Published:Updated:

`ஸ்டாலினின் புதிய அரசிடம் நாங்கள் எதிர்பார்ப்பது இவைதாம்!' - விவசாயிகள் கூறுவது என்ன?

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஏற்கெனவே முதலைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி செய்த தவறுகளில் இருந்தும், அதனால் இந்தத் தேர்தலில் அவர் அறுவடை செய்த தோல்வியில் இருந்தும், புதிய முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடம் கற்று விவசாயிகளின் இதயங்களில் நிலையான இடம்பிடிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் எதிர்பார்ப்பு.

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற தி.மு.க, தமிழ்நாட்டின் புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் அமோக ஆதரவால், தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினிடம் விவசாயிகள் பல எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாலர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``கடந்த நான்காண்டுகளாகத் தமிழ்நாட்டின் முதலைமைச்சராகப் பொறுப்பு வகித்த எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் நலனில் உண்மையான அக்கறை காட்டாமல், பெரும்பாலும் விரோதமாகவே நடந்துகொண்டார். அந்த வெறுப்பின் காரணமாகவே, விவசாயிகள், இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வை புறக்ககணித்து தி.மு.க-வுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.

ஸ்டாலின் - பழனிசாமி
ஸ்டாலின் - பழனிசாமி

தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் விரோதமாக மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததோடு, அந்தச் சட்டங்களை நியாயப்படுத்தி பிரசாரமும் செய்தார்.

விவசாயிகளின் வாழ்க்கையை இருளில் தள்ளக்கூடிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி, டெல்லியில் கடும் குளிரிலும் மழையிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும், பல மாதங்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். இவர்களை `புரோக்கர்கள்' என எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தியபோது, தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் கொந்தளித்துப் போனார்கள்.

அ.தி.மு.க அரசு மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் இந்த மூன்று சட்டங்களும் தமிழ்நாட்டில் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்தத் தேர்தலில் பெரும்பாலான விவசாயிகள் தி.மு.க-வுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.

புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தி.மு.க அரசு, எக்காரணம் கொண்டும், இந்த மூன்று சட்டங்களையும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது. ரூ.500 கோடி திட்ட மதிப்பிட்டில், மேட்டூர் அணையிலிருந்து, சட்டத்துக்கும் மரபுக்கு விரோதமாகவும் அரசியல் சுயலாபத்துக்காக, சேலத்துக்கு தண்ணீர் போகக்கூடிய சாரபங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்த எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டினார். டெல்டா விவசாயிகளின் கருத்தை அறியாமல், உணர்வுகளை மதிக்காமல், இத்திட்டத்தை செயல்படுத்தத் துடித்தார். இதனால் டெல்டா விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தார்கள்.

சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

இதன் காரணமாகவே டெல்டாவில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்கும் தி.மு.க அரசு சாரபங்கா திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில்தான், பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.

போலி விவசாயிகள் பலர் குறுக்கு வழியில் பயன் அடைந்துள்ளார்கள். உண்மையான விவசாயிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உதவித்தொகை சுமார் 1,000 கோடி ரூபாய் அபகரிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பணம் முழுமையாக மீட்கப்படவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

புதிய அரசு நேர்மையான விசாரணை நடத்தி, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள் மட்டுமல்லாமல் பெரு விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் திர்ப்பு வழங்கியது. இது விவசாயிகளை நிம்மதி அடையச் செய்தது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருந்த தமிழக அரசு, இத்தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது விவசாயிகளைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் புதிய அரசு, அந்த மேல்முறையீட்டை வாபஸ் வாங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

விவசாயம்
விவசாயம்

ஏற்கெனவே முதலைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி செய்த தவறுகளில் இருந்தும், அதனால் இந்தத் தேர்தலில் அவர் அறுவடை செய்த தோல்வியில் இருந்தும், புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயிகளின் நலன் சார்ந்து செயல்பட்டு, தமிழ்நாட்டின் அனைத்து விவசாயிகளின் இதயங்களிலும் நிலையான இடம்பிடிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் எதிர்பார்ப்பு.

அடுத்த கட்டுரைக்கு