Published:Updated:

`காலம் கடந்துவிட்டது; குறுவை பயிர்க்காப்பீட்டை ஏன் அறிவிக்கவில்லை?' - கேள்வியெழுப்பும் விவசாயிகள்

குறுவை
குறுவை

தற்போது சாகுபடி செய்யப்படும் குறுவை நெற்பயிர்களில், இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு மகசூல் இழப்பு உருவானால், இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விடும் எனக் கவலை தெரிவிக்கிறார்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக, இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால், டெல்டா விவசாயிகள் மிகவும் உற்சாகமாக, குறுவை நெல் சாகுபடிக்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் ஈடுபட்டார்கள். வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக பரப்பில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடிக்கான பயிர் இன்ஷுரன்ஸ் திட்டம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகமலே உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தற்போது சாகுபடி செய்யப்படும் குறுவை நெற்பயிர்களில், இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு மகசூல் இழப்பு உருவானால், இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விடும் எனக் கவலை தெரிவிக்கிறார்கள்.

விவசாய நிலம்
விவசாய நிலம்
``₹1200 கோடி இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்!" - போராட்டத்தில் விவசாயிகள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ``ஆண்டுதோறும் குறுவை நெல் சாகுபடிக்கான பயிர் இன்ஷுரன்ஸ் திட்டம் குறித்த அறிவிப்பு ஜூன் மாதமே வெளியாகிவிடும். குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் ஜூலை 31-ம் தேதிக்குள் ப்ரீமியம் செலுத்துமாறு தமிழக வேளாண்மைத்துறை, பயிர் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் வெளியாகிவிடும். விவசாயிகள் அனைவரும் முழுமையாக பிரிமியம் செலுத்தி முடிக்க, ஒரு மாத காலம் அவகாசம் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை 20-ம் தேதி ஆன நிலையிலும் கூட, குறுவைக்கான பயிர் இன்ஷுரன்ஸ் திட்டம் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. தமிழக அரசோ ஏனோ இதைக் கண்டுகொள்ளாமலே இருக்கிறது. இது தமிழகத்தில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள், குளறுபடிகள் இருப்பது உண்மைதான். இயற்கை இடர்பாடுகள் மற்றும் பூச்சி நோய்த்தாக்குதல்களால் மகசூல் இழப்பு ஏற்படும் விவசாயிகளில் பலருக்கு இழப்பீடு கிடைக்காமல் போய்விடுவது நாடறிந்த யதார்த்தம். இந்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருந்தாலும் கூட, பாதிக்கப்பட்ட உண்மையான விவசாயிகளில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினருக்காவது இழப்பீடு கிடைத்து வருகின்றன. வழக்கமாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 3.15 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இதன் சாகுபடி பரப்பு கணிசமான அளவு அதிகரித்து, 3.50 லட்சம் ஏக்கரை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களையும் சேர்த்து கணக்கிட்டால், 5.5 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. இதனை ஊக்கப்படுத்த தமிழக அரசு, குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் குறுவைக்கான பயிர் இன்ஷுரன்ஸ் திட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது. ஏன் இதில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சுகுமாறன்
சுகுமாறன்

பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் இன்ஷுரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு இப்கோ-டோக்கியோ போன்ற தனியார் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விவசாயிகளிடம் பயிர் இன்ஷுரன்ஸ் ப்ரீமியம் பெற்றன. ஆனால் இந்த ஆண்டு இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ஈடுபட முன்வரவில்லை என சொல்லப்படுகிறது. இதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. குறுவை நெல் சாகுபடிக்கான பயிர் இன்ஷுரன்ஸ் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது, மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் தலையாய கடமையாகும்.

குறிப்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான, நியூ இந்தியா அஷுரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலமாக, குறுவை நெல் சாகுபடிக்கான பயிர் இன்ஷுரன்ஸ் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கான ப்ரீமியம் செலுத்த ஆகஸ்ட் 30-ம் தேதி வரை காலக்கெடு கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரைக் கொடுக்காததாலும், இனிவரும் மாதங்களிலும் அங்கிருந்து தண்ணீர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதாலும், குறுவை சாகுபடியில் வறட்சி உருவாகி, மகசூல் இழப்பு ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. எனவே இங்குள்ள விவசாயிகளுக்கு ஏற்படும் வாழ்வாதார இழப்பை ஈடு செய்ய, இன்சூரன்ஸ் திட்டம் மிகவும் அவசியம். தமிழக அரசு இதில் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது’’ எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு