மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல், கழகக் கிடங்குகளில் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் கழக அரவை முகவர்களை (முழு நேர, பகுதி நேர), மற்றும் கழகத்தில் இணையாத தனியார் நெல் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முடிவு செய்துள்ளது.

எனவே, ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்பக் கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகம், நாகப்பட்டினம், அலுவலக தொலைபேசி எண்ணில் 04365-251383 தொடர்பு கொள்ளுமாறு மயிலாடுதுறை கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். இச்செய்தி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுபற்றி காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் குரு.கோபி கணேசனிடம் பேசினோம்.
"பெரும்பாலான அரசு நெல் அரவை தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் பழுதாகிக் கிடக்கின்றன. உதாரணத்திற்கு மயிலாடுதுறை அருகேயுள்ள சித்தர்காடு நெல் அரவை தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்கள் பழுதாகிக் கிடக்கின்றன. '10 கோடி செலவு செய்தால்தான் இது இயங்கும்' என்று வேளாண்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுபோலதான் மற்ற இடங்களிலும் உள்ளது. நிதிநிலை மோசமாக உள்ள இந்தக் காலகட்டத்தில் அரசு இப்படியோர் முடிவு எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆனால் கொள்முதல் நிலையங்கள் தனியாரிடம் சென்றால் அவர்கள் தரமான நெல்லை மட்டும்தான் எடுப்பார்கள். இப்போது ஈரப்பதம் 17 சதவிகிதம் என்பதை அவர்கள் குறைத்து 15 எனக் கொண்டு வரலாம். விலையை குறைத்து எடுக்கலாம். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெல்லை எடுக்க மறுக்கலாம். அந்த நெல்லை விலையை குறைத்து வேறொரு வியாபாரி மூலம் கொள்முதல் செய்யவும் வாய்ப்புண்டு. இதுவரை அரசு பாதுகாப்பிலிருந்த விவசாயிகள் இனி தனியாரிடம் சிக்கி வாழ்க்கையை தொலைக்கவும் நேரலாம். அதனால் விவசாயிகள் பெரியளவில் பாதிக்கப்படலாம். இதுபற்றி அரசாணை வந்த பிறகுதான் முழுமையான கருத்தை சொல்ல முடியும்" என்றார்.
இதுபற்றி அரசு தரப்பின் விளக்கம் அறிய மயிலாடுதுறை கலெக்டர் கொடுத்த நாகை நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்புகொண்டும் பலனில்லை.