Published:Updated:

`நெல் கொள்முதல் பிரச்னையைத் தீர்க்க அரசு இதையாவது செய்யலாம்!' - அரசுக்கு விவசாயிகளின் யோசனை

நெல் மூட்டைகள்
நெல் மூட்டைகள்

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்திருக்கிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் முன்பட்ட கோடைப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. விவசாயிகள் அறுவடைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இதனை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள். நெல் கொள்முதலில் சரியான திட்டமிடல் இல்லாததால், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்திருக்கிறார்கள்.

நெல் மூட்டைகள்
நெல் மூட்டைகள்
நெல் கொள்முதலில் லஞ்சம்; கேள்வி கேட்ட நிருபரை `கிறுக்கு’ ஆக்கிய அமைச்சர்!

தஞ்சை மாவட்டத்தில் கோடை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல்லை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை கொள்முதல் செய்ய, தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் 193 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு நாள்தோறும் 800-1000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில நாள்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையங்களிலிருந்து முறையாக, சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை.

இதனால் இங்குள்ள கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. புதிதாக கொள்முதல் செய்யப்பட வேண்டிய நெல்மூட்டைகளை அடுக்கி வைக்க முடியாத அளவுக்கு இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இப்பிரச்னையினால் பல கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்ததால், நெல் தரமிழக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலைப்படுகிறார்கள். குறிப்பாக, கோவிலூர், கோயில்வெண்ணி, காட்டூர், சடையார்கோவில், நெய்வாசல், வாண்டையார் இருப்பு, பொன்னாப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் 10-15 ஆயிரம் மூட்டைகள் தேங்கியுள்ளன. புதிதாக கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க போதிய இடமில்லாததால் நெல் கொள்முதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

விவசாயி பக்கிரிசாமி
விவசாயி பக்கிரிசாமி

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவிலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான பக்கிரிசாமி, ``கொள்முதல் செய்யும் நெல்மூட்டைகளை அடுக்கி வைக்க போதுமான இடமில்லாததால நெல் கொள்முதல் செய்யும் பணியை தற்காலிகமாக நிறுத்தியிருக்காங்க. இப்ப கோடை மழை பேஞ்சிக்கிட்டு இருக்கு. நெல் மூட்டைகளைப் பாதுகாக்க, டி.என்.சி.எஸ்.சி நிர்வாகம் படுதாக்களைக்கூட வழங்கவில்லை. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த ஆண்டு நெல் கொள்முதல்ல முறையான திட்டமிடல் இல்லாததுதான் இதுக்கு முக்கியமான காரணம். சேமிப்பு கிடங்குகள்ல இருந்து நெல்லை, அரிசி ஆலைகளுக்கு முறையாக அனுப்பலை. இதனால், நெல் கொள்முதல் நிலையங்கள்ல இருந்து சேமிப்புக் கிடங்குகளுக்கு நெல்லை கொண்டு போகமாட்டேங்குறாங்க. கோடை நெல் சாகுபடியை பொறுத்தவரைக்கும், ஒரே சமயத்துல குறுகிய நாள்கள்லயே விவசாயிகள்ட்ட இருந்து அதிகமான நெல் கொள்முதலுக்கு வந்துடும். இந்தப் பிரச்னைகளை தீர்க்க, கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு பகுதியிலயுமே கூடுதலாக்கணும். அதிகமாக தேங்கிக்கிடக்கக்கூடிய நெல் மூட்டைகளை சேமிச்சி வைக்க, தற்காலிக மாற்று ஏற்பாடாக, அந்தந்த பகுதிகள்ல உள்ள கோவில்கள், அரசு அலுவலக கட்டடங்கள். கல்யாண மண்டபங்களை பயன்படுத்திக்கலாம்’’ என யோசனை தெரிவித்தார்.

நெல்
நெல்
`32.55 லட்சம் MT நெல் கொள்முதல்; அரசுக்கு சாதனைதான்; ஆனால் எங்களுக்கு?' - குமுறும் விவசாயிகள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தஞ்சை முதுநிலை மண்டல அலுவலக அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேட்டபோது, ``சேமிப்பு கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகள் நாள்தோறும் 1,500 டன் அளவுக்கு அரைவைக்கு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. 15,000 டன் இருப்பு வைக்கும் அளவுக்கு புதிதாக திறந்தவெளி சேமிப்பு கிடங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குக்கு கொண்டு வர அதிகளவிலான லாரிகளை இயக்கவும், போதியளவு படுதாக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என தெரிவித்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு