Published:Updated:

`தூர்வாரும் பணிக்கு அதிகாரிகள் நியமனம் மட்டுமே போதாது!' - முதல்வருக்கு விவசாயிகளின் சில ஆலோசனைகள்

தூர் வாரும் பணி (கோப்பு படம்)
தூர் வாரும் பணி (கோப்பு படம்)

கடந்த காலங்களிலும் இதுபோல் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால், இதனால் எந்தப் பலனும் இல்லை எனச் சொல்லும் விவசாயிகள் இதற்கு ஏராளமான உதராணங்களையும் அடுக்குகிறார்கள்.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி இருப்பதால், இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படலாம் எனப் பரவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் தமிழக அரசு இங்குள்ள ஆறு மற்றும் வாய்க்கால்களில் தூர் வாரும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், இப்பணிகள் முழுமையாகவும் வேகமாகவும் நடைபெறுவதற்காகவும், 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். ஆனால், இதனால் மட்டுமே முறைகேடுகளையும் குறைபாடுகளையும் தவிர்த்துவிட முடியாது என்கிறார்கள் விவசாயிகள். கடந்த காலங்களிலும் இதுபோல் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால், இதனால் எந்தப் பலனும் இல்லை எனச் சொல்லும் விவசாயிகள் இதற்கு ஏராளமான உதராணங்களையும் அடுக்குகிறார்கள். மேலும் தூர் வாரும் பணி நேர்மையாக நடைபெற சில முக்கிய யோசனைகளையும் முன் வைக்கிறார்கள்.

தூர் வாரும் பணி (கோப்பு படம்)
தூர் வாரும் பணி (கோப்பு படம்)

விவசாயிகளைப் பொறுத்தவரை தூர் வாரும் பணி என்பது, வெற்றிகரமான வெள்ளாமைக்கு மிகவும் அவசியமான, முதல் தொடக்கம். ஆறு மற்றும் வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்பட்டால்தான் பயிர் காலம் முழுமைக்கும் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும். கடந்த காலங்களில் தூர்வாரும் பணியில் நடைபெற்ற முறைகேடுகளால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். இந்நிலையில்தான் இந்த ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறு, வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர்வார 65 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. இப்பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஜூன் 12-ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணிகளைக் கவனிக்க நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் 50 பேர் கொண்ட பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இப்பணிகளைக் கண்காணிக்க 8 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டத்துக்கு பிரதீப் யாதவ், திருவாரூர் மாவட்டத்துக்கு கால்நடைத்துறைச் செயலாளர் கோபால், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, மயிலாடுதுறை மாவட்டத்துக்கு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ஏற்கெனவே கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் சந்த் மீனா, விஜயராஜ் குமார், ஷம்பு கல்லோலிகர், ரீட்டா ஹரீஷ் தாக்கர் ஆகியோர் கூடுதலாக தூர்வாரும் பணிகளைக் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தப் பணிகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் பணிகள் முடியும் வரை தங்கியிருக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள், சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் தூர்வாரும் பணிகள் தொடர்பான அறிக்கையை தமிழக முதலமைச்சர், தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை அரசு செயலாளர், முதல்வர் அலுவலகத்துக்கு அவ்வப்போது வழங்க வேண்டும். இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறை பொறியாளர்களும் இவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். தற்போது, சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டவர்கள் தங்களது பொறுப்பை உடனடியாக ஏற்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் சிறப்பு கவனம் செலுத்தி, விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளதற்கு விவசாயிகள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

ஆனால், இதுமட்டுமே முறைகேடுகளையும் குறைப்பாடுகளையும் தடுத்துவிடாது என்கிறார்கள். இது தொடர்பாக நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ``கடந்த ஆண்டும் இதே போல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஆனாலும் தூர்வாரும் பணியில் பல இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றன. திருவையாறு அருகில் உள்ள கல்யாணபுரம் வாய்க்காலை தூர் வார 25.06 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 20 சதவிகிதம் மட்டுமே தூர்வாரும் பணி நடைபெற்றது. அதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றது. இந்த வாய்க்காலின் தலைப்பு பகுதியில் கூட இப்பணி ஒழுங்காக நடைபெறவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், பலனில்லை.

சுகுமாறன்
சுகுமாறன்

சிறப்பு கண்காணிப்பு அதிகாரி, குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்த வாய்க்காலை கூட, ஆய்வு செய்ய வரவில்லை. சாலையில் இருந்து பார்த்தாலே கண்ணுக்கு தெரியும் இடங்களில் கூட தூர் வாரும் பணி ஒழுங்காக நடைபெறவில்லை. போனது போகட்டும்... இந்த முறையாவது ஒழுங்காக நடைபெற சில ஆலோசனைகளை முன் வைக்கிறோம். தூர் வாரும் பணி நடைபெறும் இடங்களில், சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். ஆய்வு செய்ய வேண்டிய இடங்களின் பட்டியலை, தயவு செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்கக்கூடாது. சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் தாங்களாகவே முடிவு செய்து திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தூர்வாரும் பணி நடைபெறக்கூடிய வாய்க்கால்களில் பாசனம் செய்யும் விவசாயிகளை கொண்டும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கு 3 - 5 விவசாயிகள் இருக்கலாம். அதற்கு மேல் நியமித்தாலும் மகிழ்ச்சிதான். பணி நடைபெறும் விவசாயிகள் அடங்கிய குழுவினரிடமும் ஆலோசனை பெற வேண்டும். தூர்வாரும் பணி முடியும் தருவாயில் இவர்களிடமும் தமிழக அரசு அறிக்கைப் பெற வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான், தூர்வாரும் பணி நேர்மையாக நடைபெறும்’’ என்று சொல்லி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு