Published:Updated:

`ஆடுகளை ஏழைகளின் ஏடிஎம்னு ஏன் சொல்றோம்ன்னா?!' - கோடிகளில் வணிகம் நடக்கும் எட்டயபுரம் சந்தை

தென் மாவட்டங்களில் உள்ள ஆட்டுச்சந்தைகளில் எட்டயபுரம் வாராந்திர ஆட்டுச்சந்தை மிகவும் புகழ்பெற்றது. விரும்பும் இன ஆடுகள் திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமன்றி, விற்பனையிலும் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால்தான் விவசாயிகள், ஆட்டு வியாபாரிகள் அதிகளவில் இங்கு கூடுகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட மகாகவி பாரதியார் பேருந்து நிலையத்திற்குப் பின்புறம் இயங்கி வருகிறது இந்த ஆட்டுச்சந்தை. வாரந்தோறும் சனிக்கிழமையில் இச்சந்தை இயங்குகிறது. வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே ஆடுகள் வரத் துவங்கிவிடும். சனிக்கிழமை காலை 7 மணிக்கு துவங்கும் இச்சந்தை மதியம் 12 மணி வரையிலும் நடைபெறுகிறது. சாதாரண நாட்களில் ரூ.50 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலும், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், ரம்ஜான், பக்ரீத் போன்ற விஷேச நாட்களில் 2 முதல் ரூ.3 கோடி ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.

எட்டயபுரம் ஆட்டுச்சந்தை
எட்டயபுரம் ஆட்டுச்சந்தை

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை என தென் மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள், ஆட்டு வியாபாரிகள் இங்கு வந்து செல்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எட்டயபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தார், ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாக்களில் முழுமையாக மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது.

மழையை மட்டுமே நம்பிய இந்த விவசாயத்தில், போதிய மழை பெய்யாவிட்டால் விவசாயிகளுக்கு நஷ்டம்தான். அதனால், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மானாவாரி விவசாயத்தை மட்டும் நம்பியிருக்காமல் உப தொழிலாக கோழி, ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில், மாடுகளை விட ஆடு, கோழிகள் வளர்ப்புதான் அதிகம் நடந்து வருகிறது. இந்தப் பகுதிகளில் சென்றாலே வீட்டுக்கு வீடு குறைந்தபட்சம் ஐந்து முதல் அதிகபட்சமாக 100 ஆடுகள் வரை வளர்த்து வருகிறார்கள்.

ஆட்டுச்சந்தை
ஆட்டுச்சந்தை

பெரும்பாலும் மேய்ச்சல் முறை வளர்ப்புதான். வெளி மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக வரும் ஆடுகளை விட தூத்துக்குடி மானாவாரிப் பகுதிகளில் இருந்தது விற்பனைக்கு வருகிற ஆடுகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்.

விருதுநகரைச் சேர்ந்த விவசாயி கருப்பசாமியிடம் பேசினோம். ``இருபது வருஷமா என்னோட ஆடுகளை இந்தச் சந்தையிலதான் விற்பனை செஞ்சுட்டு இருக்கேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கன்னி ஆடு, கொடி ஆடு, கன்னி ஆட்டுல செங்கன்னி, பால்கன்னி, கொடி ஆட்டுல கரும்போர், சிவலைப்போர், செம்மறியாடு வகையில செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு, வெம்பூர் பொட்டுப்போர், ராமநாதபுரம் வெள்ளை, சேலம் கறுப்பு, கோயமுத்தூர் குரும்பை, கச்சகட்டி, மேச்சேரி ஆகிய இன ஆடுகளோட வரத்து அதிகமா இருக்கும். பிற ஆட்டுச்சந்தைகளில் கிடைக்காத இன ஆடுகளைக்கூட இந்தச் சந்தையில எளிதா வாங்கிப் புடலாம். சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாசங்கள்ல கோயில் திருவிழாக்கள் அதிகமா நடக்கும்.

கருப்பசாமி, பெருமாள்சாமி
கருப்பசாமி, பெருமாள்சாமி

அந்த மாசங்கள்ல சுத்த கறுப்பு கிடா ஆட்டுக்கும் சுத்த செவலை கிடா ஆட்டுக்கும் அதிகமான கிராக்கியா இருக்கும். இதுக்காக கூடுதல் விலை கொடுக்ககூடத் தயங்க மாட்டாங்க. ஆவணி, புரட்டாசி, மாசி, பங்குனி மாசங்கள்ல கரும்போர், செவலைப்போர் ஆடுகளுக்கு கிராக்கி இருக்கும்.

பக்ரீத், ரம்ஜான் பண்டிகை காலங்கள்ல வெள்ளாட்டை விட செம்மறி ஆடுகள்தான் குர்பானிக்காக அதிகம் விற்பனையாகும். உயிர் எடையாவும் விற்பனை செய்யுறோம். குட்டிகளை உருப்படிக் கணக்குல விற்பனை செய்யுறோம். ஒரு ஆட்டை விலை பேசிட்டோம்னா அந்த ஆட்டை வாங்குறவர் ஆட்டோட முதுகுப் பகுதியில கொஞ்சம் முடியை வெட்டி அடையாளம் போட்டு விடுவார்” என்றார்.

ஆடு விற்பனை
ஆடு விற்பனை
மாதம் ரூ.1 லட்சம் லாபம்!
கொடை கொடுக்கும் 
கொட்டில் முறை ஆடு வளர்ப்பு!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெருமாள்சாமி, ``மாடு மறு வருஷம்… ஆடு அந்த வருஷம்னு சொல்லுவாங்க. மாடு வளர்த்தா அடுத்த வருஷத்துல இருந்துதான் பலன் கிடைக்கும். ஆனா, ஆடு வளர்த்தா அந்த வருஷத்துலயே பலன் கிடைக்கும். பசு, எருமை போன்ற கால்நடைகளை வளர்க்க முடியாத நிலையில கூட ஆடுகளை வளர்க்கலாம். வறண்ட நிலத்துலகூட மேய்ச்சல் முறையில ஆடுகளை வளர்க்க முடியும். கிராம, நகரங்கள்ல ஆட்டிறைச்சியின் தேவை அதிகரிச்சுட்டு வருது.

ஆட்டின் இறைச்சிக்கு மக்கள் மத்தியில் தனி இடம் இருப்பதுதானல ஆடு வளர்ப்புனால நல்ல லாபம் பார்க்க முடியும். விவசாயிகளோட அவசரத் தேவைக்குகூட ஒன்னு ரெண்டு ஆடுகளை வித்து அந்தத் தேவையைப் பூர்த்தி செஞ்சுக்கலாம். யாருகிட்டயும் வட்டிக்கோ, கை மாத்தாவோ கடன் வாங்கிக் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்ல. யாரையும் நம்பி இருக்க வேண்டியதில்ல. ஆடு வளர்ப்பு வருமானத்திலதான் பிள்ளைகளைப் படிக்க வச்சிருக்கேன். மண்ணு வீட்டை கான்கிரீட் வீடாக் கட்டியிருக்கேன்.

எட்டயபுரம் ஆட்டுச்சந்தை
எட்டயபுரம் ஆட்டுச்சந்தை
புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தை... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய விற்பனை!

எந்தக் கஷ்டமும் இல்லாம குடும்பத்தை நடத்தியிருக்கேன். குட்டி போட்ட 6 முதல் 7 மாசத்துல வித்தா நல்ல விலை கிடைக்கும். இதனாலதான் ஆடுகளை `ஏழைகளின் பசு’, `ஏழைகளின் ஏ.டி.எம்’னு சொல்றாங்க” என்றார்.

ஆடுகள் விற்பனையைப் போலவே ஆடு வளர்ப்புக்குத் தேவையான மேய்ச்சல் கம்பு, கயிறு, புல் வெட்டும் கதிர் அரிவாள், மணி, சலங்கை, பெல்ட் ஆகியவற்றின் விற்பனையும் வாரந்தோறும் களை கட்டுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு