Published:Updated:

`32.55 லட்சம் MT நெல் கொள்முதல்; அரசுக்கு சாதனைதான்; ஆனால் எங்களுக்கு?' - குமுறும் விவசாயிகள்

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

இந்த ஆண்டு நெல் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் பெருமையடித்துக்கொள்கிறார்கள். ஆனால், இந்த சாதனைக்கு பின்னால் புதைந்திருக்கும் விவசாயிகளின் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நடப்பு 2020-21 கொள்முதல் ஆண்டில் 32.55 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளதாகவும், இது இதற்கு முன்பு எப்போதும் இல்லாத புதிய சாதனை அளவு என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இது உண்மையில் சாதனைதானா? இது தங்களது சாதனை என இவர்கள் இப்போது மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், விவசாயிகள் தங்களது நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும்போது சந்திக்கும் வேதனைகளோ ஏராளம். அலைக்கழிப்பு, காத்திருப்பு, லஞ்ச லாவண்யங்களால் விவசாயிகள் கடும் இன்னல்களை சந்திப்பது வாடிக்கையாக உள்ளது.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்துக்கு முகவராகச் செயல்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்கிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 1 முதல் செப்டம்பர் 30 வரை நெல் கொள்முதல் ஆண்டாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்த ஆண்டு ஒரு குவிண்டால் சன்னரக நெல்லுக்கு 1,958 ரூபாயும், மோட்டா ரக நெல்லுக்கு 1,918 ரூபாயும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்துள்ளது. குறுவை, சம்பா, தாளடி முன்பட்ட கோடை நெல் கொள்முதல் மூலம் இதுவரையிலும் 6.33 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 32.55 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 6,330 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

``2011-12 வரையிலான கொள்முதல் ஆண்டில் 23.87 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே, அதிகபட்ச கொள்முதல் அளவாகப் பேசப்பட்டு வந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2019-20 வரையிலான கொள்முதல் ஆண்டில் 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதுவே, இதுவரை உச்ச அளவாக இருந்தது. அதை முறியடிக்கும் விதமாக, இந்த ஆண்டு 32.55 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2,542 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. பெருமளவு கொள்முதல் நிறைவடைந்ததால், தற்போது 690 கொள்முதல் நிலையங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. மேலும் மூன்று மாதங்களுக்கு கொள்முதல் தொடரும் பட்சத்தில், இந்த அளவு மேலும் அதிகரிக்கும்’’ என்கிறார்கள் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள்.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

இந்த சாதனைக்கு பின்னால் புதைந்திருக்கும் விவசாயிகளின் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்லும் நெல், உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படாததால், அவை மழையில் நனைந்து, விவசாயிகள் நஷ்டத்தைச் சந்திக்கிறார்கள். கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதுபோல் இன்னும் பல அவலங்கள். இதற்கிடையில்தான் இந்த ஆண்டு நெல் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் பெருமையடித்துக்கொள்கிறார்கள். இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதனிடம் நாம் பேசியபோது, ``சர்க்கரை ஆலைகள் மோசடியில் ஈடுபடுவதால், கரும்பு விவசாயிகள் மிகுந்த விரக்தி அடைந்து, கரும்பை கைவிட்டு, நெல் சாகுபடிக்கு மாறியிருக்கிறார்கள். 2012-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 225 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 81 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான கரும்பு விவசாயிகள், நெல் சாகுபடிக்கு மாறியிருக்கிறார்கள். டெல்டா மாவட்டங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். இதனால், மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்களது நெல்லை, மிகவும் குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை இருந்தது. வியாபாரிகள் அந்த நெல்லை, டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்களில் முறைகேடாக விற்பனை செய்து வந்தார்கள். இதனால் இங்குள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். இதைச் சரிசெய்ய, மற்ற மாவட்டங்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

சுவாமிமலை விமல்நாதன்
சுவாமிமலை விமல்நாதன்

இதுபோன்ற காரணங்களால், இந்த ஆண்டு கொள்முதல் அளவு அதிகரித்துள்ளது. கொள்முதல் நிலையங்கள் இல்லாத பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்கிய நெல்லும் அதிகளவில் அரசு கொள்முதல் நிலையங்களில் முறைகேடாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 32.55 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதை இங்கு சாதனையாகப் பார்க்கிறோம். தமிழ்நாட்டைவிட மிகவும் சின்னஞ்சிறு மாநிலமான சத்தீஸ்கரில் 2019-20-ம் ஆண்டு வெறும் நாற்பதே நாள்களில் 82.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்திருக்கிறார்கள். அங்குள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். காத்திருப்பு, அலைக்கழிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு பைசாகூட லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள், ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவலம் நிலவுகிறது. இந்த ஆண்டு 32.55 லட்சம் டன் நெல் கொள்முதல் மூலமாக, விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 325 கோடி ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது. இதுதவிர, அதிக எடை வைப்பு மூலமாகவும் விவாயிகளின் பணம் திருடப்படுகிறது’’ எனச் சாடினார்.

விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏ.ஐ.டி.யு.சி தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் சந்திரகுமாரிடம் நாம் பேசியபோது, ``விவசாயிகளிடம் பணம் வாங்குவது கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும். இதைத்தான் நாங்களும் விரும்புகிறோம். ஆனால், நடைமுறை யதார்த்தமோ மிகவும் சீரழிவாக உள்ளது. கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படுவதில்லை. பட்டியல் எழுத்தர், உதவியாளர் உள்ளிட்டவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. சாக்குகளில் நெல்லை நெல் நிரப்பி, எடை போட்டு, அதை தைத்து, அடுக்கி வைக்க, சுமை தூக்கும் தொழிலாளருக்கு ஒரு மூட்டைக்கு 1 ரூபாய் 60 பைசா மட்டுமே கூலி வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டை கொள்முதல் செய்யப்பட்டால் 1,600 ரூபாய் கிடைக்கும்.

சந்திரகுமார்
சந்திரகுமார்

இதை 20 தொழிலாளர்கள் பிரித்துக்கொண்டால் ஒரு நபருக்கு 80 ரூபாய்தான் வருமானம். இதை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும். கொள்முதல் அலுவலர், தர ஆய்வாளர், முதுநிலை மண்டல மேலாளர் உட்பட உயர் அலுவலர்கள் மட்டுமல்லாமல், ஆட்சியாளர்களுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு, கொள்முதல் நிலைய ஊழியர்கள் தள்ளப்படுகிறார்கள். உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும், கோயில் விழாக்களுக்கும் நன்கொடை கொடுக்க வேண்டும். இதுபோல் இன்னும் ஏகப்பட்ட நெருக்கடிகள். இந்த அவலங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டால்தான், விவசாயிகளும், கொள்முதல் நிலைய ஊழியர்களும் நிம்மதியாக வாழ முடியும்’’ என்றார்.

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க அரசு இதில் சிறப்பு கவனம் செலுத்தும் என விவசாயிகள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு