`ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி - தமிழக அரசு அறிவிப்பு' - விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் இதன் பலன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள் அவர்கள்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதனால் 16 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் இதன் பலன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள் அவர்கள். இது ஒருபுறமிருக்க, தற்போதைய தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடியும் தறுவாயில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பதால், இது நடைமுறைக்கு வருமா என விவசாயிகள் சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள்

இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் விருதகிரி, ``நிவர் மற்றும் புரெவி புயலாலும், மார்கழி மாதம் எதிர்பாராமல் பெய்த தொடர் கன மழையின் காரணமாகவும் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடுமையான மன உளைச்சலில் இருந்தார்கள். பெரும்பாலான விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளார்கள். இந்த நேரத்தில் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகியிருப்பது மிகுந்த ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு பெரும் கடன் சுமை நீங்கும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேசமயம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை மட்டும் தள்ளுபடி செய்வதோடு மட்டுமல்லாமல், தேசிய மற்றும் வணிக வங்கிகளில் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புயல், மழை பாதிப்பு என்பது அனைத்து விவசாயிகளுக்கும் பொதுவானது. கூட்டுறவு வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் நலிவடைந்த நிலையில் இருப்பதால், நிறைய விவசாயிகளுக்கு இங்கு பயிர் கடன் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் தேசிய மற்றும் வணிக வங்கிகளில்தான் கடன் பெற்றுள்ளார்கள்.

அந்தக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் மட்டும்தான் தள்ளுபடி செய்யப்படும் என சொல்லாமல், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள பெரு விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும் கூட, இதை நாங்கள் மனதார வரவேற்கிறோம். நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைத் தலைவர் சுகுமாறன், ``தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் இன்னும் மூன்று மாதத்தில் முடிய இருக்கிறது. தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடர் என்பது சம்பிரதாயத்துக்காக மட்டுமே நடைபெறக்கூடியது. பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடு செய்வதென்பது எப்படி சாத்தியம் எனத் தெரியவில்லை.

விவசாய கடன் தள்ளுபடிக்கான 12,110 கோடி ரூபாய்க்கு எங்கிருந்து நிதி ஒதுக்குவார்கள் எனத் தெரியவில்லை. எனவே, தற்போதைய அறிவிப்பு வெறும் கானல் நீராக இருந்துவிடப் போகிறதோ என சந்தேகமாக உள்ளது. உண்மையாகவே கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு வந்தால் மிகுந்த மகிழ்ச்சி. தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்போம்’’ எனத் தெரிவித்தார்.