Published:Updated:

குறுவை நெல் சாகுபடி சிறப்பு திட்டம்: `இந்தக் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றவேண்டும்!' - விவசாயிகள்

டெல்டா
டெல்டா

தமிழக அரசு, குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்துக்காக, ரூ.61.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்டா விவசாயிகள் மத்தியில் சில கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை நெல் சாகுபடிக்கான ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 3.2 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். நடப்பு குறுவைப் பருவத்தில் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், குறுவை சாகுபடி பரப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழக அரசு, குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்துக்காக, ரூ.61.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ், விதைநெல், ரசாயன உரங்கள், உயிர் உரங்கள் உள்ளிட்டவை வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்துக்கு முழுமையான பலன் கிடைக்க, டெல்டா விவசாயிகள் மத்தியில் மேலும் சில முக்கியமான கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

மாரிமுத்து எம்.எல்.ஏ
மாரிமுத்து எம்.எல்.ஏ

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஒன்றியங்களில் கூடுதல் பரப்பளவை குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் எனத் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கு இது தொடர்பாக, இவர் எழுதியுள்ள கடிதத்தில், ``தமிழகத்தில் குறுவை சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்தவும், குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தி உதவும் வகையிலும், தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்புத் திட்டத்தால் ஈர்க்கப்பட்டு, திருத்துறைப்பூண்டி விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் அதிக அளவில் குறுவை நேரடி விதைப்பு செய்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய 2 ஒன்றிய பகுதிகளிலும் சேர்த்து, கடந்த ஆண்டு 7,150 ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெற்ற நிலையில், நிகழாண்டில் 20,000 ஏக்கரில் குறுவை நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற இப்பகுதியில் 4,000 ஏக்கர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது போதாது; திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி நிலத்தடி நீர் ஆதாரம் அற்ற கடைமடை நிலப் பகுதியாகும். எனவே, தமிழக அரசு இந்தத் தொகுதியில் வசிக்கும் சிறு, குறு விவசாயிகளின் நலன்கருதி, குறைந்தபட்சம் 15,000 ஏக்கர் பரப்பளவுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

விமல்நாதன்
விமல்நாதன்

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``தமிழக அரசு இந்த ஆண்டு மீண்டும் குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. பம்புசெட் மூலம் குறுவை நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

நாகை: `கடைமடை பகுதிகளுக்கு வராத காவிரி நீர்’ - குறுவை சாகுபடி விவசாயிகள் வேதனை

டெல்டா விவசாயிகள் மேலும் சில முக்கிய கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள். குறுவை தொகுப்புத் திட்டத்தில் இயந்திரம் மற்றும் கை நடவுக்கான மானியம் வழங்க வேண்டும். குறுவைக்கான பயிர்க் கடனை தகுதியான விவசாயிகளை சரியாக இனம் கண்டு வழங்கினால், இலக்கை அடைய எளிதாக இருக்கும். குறுவை முன்பட்ட நடவு செய்துள்ளவர்களுக்கும் இந்தத் திட்டத்தில் பயன் கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு