தமிழக அரசின் புயல் நிவாரணம்... முறைகேடுகளைத் தவிர்க்க விவசாயிகளின் சில யோசனைகள்!
தமிழக அரசின் புயல் நிவாரண தொகையில் முறைகேடுகள் எதுவும் நிகழாமல் தடுக்கவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கவும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்கம் சில யோசனைகளை முன் வைத்துள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரணம், உதவித்தொகை உள்ளிட்டவைகளில் முறைகேடுகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. விவசாயமே செய்யாதவர்கள், தவறான வழிகளில் பயனடைவதால், உண்மையான விவசாயிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பணம் முழுமையாகச் சேருவதில்லை. இந்நிலையில்தான் வட கிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட நிவர் மற்றும் புரெவி புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு 600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் முறைகேடுகள் எதுவும் நிகழாமல் தடுக்கவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கவும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்கம் சில யோசனைகளை முன் வைத்துள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ள தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், ``பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இருந்து வந்த உச்ச வரம்பு 2 ஹெக்டேர் என்பதை தளர்த்தி, பாதிக்கப்பட்ட நிலங்கள் முழுவதுக்கும் உச்ச வரம்பின்றி நிவாரணம் வழங்க அரசு முன் வந்திருப்பதை வரவேற்கிறோம். பயனாளிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசு முன் வந்திருப்பதையும் பாராட்டுகிறோம். அதேசமயம் இதில் முறைகேடுகள் எதுவும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும்.
பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தமிழ்நாட்டில் பலநூறு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதால், அதில் விசாரணை நடந்து வருகிறது. அதில் சில அலுவலர்கள் மீது மட்டும் பெயரளவுக்கு நடவடிக்கை என்ற பெயரில் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்கள், இதுபோன்ற நடவடிக்கைகள் விவசாயிகளை ஏமாற்றத்திலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. எனவே, தற்போது ஒதுக்கப்பட்டுள்ள புயல் நிவாரண நிதியில் எந்தவித முறைகேடும் நடைபெறாமல், உண்மையாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவராணம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இதில் வெளிப்படைத்தன்மை தேவை. அதற்கு ஏற்ற வகையில் பாதிக்கப்பட்ட உண்மையான விவசாயிகளின் முழுமையான முகவரி, புயலால் பயிர்கள் சேதமடைந்த நிலத்தின் புல எண்கள், பரப்பளவு, பயிர்களின் விவரங்கள், வழங்கப்படும் நிவாரணத் தொகை, வங்கிக் கணக்கு எண், நிவாரணத் தொகை வரவு வைக்கப்பட்ட தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எந்தவித ஒளிவு மறைவும் இன்றி இணையதளத்தில் வெளியிட வேண்டும். மேலும், இந்த விவரங்கள் அனைத்தையும், கிராம நிர்வாக அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வேளாண்மைத்துறை அலுவலகம், ஊராட்சி, பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்கு பொது ஆவணமாக வைக்க வேண்டும். இந்தத் தகவல்களை ஊடகங்களிலும் வெளியிட வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.