Published:Updated:

தமிழக வேளாண் பட்ஜெட்: `பசுமை விகடன் சொன்னதும் அரசு செய்ததும்!' - நினைவுகூரும் விவசாயிகள்

Farmer (Representational Image) ( Photo: Vikatan / Vijayakumar.M )

தமிழ்நாட்டின் முதல் வேளாண் பட்ஜெட்டிற்காக `பசுமை விகடன்' எடுத்த முயற்சிகளை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார்கள் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.

தமிழக வேளாண் பட்ஜெட்: `பசுமை விகடன் சொன்னதும் அரசு செய்ததும்!' - நினைவுகூரும் விவசாயிகள்

தமிழ்நாட்டின் முதல் வேளாண் பட்ஜெட்டிற்காக `பசுமை விகடன்' எடுத்த முயற்சிகளை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார்கள் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.

Published:Updated:
Farmer (Representational Image) ( Photo: Vikatan / Vijayakumar.M )

14.8.2021.

தமிழக விவசாயிகள் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனை நாள். அன்றைய தினம் நம் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியிலும் வெற்றிக்களிப்பிலும் திளைத்திருந்தார்கள். தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைக்கு எனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தங்களுக்கு உரிய மரியாதையையும் முக்கியத்துவத்தையும் ஆட்சியாளர்கள் தர மறுக்கிறார்களே... மற்ற துறையினருக்கு நிகராக, சமூக அங்கீகாரமும் மதிப்பும் தங்களுக்குக் கிடைப்பதில்லையே என விவசாயிகள் மனம் நொந்து மருவி வந்தநிலையில், தற்போது தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மைக்கென பிரத்யேகமான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகளின் வாழ்க்கையில் உடனடியாக மாற்றம் நிகழ்ந்து விடாது என்றாலும், இது ஒரு நல்ல தொடக்கம்.

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021

கடந்த காலங்களில் வகுக்கப்பட்ட தமிழக அரசின் பொது பட்ஜெட்களில், விவசாயம் என்பது ஒரு அங்கமாக மட்டுமே இடம்பெற்றதால், வேளாண் வளர்ச்சி மற்றும் உழவர்களுக்கு உண்மையாகப் பயனளிக்கக்கூடிய திட்டங்களில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. ஆனால், வேளாண்மைக்கென தனி பட்ஜெட் உருவாக்கப்படும்போது, அதிக நிதி ஒதுக்கப்படுவதோடு, கூடுதல் கவனத்துடன் சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டைக் காட்டிலும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள தனி வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பல அம்சங்கள் விவசாயிகளின் பாராட்டுகளை பெற்றுள்ளன. இதில் குறைபாடுகள் விமர்சனங்கள் இருந்தாலும்கூட பெரும்பாலான விவசாயிகள் இதனை வரவேற்றுள்ளார்கள்.

இதற்காக `பசுமை விகடன்' எடுத்த முயற்சியையும் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார்கள் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள். பசுமை விகடன் மூலமாக தாங்கள் முன் வைத்த பரிந்துரைகளுக்கு, பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``தமிழ்நாட்டில் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் உருவாவதற்கே பசுமை விகடன்தான் முதன்மையான காரணம். விவசாயிகள் பெரும்பான்மையாக வாழும் நம் நாட்டில் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை, மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால்தான், வேளாண்மைத்துறை வளர்ச்சி அடைந்து, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மேம்படும் எனவும் பசுமை விகடன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. விவசாயிகள், பொருளாதார நிபுணர்கள் எனப் பல தரப்பினரும் பசுமை விகடன் மூலமாக இதற்காகக் குரல் கொடுத்து வந்தார்கள். இதனால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாகவே 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் இதை வாக்குறுதியாக அளித்தது.

சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

தி.மு.க ஆட்சி அமைத்த நிலையில், வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியானதுமே, இதில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டும் எனப் பசுமை விகடன் ஏற்பாட்டில் விவசாயிகள் ஒருங்கிணைந்து, பரிந்துரைகளை முன் வைத்தோம். குறிப்பாக, இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை தர வேண்டும் எனத் தீர்க்கமாக வலியுறுத்தினோம். இவற்றைத் தமிழக முதல்வர், நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல பசுமை விகடன் தொடர் முயற்சிகளையும் மேற்கொண்டது. அதுமட்டுமல்லாமல், வேளாண் பட்ஜெட் தொடர்பாக, தமிழக அரசு விவசாயிகளிடம் விரிவான ஆலோசனைகளை பெற வேண்டு எனவும் பசுமை விகடன் வலியுறுத்தியது.

இதன் பலனாக, தமிழக வேளாண் அமைச்சர், வேளாண்மைத்துறைச் செயலாளர் உள்ளிட்டவர்கள், விவசாயிகளை நேரில் சந்துத்து, ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர். இயற்கை வேளாண்மை, பாரம்பர்ய நெல் ரகங்கள் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் எனப் பெரும்பாலான விவசாயிகள் வலியுறுத்தினார்கள். இந்நிலையில்தான் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில், இயற்கை வேளாண்மைக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுள்ளது. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம், நெல் ஜெயராமன் பெயரில், பாரம்பர்ய நெல் ரகங்கள் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

வேளாண் பட்ஜெட்
வேளாண் பட்ஜெட்

வேளாண்மைக்கு எனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால்தான், பயிர் காப்பீடு திட்டத்துக்கு இதுவரை இல்லாத வகையில், மிகவும் அதிகமாக 2,327 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் மழைக்காலங்களில் சந்நித்து வரும் பிரச்னைகளை பசுமை விகடன் தொடர்ச்சியாகப் பதிவு செய்துகொண்டே இருந்தது. தற்போதைய பட்ஜெட்டில், நெல் கொள்முதல் நிலையங்களில் உலர் களம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சோலார் பம்புசெட் வழங்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றாலும்கூட, இந்த பட்ஜெட்டை அனைத்து விவசாய அமைப்புகளும் பாராட்டியுள்ளன. வேளாண்மைக்கான தனி நிலை அறிக்கையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் மத்திய அரசும் தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நிலையை பசுமை விகடன் உருவாக்கியுள்ளது'' என்றார்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், ``அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பசுமை விகடன் பாலமாக இருந்ததால்தான், தமிழ்நாட்டில் தனி வேளாண் பட்ஜெட் சாத்தியமாகியுள்ளது. இதில் இயற்கை வேளாண்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் மகத்துவத்தையும் பசுமை விகடன் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்ததால்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. ரசாயன இடுபொருள்களின் செலவைக் குறைத்து, விவசாயிகளைக் கடனில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.

இளங்கீரன்
இளங்கீரன்

நஞ்சில்லா உணவு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் ஆகியோரை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பயிற்சி வகுப்புகளை நடத்தியது பசுமை விகடன். இதனால் ஏராளமான விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறினார்கள். இந்த தாக்கத்தின் காரணமாகவே வேளாண் பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தர வேண்டுமென கோரிக்கை வலுப்பெற்றது. தமிழக அரசு இதைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டதால்தான் பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பாரம்பர்ய நெல் ரகங்கள் குறித்தும் பசுமை விகடன் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால்தான், இவைகளை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் ஓர் மையத்தை உருவாக்கி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பனை மரங்களால் ஏற்படும் பலவிதமான பலன்கள் குறித்து பசுமை விகடன் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தது. இது பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியது. பனைமரங்களை வெட்ட தமிழக அரசு தற்போது தடை விதித்திருப்பதோடு, பனையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் முக்கிய உணவுப் பொருளான கருப்பட்டியை ரேஷன் கடைகளில் விநியோகிக்க, அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காகத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதற்கு முன்பாக, இதற்குக் காரணமாகத் திகழ்ந்த பசுமை விகடனுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

ஈசன் முருகசாமி
ஈசன் முருகசாமி

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, ``தமிழ்நாடு அரசு `வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என்று அறிவித்தவுடன் பசுமை விகடன் சார்பில் உழவர்கள் சங்கத் தலைவர்களை ஒருங்கிணைத்து கருத்துகளைக் கேட்டனர். இதில் இடம்பெற வேண்டிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, கொள்கை முடிவுகள் குறித்த கருத்துகள் சேகரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டது. இயற்கை வேளாண்மைக்குத் தனி கொள்கை வகுக்க வேண்டும். உழவர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவுப் பொருள்களையும் உணவுக் கொள்முதல் மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும், உயர்மின் கோபுரம், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு ஆகிய பிரச்னைகளில் உழவர்களின் நில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதற்காகத் தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும், தரம் பிரித்தல், மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்த பயிற்சி அளிக்க தனி அமைப்பு உருவாக்க வேண்டும், இளம் உழவர்களுக்கு வேளாண் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் பசுமை விகடன் மூலமாக முன்வைக்கப்பட்டது. இதில் வேளாண் உயர்மட்ட குழு அமைக்கப்படும், தரம் பிரித்தல் - மதிப்புக் கூட்டுதல் - சந்தைப்படுத்துவதற்கு தனி அமைப்பு - வேளாண் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டிருப்பதை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.

தி.மு.க, தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4,000, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 அளிக்கப்படும் என வாக்குறுதி வழங்கியது. அது நிறைவேற்றப்படாதது சற்று வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.

பஞ்சகவ்யா சித்தர் மருத்துவர் நடராஜன், ``நம்மாழ்வார் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும். பாரம்பர்ய விதைகள் காக்கப்படும்னு சொல்லியிருக்காங்க. இது, பசுமை விகடன் தொடர்ந்து வலியுறுத்திய விஷயங்களில் முதன்மையானது. வருடாவருடம், `விதைச் சிறப்பிதழ்' கொண்டு வந்து, தமிழகம் முழுக்க பாரம்பர்ய விதைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதில், பசுமை விகடனின் பங்கு அளப்பரியது. நம்மாழ்வாரும், `விதைகளே பேராயுதம்' என்று சொல்லியிருக்கிறார். அதேபோல், வீட்டுத்தோட்டம் பற்றி பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் என்பதை பட்டித்தொட்டியெங்கும் தொடர் கட்டுரைகள், காணொளிகள் மூலம் கொண்டு சென்றது பசுமை விகடன்தான். அரசு கவனத்துக்கும் பசுமை விகடன் இந்த விசயத்தைத் தொடர்ந்து கொண்டு சென்றது.

அதேபோல், சிறுதானியங்களை ரேஷன் கடைகளில் வழங்க நினைப்பது, பனைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. `பனையே துணை'னு சொல்வாங்க. அப்படிப்பட்ட, பனையின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் வாயிலாக விவசாயிகளுக்கும் அரசுக்கும் பசுமை விகடன் உணர்த்தி வந்தது. அதன் விளைவு, இப்போது பட்ஜெட்டில் பனையைப் பாதுகாக்கும் அம்சங்கள் அறிவிக்கப்பட்டிருக்கு. அதேபோல், இயற்கை இடுபொருள்களுக்கு மானியம் என்பதை பசுமை விகடன்தான் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வந்தது. அதேபோல், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பது குறித்த பயிற்சியை ஒவ்வொரு ஒன்றியம் தோறும் அரசு கொடுக்கணும். பசுமை விகடனோடு இணைந்து, இந்த பயிற்சியை அரசு முன்னெடுக்கலாம். அதேபோல், உழவர் சந்தையில் இயற்கை காய்கறிகளுக்கு தனி இடம் என்பதையும், பசுமை விகடன் மட்டும்தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. `இளைஞர்களுக்கு வேளாண்மை பயிற்சி அளிக்கப்படும்' என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பஞ்சகவ்யா நடராஜன்
பஞ்சகவ்யா நடராஜன்

இன்று தமிழகத்தில் வேளாண்மை செய்ய படித்த இளைஞர்களும், ஐ.டி துறையில் இருக்கும் இளைஞர்களும் வர்றாங்கன்னா, அதுக்கு முக்கியக் காரணம் பசுமை விகடன் ஏற்படுத்திய பாதிப்புதான். அதனால், அரசு இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சி கொடுக்கும்போது, பசுமை விகடன் குழுவையும் இணைத்துக்கொண்டு செய்யலாம். ஏனென்றால், அதுசம்பந்தமான வழிமுறைகளையும், அறிவுடைய ஆள்களையும் பசுமை விகடன் கைவசம் வைத்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, `ஆந்திரா, கர்நாடகாவில் உள்ளதுபோல் தமிழகத்திலும் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவிக்கணும்'னு பசுமை விகடன்தான் தொடர் முழக்கம் செய்து வந்தது. அதன் விளைவாக, இப்போது வெற்றிகரமாகத் தமிழகத்தில் முதன்முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், ``விவசாயிகள் மற்றும் பசுமை விகடன் தொடர்ச்சியாக முன்வைத்த பல கோரிக்கைகள் வேளாண் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, இயற்கை விவசாயத்துக்கென தனிப் பிரிவு, சிறுதானியங்கள், வேளாண் விளைபொருள்கள் மதிப்புக் கூட்டுதல், பாரம்பர்ய விதைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். விவசாயத்தில் 50 சதவிகிதத்துக்கு மேல் மானாவாரி விவசாயம் நடைபெறும் நிலையில், இதற்கு ஒதுக்கப்படும் நிதியும் 50 சதவிகித அளவுக்கு இருக்க வேண்டுமெனக் கேட்டிருந்தோம். அந்தளவுக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.

அறச்சலூர் 
ரா.செல்வம்
அறச்சலூர் ரா.செல்வம்

ஆனால், மானாவாரி விவசாயம் மேம்பாட்டுக்காக சிலவற்றைக் கையில் எடுத்திருக்கிறார்கள். சிறு, குறு விவசாயிகளுக்கான அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். பாரம்பர்ய நெல் ரகத்தில் பயிர் விளைச்சல் போட்டிகள் கேட்டிருந்தோம். அது ஏற்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே விவசாயிகள் எதிர்பார்த்த பல கோரிக்கைகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகள் எல்லாவற்றையும் உடனே செய்துவிட முடியாது என்பதை நாங்கள் உணர்கிறோம். தற்சமயம் ஓட்டைப் பானையில் இருந்து தண்ணீரை அள்ளி கொடுக்கக்கூடிய இடத்தில்தான் தமிழக அரசு இருக்கிறது. இருப்பினும் தற்போதைய பட்ஜெட்டில் விவசாயத்துக்கான நீண்டகால தொலைநோக்கு பார்வைகளைப் பார்க்க முடிகிறது.

மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் மாநில அரசின் பட்ஜெட்டின் போது வேளாண்மைக்கென சிறப்புக் கவனம் எடுத்து பசுமை விகடன் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்ய வேண்டும். மேலும், பட்ஜெட்டில் விவசாய நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ளவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்கின்ற கூடுதல் பொறுப்பும் இப்போது பசுமை விகடனுக்கு வந்திருக்கிறது” என்றார்.

ஆறுபாதி கல்யாணம்
ஆறுபாதி கல்யாணம்

தேசிய தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் அமைப்பாளர் ஆறுபாதி கல்யாணம், ``கடந்த 14 ஆண்டுகளில் பசுமை விகடன் பிரமிக்கத்தக்க சாதனைகளைச் செய்திருக்கிறது. குறிப்பாக, இயற்கை விவசாயத்தைப் பரவலாக விவசாயிகளுக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராக எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாயிகளின் தோளோடு தோள் நின்று பசுமை விகடன் துணை புரிந்திருக்கிறது. விவசாயிகளின் வெற்றிக் கதைகளைத் தொடர்ந்து பிரசுரித்து, விவசாயத்தின் மீது மற்ற தரப்பினருக்கு மதிப்பையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது தமிழகத்தில் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி. தற்போது 10 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள், அடுத்த பத்து ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதையும் வரவேற்கிறோம்’’ என்றார்.

முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமி, `` `பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் `உயர் விளைச்சல்’ என்ற ஒற்றை நோக்கத்துடன் வீரிய விதை, ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகள்… என அரசே ஊக்குவித்ததன் விளைவுதான் இன்று மண்வளம் குறைந்து, மகசூல் குறைந்து விவசாயமே தலை குனிந்துவிட்டது. ரசாயன விவசாயத்தின் மோகத்தில் மூழ்கியிருந்த விவசாயிகளையும் விவசாயத்தையும் மீட்க, சரியான நேரத்தில் வெளியானதுதான் பசுமை விகடன். நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாய தொழில்நுட்பத்தையும் கருத்துகளையும் விவசாயிகள் மத்தியில் சென்றடையச் செய்தது பசுமை விகடன்தான்.

விவசாயிகளின் நலன், விவசாய மேம்பாடு எனக் கடந்த 14 வருடங்களாக பசுமை விகடன் செய்து வரும் களப்பணிகள் ஏராளம். `விவசாயத்துக்கென தனி பட்ஜெட்டை அறிவிக்க வேண்டும்’ என விவசாயிகள் சொல்லி வந்தாலும் அதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று பல பரிந்துரைகளை முன் வைத்துள்ளது பசுமை விகடன்தான். மத்திய அரசின் முந்தைய வேளாண் பட்ஜெட்டில் சில பரிந்துரைகள் ஏற்கப்பட்டது. தற்போது தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் பல பரிந்துரைகளும் ஏற்கப்பட்டுள்ளன.

புளியங்குடி அந்தோணிசாமி
புளியங்குடி அந்தோணிசாமி

பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும், பனை மேம்பாட்டு இயக்கம் அமைக்கப்படும், ரேஷன் கடைகளில் பனைவெல்லத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற முக்கியமான அம்சங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் மாநில மரமான பனையைக் காக்க தற்போதைய அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதேபோல, `நம்மாழ்வார்’ பெயரில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் `நம்மாழ்வார் ஆராய்ச்சி மையம்’ அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது சிறப்பானது. எலுமிச்சை சாகுபடி நிறைந்த, எங்கள் தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சைக்கும் நெல்லிக்கும் முக்கியத்துவம் அளித்து விதை முதல் சந்தைப் படுத்துதல் வரை அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு எங்கள் பகுதி விவசாயிகளை ஊக்கப்படுத்தியுள்ளது.

பண்ணைக்குட்டைகள் அமைத்தல், பாசனக் கால்வாய்களைத் தூர் வாருதல் குறித்த அறிவிப்பும் முக்கியமானது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஒவ்வோர் அறிவிப்பையும் உன்னிப்பாகக் கவனித்தால், கடந்த 14 வருடங்களாகப் பசுமை விகடனில் வெளியான தொழிநுட்பக் கட்டுரைகள், விமர்சனங்கள், கோரிக்கைகளின் சாராம்சமே இந்த பட்ஜெட் என்பது புரியும்’’ என்றார்.

அனந்து
அனந்து

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, ``மரபு விதைகளைப் பாதுகாப்பதற்கும், பரவலாக்குவதற்கும் பசுமை விகடன் சார்பில் கேட்டிருந்தோம். அதன்படி பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாத்து பார்வைக்குட்படுத்தி பேணிக் காக்கிற பொறுப்பு வேளாண்மைத் துறைக்கு உண்டு என்று பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. உழவர் சந்தையை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டிருந்தோம். அதன்படி முதற்கட்டமாக 50 உழவர் சந்தைகளைத் தேர்ந்தெடுத்து ஆராய்ந்து அதற்கான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது. அதையும் வரவேற்கிறோம்” என்றார்.

ரமேஷ் கருப்பையா
ரமேஷ் கருப்பையா

சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா, ``வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள் பசுமை விகடன் பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருப்பவை. அதை அடிப்படையாகக் கொண்டு பல விஷயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மானிய கோரிக்கை விவாதத்துக்கு பிறகே அறிவிப்புகளுக்கு எவ்வளவு நிதி என்ற விவரங்கள் தெரிய வரும்” என்றார்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo