திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் தனக்கு சொந்தமான 14 ஏக்கர் விவசாய நிலத்தில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிட்டுள்ளார். இரண்டு ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது வெங்காயம் விலை குறைந்து 1 கிலோ 7 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெங்காயம் அறுவடைசெய்ய கூலி கொடுத்து, லாரி வாடகை கொடுத்து பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும்போது பெரும் நஷ்டம் ஏற்பட்டது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால் மனமுடைந்த விவசாயி சிவராஜ் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் 'இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயத்தை விற்பனை செய்யவில்லை. வெங்காயம் தேவைப்படும் பொதுமக்கள் தன்னுடைய தோட்டத்தில் உள்ள வெங்காயத்தை வேண்டுமளவுக்கு இலவசமாகப் பறித்துச் செல்லலாம்' எனக் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெங்காயம் பயிரிட்டு நஷ்டம் அடைந்த நிலையில், வீணாக்க மனமில்லாத விவசாயி ஒருவர், பொதுமக்களுக்கு வெங்காயத்தை இலவசமாகக் கொடுக்க முன்வந்த நிகழ்வு அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயி சிவராஜிடம் பேசியபோது, ``பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் `1,000 ஏக்கருக்கு மேல் வெங்காயம் பயிரிடப்பட்டிருந்து. இந்த ஆண்டு வெங்காயத்துக்கு ஏற்ற மழையும் வெயிலும் தேவையான அளவு கிடைத்தது. இதனால் வெங்காயம் சாகுபடி அதிகமாக உள்ளது.

ஆனால், கிலோ 6 முதல் 10 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது. அறுவடைகான கூலி, மூட்டை கட்டுவது, ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி, வண்டி வாடகை, இடைத்தரகர்களுக்கான கமிஷன் எனப் பார்த்தால், கடைசியாக கிலோவுக்கு 5 ரூபாய்கூட விவசாயிக்கு கிடைக்காது. வெங்காயம் சாகுபடி செய்து நஷ்டம் ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற நஷ்டம் ஏற்படாமல் இருக்க அரசே உரிய விலை நிர்ணயம் செய்யவும், கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.