Published:Updated:

வேளாண் பட்ஜெட்: `ரொம்ப எதிர்பாத்தோம்; இது எங்களுக்கு ஏமாற்றம்தான்!' - வேதனையில் வாழை விவசாயிகள்

``தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் மகிழும் வகையில் திட்டங்கள் எதுவும் இல்லை. அத்துடன் நீர் நிலைகளைத் தூர் வாரும் அம்சங்களோ வாழை விவசாயத்தை மேம்படுத்தும் திட்டங்களோ வேளாண் பட்ஜெட்டில் இல்லை".

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் முதல்முறையாக வேளாண்மைக்கு எனத் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், பட்ஜெட் சிறப்புகள் குறித்து இயற்கை விவசாயியான தச்சை கணேசராஜா நம்மிடம் பேசுகையில்,``ஏற்கெனவே கர்நாடகா மற்றும் ஆந்திராவில் வேளாண்மைக்கு எனத் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த முறை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்குரியது.

இயற்கை விவசாயி தச்சை கணேசராஜா
இயற்கை விவசாயி தச்சை கணேசராஜா

இயற்கை வேளாண் விஞ்ஞானியான மறைந்த நம்மாழ்வார் பெயரிலும் நெல் விதைகளைச் சேகரித்த `நெல்’ ஜெயராமன் பெயரிலும் விருதுகள் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும் விவசாயிகளை மேம்படுத்துவது தொடர்பாகத் தெளிவான திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் ஏராளமான குளங்கள், கால்வாய்களைத் தூர் வார நடவடிக்கை எடுத்தார். அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததுடன் விவசாயத்துக்குத் தேவையான நீரும் சேமிக்க முடிந்தது.

அத்தகைய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், கிராமப் பகுதியில் தரிசாகக் கிடக்கும் நிலங்களை மேம்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தேவையான நீர் ஆதாரத்துக்கு எந்தத் திட்டமும் இல்லாமல் அவற்றை எப்படி மேம்படுத்த இயலும்?

கரும்புக்கான ஆதரவு விலையில் 150 ரூபாய் மட்டுமே அதிகப்படுத்தியிருப்பது கரும்பு விவசாயிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் ஏராளமான வாழை விவசாயிகள் இருக்கிறார்கள். இங்கிருந்து வாழைத்தார், இலை உள்ளிட்டவை பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. வாழை விவசாயத்தை மேம்படுத்துவது தொடர்பாக பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாததால் வாழை விவசாயிகள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். வாழை தாரை பாதுகாப்பாக வைக்க குளிர்பதன குடோன்கள் அமைக்கப்படுவது பற்றி பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன், வாழை நாரில் இருந்து பல்வேறு பொருள்கள் உருவாக முடியும் என்பதால் அதற்கான தொழிற்சாலைகள் தொடங்குவது தொடர்பாகவும் எதுவுமே தெரிவிக்கப்படவில்லை.

வாழை விவசாயம்
வாழை விவசாயம்
நெல் கொள்முதல் விலை: `தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒண்ணு; இப்போ செய்றது ஒண்ணு!' - விவசாயிகள் ஏமாற்றம்

விவசாயிகள் நலமுடன் வாழ்ந்தால் மட்டுமே உணவு உற்பத்தியைச் சிறப்பாகச் செய்து நாடு வளம் பெறும். அரசுத் துறைகளில் இருப்பவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் இருப்பது போல விவசாயிகளுக்கும் உருவாக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. மொத்தத்தில் விவசாயிகளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வேளாண் பட்ஜெட் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்திருக்கிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு