின் நிர்வாகியாக இருக்கிறார். அவரிடம் பேசினோம். “பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள்ல ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக முறைகேடுகளே இல்லாமல் கோதுமை, நெல் உள்ளிட்டவற்றைக் கொள்முதல் செய்யறாங்க. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்ல போதுமான கட்டமைப்பு இருக்கு. அதனால் நெல் மூட்டைகள் மழையால் சேதமாக வாய்ப்பில்லை. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துல வைக்கப்படும் நெல்லுக்கு விவசாயிகள், வங்கிகளில் ஈட்டுக்கடன் பெற முடியும். அதனால், தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இதுக்குப் பயன்படுத்தலாம். கொள்முதலுக்கான நேர விரயத்தைக் குறைக்க, நவீன எடைமேடைகளைப் பயன்படுத்தலாம். சிறு சிறு மூட்டைகளாக எடை பார்ப்பதற்கு பதிலா, ஒரே சமயத்துல டன்கணக்கில் எடை பார்க்கலாம். கூட்டத்தைத் தவிர்க்க, விவசாயிகளுக்கு முன்கூட்டியே டோக்கன் கொடுத்து, வெவ்வேறு நாள்கள்ல வரவழைக்கலாம். இதனால் விவசாயிகளின் காத்திருப்பும் அலைக்கழிப்பும் தவிர்க்கப்படும்” என்றார்.

 பொன்னம்பலம் , சுதாகர் , சுந்தர விமல்நாதன் , துரைக்கண்ணு
பொன்னம்பலம் , சுதாகர் , சுந்தர விமல்நாதன் , துரைக்கண்ணு

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசினோம். “நெல் கொள்முதல் நல்ல முறையில் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த ஆண்டு விளைச்சல் அதிகம். அதனால, எதிர்பார்த்த அளவைவிட வரத்து அதிகமா இருக்கு. தனியார் வியாபாரிகள், அரசாங்க விலையைவிட குறைவான விலையையே தருவதால், விவசாயிகள் தனியார்கிட்ட போகலை. இதனாலயும் கொள்முதல் நிலையங்கள்ல விவசாயிகளோட கூட்டம் அதிகமா இருக்கு. காலதாமதம் என்பது இது மாதிரியான காரணங்களாலும் ஏற்பட்டிருக்கலாம். எங்கேயாவது ஒரு சில இடங்கள்ல இப்படி நடந்திருக்கலாம்” என்றார்.

“இந்த ஆண்டு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்னை தொடருதே... மற்ற மாநிலங்கள்ல இந்த மாதிரி பிரச்னை இல்லையே” என்று நாம் கேட்டதற்கு, “நான் வேளாண்மைத் துறைக்குத்தான் அமைச்சர். கொள்முதல் பற்றி உணவுத்துறை அமைச்சர்கிட்டதான் நீங்க கேட்கணும்” என்று மழுப்பலாக நழுவினார்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜின் எண்ணுக்குப் பலமுறை அழைத்தும் பதில் இல்லை. விவசாயிகளுக்குப் பிரச்னையென்றால், அதற்கான தீர்வு எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியேதான் இருக்கிறது.

‘வானம் பொழியுது பூமி விளையுது தம்பிப் பயலே - நாம

வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயல...

ஆனா, தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையில

இது தகாதுன்னு எடுத்துச் சொல்லியும் புரியல...’

மருதகாசி எழுதி, எம்.ஜி.ஆர் உணர்ச்சிகரமாக நடித்த இந்தப் பாடல்தான் மீண்டும் நினைவுக்கு வருகிறது. ஆட்சியிலிருக்கும் எம்.ஜி.ஆர் ‘தொண்டர்களுக்கு’ இது புரியவில்லையா... புரியாததுபோல நடிக்கிறீர்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு