Published:Updated:

``பெட்ரோல் பங்க்ல வாழைப் பழங்கள் வித்தேன்; ஆனாலும், 10 லட்சம் நஷ்டம்!” -  புலம்பும் இயற்கை விவசாயி

குமாரசாமி
குமாரசாமி

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்களின் தற்போதைய அனுபவங்களைப் பகிர்கின்றனர்.

போதிய மழை இல்லாதது, மழையால் பயிர்கள் சேதம் என ஆண்டுதோறும் ஏதாவதோர் இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவது வாடிக்கை நிகழ்வாகிவிட்டது. இந்த ஆண்டின் புது வில்லன் கொரோனா வைரஸ். இந்த பாதிப்பால் விளைபொருள்களை விற்க முடியாமலும், உரிய விலை கிடைக்காமலும், அடுத்த பயிரை நம்பிக்கையுடன் பயிரிட முடியாமலும் தவித்துவருகின்றனர் விவசாயிகள். எந்தச் சூழலிலும் உழவுக்கும் உழைப்புக்கும் ஓய்வு கொடுக்காத விவசாயிகள், இன்று செய்வதறியாமல் கலங்கி நிற்கின்றனர். அவர்களில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்களின் தற்போதைய அனுபவங்களைப் பகிர்கின்றனர்.
கத்திரி விற்பனையில் குமாரசாமி
கத்திரி விற்பனையில் குமாரசாமி

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகிலுள்ள நாச்சிவலசு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.பி.குமாரசாமி கூறுகையில், “என்னுடையது ஆறு ஏக்கர் நிலம். ரெண்டரை ஏக்கர்ல சேனைக்கிழங்கு, அரை ஏக்கர்ல கத்திரி, மூணு ஏக்கர்ல மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டிருந்தேன். பவானி சாகர் அணை நீரும் தடையில்லாம கிடைக்குது. முதல் முயற்சியா, கடந்த ஆவணி மாசம் சேனைக்கிழங்கு பயிரிட்டேன். நல்ல வளர்ச்சி இருந்துச்சு. இது எட்டு மாசப் பயிர். சமீபத்துலதான் அறுவடை முடிஞ்சது. மொத்தம் 33 டன் கிழங்கு கிடைச்சுது. கிலோ பத்து ரூபாய்க்கு விற்கலாம்னு எதிர்பார்த்தேன். ஆனா, கொரோனா பாதிப்பால கிலோ ஆறு ரூபாய்க்குத்தான் போச்சு. சூழ்நிலை சரியில்லாததால அந்த விலைக்கே எல்லா கிழங்கையும் மொத்தமா வித்துட்டேன். அதனால பெரிசா லாபம் இல்லை. செலவுகள் போக ஓரளவுக்குத்தான் லாபம் கிடைச்சுது.

கத்திரி இப்ப அறுவடையில இருக்கு. கடைகள்ல கிலோ 50 ரூபாய்க்கு மேல விற்பனையாகுது. ஆனா, எங்ககிட்ட வியாபாரிங்க கிலோ 10 ரூபாய்க்குத்தான் கேட்டாங்க. அந்த விலை கட்டுப்படியாகாது. என்ன பண்ணலாம்னு யோசனையா இருந்தப்பதான், பக்கத்துல இருக்கிற அரச்சலூர் வேளாண் அலுவலகம் முன்புறம் தற்காலிக சந்தை அமைச்சாங்க. பக்கத்துல இருக்கிற விவசாயிங்க பலரும் சேர்ந்து சந்தையில நேரடி விற்பனை செய்ய முடிவெடுத்தோம். காலையில 6 – 9 மணிவரை அங்க நேரடி விற்பனை செய்றோம். கிலோ 20 ரூபாய்க்குனு 4 டன் கத்திரியை வித்திருக்கேன். விற்பனையும் நல்லாதான் இருக்கு. குறைவான விலைக்கு வாங்கறதால மக்களுக்கும் திருப்தி. இன்னும் ஒன்றரை டன் கத்திரி கிடைக்கும்னு எதிர்பார்க்கறேன்.

நாட்டு மாடுகள்
நாட்டு மாடுகள்

பொடிக்காளை, கன்னுக்குட்டியெல்லாம் சேர்த்து காங்கேயம் நாட்டு இனத்துல மொத்தம் 15 உருப்படிகள் இருக்கு. அதில் நாலு கறவை மாடுகள். மாட்டுச்சாணம், தொழுவுரம் பயன்படுத்தி முடிஞ்ச வரை இடுபொருள் செலவுகளைக் குறைச்சுக்கிறேன். வீட்டுக்கே வந்து பலரும் பால் வாங்கிட்டுப்போயிடுவாங்க. தினமும் ஏழு லிட்டர் பாலை, லிட்டர் 50 ரூபாய்க்கு கொடுக்கறேன். அதனால பால் விற்பனையில எந்தப் பிரச்னையும் இல்லை. மூணு ஏக்கர்ல இருக்கும் மரவள்ளிக்கிழங்கு எட்டு மாச வளர்ச்சியில இருக்கு. இன்னும் மூணு மாசம்வரை அறுவடைக்குக் காத்திருக்கலாம். அதுக்குள்ள நிலைமை சரியாகி, மரவள்ளிக்கிழங்குக்காவது நல்ல விலை கிடைக்கும்னு எதிர்பார்க்கறேன்.

கொரோனாவால மற்ற விவசாயிகளைப்போல எனக்கும் பாதிப்பு இருந்தாலும், பெருசா சிரமமில்லாத அளவுக்கு சமாளிச்சுகிட்டேன். உடனடியா விற்கவேண்டிய பயிர்களைச் சாகுபடி செஞ்ச விவசாயிகளுக்குத்தான் பெரிய பாதிப்பு. அவங்களும்கூட, சந்தையில நேரடி விற்பனையில இறங்கினா பெரிய பாதிப்பு இல்லாம ஓரளவுக்கு வருமானம் பார்க்கலாம். ஆனா, நிறைய விவசாயிங்க அந்த முடிவை எடுக்கிறதில்லை. கொஞ்சம் ரிஸ்க் எடுத்தா நஷ்டத்தைத் தவிர்க்கலாம்” என்கிறார் நம்பிக்கையுடன்.

விவசாயிங்க சந்தையில நேரடி விற்பனையில இறங்கினா பெரிய பாதிப்பு இல்லாம ஓரளவுக்கு வருமானம் பார்க்கலாம். ஆனா, நிறைய விவசாயிங்க அந்த முடிவை எடுக்கிறதில்லை. கொஞ்சம் ரிஸ்க் எடுத்தா நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.
குமாரசாமி

கொரோனா பாதிப்பால் ஈரோடு மாவட்டம் அரச்சலூரைச் சேர்ந்த விவசாயி நந்தகுமார், பெரிய சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார். வாழை விற்பனையில் 10 லட்சம் ரூபாய் வரை நஷ்டம். ஆனாலும் அதிலிருந்து விரைவில் மீண்டு, வெற்றிப் பாதைக்குத் திரும்பும் உத்வேகத்துடன் பேசினார். ``என்னுடையது 25 ஏக்கர் நிலம். நாட்டு மாடுகளும் இருக்கு. பஞ்சகவ்யா, தொழு உரம் தயாரிச்சு இப்போ மூணு ஏக்கர்ல முழுக்கவே இயற்கை முறையில கதலி ரக வாழை சாகுபடி செய்திருக்கேன். படிப்படியா இயற்கை முறைக்கு மாறிட்டு இருக்கேன். தலா மூணு ஏக்கர்ல இயற்கை மற்றும் ரசாயன முறையில கலந்து, செவ்வாழையும் தேன்வாழையும் சாகுபடி செய்திருக்கேன். கடந்த மார்ச் மாதம் மத்தியில மூணு வாழையும் அறுவடைக்குத் தயாராகிடுச்சு.

இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்குக் கேட்டாங்க. வழக்கமா 500 ரூபாய்க்கு விற்கற ஒரு தார் வாழையை, வெறும் 50 ரூபாய்க்குக் கேட்டாங்க. செலவுகளுக்குக்கூட கட்டுபடியாகாதுனு, நானே நேரடியா திருப்பூர் மார்கெட்ல கொஞ்சம் கொஞ்சமா விற்பனை செய்தேன். ஒரு தாருக்கு, சராசரியா 160 ரூபாய் கிடைச்சுது. கொரோனா பாதிப்பு இந்த அளவுக்கு பெரிசாகும்னு நான் எதிர்பார்க்கலை. வாழைப்பழங்கள் அறுவடைக்குத் தயாரானதும் அதை ரொம்ப நாள் பத்திரப்படுத்தி வெச்சிருக்க முடியாது.

நந்தகுமார் மகனுடன்
நந்தகுமார் மகனுடன்

நிலைமை ரொம்பவே மோசமானதால, உடனடியா பழங்களை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம். வேறு வழியே இல்லை! மீதமிருந்த மூணு ரக வாழைகளையும் 60 – 90 ரூபாய்க்குள்ள இடைத்தரகர்கள்கிட்ட வித்தேன். ஒவ்வொரு மரத்துக்கும் வாழைத் தார்களுக்கு முட்டுக்கொடுக்க மட்டுமே தலா 100 ரூபாய் செலவாகுது. அந்தச் செலவுகூட வாழைத் தார்களின் விற்பனை விலை கட்டுபடியாகலை. ஆனா, மார்கெட்லயும் விற்பனை நிலையங்கள்லயும் வாழைப் பழங்களின் விலை குறையவே இல்லை. தொடர்ந்து இடைத்தரகர்கள் மட்டும்தான் எல்லாச் சூழல்லயும் பயனடையிறாங்க. சராசரியா 400 – 700 ரூபாய் வரை விற்பனை செய்யும் வாழைத்தார்களை, அடிமாட்டு விலைக்கு வித்தேன். செய்த செலவுக்குக்கூட கட்டுப்படியாகாம, இக்கட்டான சூழல்ல விற்பனை செய்ற நெருக்கடிக்கு நிறைய விவசாயிகள் ஆளாகியிருக்கோம்” என்கிறார் ஆதங்கத்துடன்.

கதலி, செவ்வாழை, தேன்வாழை ரகங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட தார்களை அறுவடை செய்திருக்கிறார். மீதமுள்ள 30 சதவிகித வாழைகளை இன்னும் சில நாள்களில் அறுவடை செய்யவிருக்கிறார்.

தோட்டத்தில் செவ்வாழை
தோட்டத்தில் செவ்வாழை

திருப்பூர்ல பெட்ரோல் பங்க் ஒண்ணு வெச்சிருக்கேன். அங்கயும் வாழைப் பழங்களை விற்பனை செய்றது வழக்கம். இம்முறை அங்க 200 தார்களுக்கு மேல வித்தேன். அதுல மட்டும்தான் ஓரளவுக்கு கட்டுப்படியாகிற மாதிரி, ஒரு தாருக்கு 200 ரூபாய் வரை விலை கிடைச்சுது. இதுதான் நேரடி விற்பனையின் சாதக அம்சம். ஆனா, இந்த அளவுக்குமேல பெட்ரோல் பங்க்ல விற்பனை செய்றது சிரமம். விளைபொருள் வீணாகக்கூடாதுனு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இலவசமாகவே 200-க்கும் மேற்பட்ட தார்களைக் கொடுத்தேன். அதுல எனக்கு மனநிறைவு கிடைச்சுது.

இந்த முறை பல மாறுபட்ட முறைகள்ல விற்பனை செய்ததால துல்லியமான விற்பனை விவரங்களைக் கணக்கிடலை. ஆனா, உத்தேசமா இந்த முறை வாழை அறுவடையில 10 லட்சம் ரூபாய்க்கு மேல நஷ்டம். தற்சமயம் நானும் என்னைப்போல பிற விவசாயிகளும் நஷ்டத்திலிருந்து மீண்டுவர நீண்டகாலமாகும். செவ்வாழை மற்றும் தேன்வாழையில மட்டும் மறுதாம்பு விட முடியும். கதலியை முழுமையா எடுத்துட்டு, அடுத்து மஞ்சள் பயிரிட திட்டமிட்டிருந்தேன். சீக்கிரமே மீண்டு வந்துடுவேன்” என்று உத்வேகத்துடன் கூறுகிறார் நந்தகுமார்.

நந்தகுமார் மகனுடன்
நந்தகுமார் மகனுடன்

அறுவடை செய்த எள் வெயிலில் காய்கிறது. அறுவடைக்குத் தயார் நிலையிலுள்ள மரவள்ளிக்கிழங்குகள் நிலத்தடியிலிருந்து மேலே வருவதற்குக் காத்திருக்கின்றன. ஆனால், உரிய முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறார் செந்தில்குமார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகிலுள்ள நடுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர், தற்போதைய பொருளாதாரச் சூழலைச் சமாளிக்க ஆடுகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

̀̀`முழுக்கவே குத்தகை நிலம்தான். கொஞ்சம்கூட ரசாயன உரம் சேர்க்காம இயற்கை விவசாயம்தான் செய்றோம். போட்டோகிராஃபி தொழில் பார்த்துக்கிட்டே, முழுநேரமா நானும் அப்பாவும்தான் விவசாயத்தைப் பார்த்துக்கறோம். ஒன்றரை ஏக்கர்ல எள் பயிரிட்டிருந்தேன். காய் பிடிக்கிற நேரத்துல தண்ணிப் பிரச்னை அதிகமாகிடுச்சு. வெயிலும் அதிகம். நிறைய சவால்களை மீறி ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் அறுவடை முடிஞ்சது. ஆயிரம் கிலோ எதிர்பார்த்த நிலையில, 500 கிலோ எள்ளுதான் கிடைச்சுது. இதுலயே எனக்குப் பெரிய பாதிப்பு. போதாக்குறைக்கு கொரோனா பாதிப்பால, அறுவடை செஞ்ச எள்ளுக்கு உரிய விலை கிடைக்கலை. விற்பனை செய்யாம காயவெச்சிருக்கேன்.

மூணேகால் ஏக்கர்ல நடவுசெஞ்ச மரவள்ளி, இப்போ 11 மாதம் ஆச்சு. 10 மாசத்துலயே அறுவடை செஞ்சு, சிப்ஸ் கடைக்காரங்களுக்கு கொடுத்திருக்கலாம். அப்படிச் செய்தா கூடுதல் விலையும் கிடைக்கும். ஆனா, சிறு கிழங்குகளை எடுத்துக்க மாட்டாங்க. அதனால சேதாரம் நிறைய இருக்கும்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

அந்தியூர்ல இருக்கும் ஜவ்வரிசி மில்லுக்குதான் கிழங்கை விற்பனை செய்யலாம்னு இருக்கேன். மொத்தக் கிழங்கும் எந்தத் தரத்தில் இருந்தாலும் ஆலைக்காரங்க வாங்கிப்பாங்க. டன் 12,000 வரைக்கும்கூட முந்தைய காலங்கள்ல வித்திருக்கேன். இப்ப கொரோனா பாதிப்புல டன் ஏழாயிரத்துக்குத்தான் கேட்கறாங்க.

இது ஒரு வருஷ உழைப்பு. இதுல கிடைக்கிற வருமானத்தைவெச்சுதான் அடுத்தப் பயிரை சாகுபடி செய்யணும். எனவே, அந்த விலை கட்டுப்படியாகாது. அதனால இன்னும் ஒருமாதம் காத்திருக்கலாம்னு மொத்தக் கிழங்கையும் அறுவடை செய்யாம இருக்கேன். இருக்கிற கொஞ்சம் ஆடுகள்ல, செலவுத் தேவைக்கு நாலு ஆடுகளை வித்துட்டேன்.

அறுவடையான எள்
அறுவடையான எள்

டன்னுக்கு ஒன்பதாயிரம் எதிர்பார்க்கறேன். அதைவிட ஆயிரம் ரூபாய் குறைச்சுக் கொடுத்தாலும்கூட கொடுத்துடுவேன். கிணத்துத் தண்ணி, ஆத்துத் தண்ணி, ஆழ்துளைக் கிணத்துத் தண்ணினு தண்ணி மாறுனாகூட விளைச்சலும் கிழங்கின் தரமும் மாறுது. இந்தச் சாவல்களை மீறி அறுவடை செஞ்சா, உரிய விலை கிடைக்காதது கூடுதல் மன உளைச்சலை உண்டாக்குது. இப்ப ஏக்கருக்கு 20 டன் வீதம், மூணேகால் ஏக்கருக்கு 60 – 65 டன் மரவள்ளிக்கிழங்கு கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். கொரோனா பாதிப்பால வேலையாட்களும் பறிப்புக்கு வர்றதுக்குப் பயப்படுறாங்க. இந்த முறை மரவள்ளிக்கிழங்கை அறுவடை செஞ்சு, கட்டுபடியாகிற விலைக்கு விற்பனை செய்றது குதிரைக்கொம்பா ஆகிடும்போல தெரியுது. சுத்துவட்டாரத்து பல விவசாயிங்க 13 மாசமாகியும் மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்யாம இருக்காங்க. இதுக்கெல்லாம் அரசாங்கம் உடனடியா தீர்வு ஏற்படுத்தணும்” என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு