Published:Updated:

`பயிர் விளைந்தும் பலனில்லாத நிலைக்குத் தள்ளப்படுவோம்!' -கலங்கும் டெல்டா விவசாயிகள்

நாற்று நடுவதில் தொடங்கி அறுவடை செய்யும் வரை பயிர்களை குழந்தைக்கும் மேலாகக் கவனிப்போம். ஆனால், அப்படியும் இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

சாய்ந்து கிடக்கும் பயிர்
சாய்ந்து கிடக்கும் பயிர்

ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வாரத்தில் காற்றுடன் பெய்த மழையால் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் வயல்களில் சாய்ந்து கிடக்கின்றன. பால் பிடிக்கும் பருவத்தில் பயிர்கள் சாய்ந்து கிடப்பதைப் பார்த்து வேதனையில் தவிக்கும் விவசாயிகள் பயிரைக் காப்பாற்றுவதற்காகப் பத்துக்கும் மேற்பட்ட பயிர்களை ஒன்றாகச் சேர்த்து நிமிர்த்திக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தவமணி
தவமணி

கடந்த சில வாரங்களாக டெல்டா பகுதியில் நல்ல மழை பெய்தது. ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய மழையும் பெய்தது. இதனால் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் வயல்களில் அப்படியே சாய்ந்து கிடக்கின்றன. பால் பிடிக்கும் பருவத்தில் பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன. இப்படியே கிடந்தால் அறுவடையின் போது நெல் மணிகள் அனைத்தும் கருக்காயாக மாறி பெரிய அளவில் மகசூல் பாதிக்கப்படும் என்பதால் பயிர்களை நிமிர்த்தும் பணியில் ஒரத்தநாடு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தனமணி என்ற பெண் விவசாயிடமும் பேசினோம். ``தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வீசிய கஜா புயலிலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டோம். இந்த நிலையில் இந்த ஆண்டாவது நல்ல விளைச்சல் கிடைத்து ஓரளவிற்கு எங்கள் கஷ்டத்திலிருந்து கரை சேர்வோம் என நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்தது. அப்போது காற்றும் அடித்ததால் அதற்கு தாக்குப்பிடிக்க முடியாத பயிர்கள் வயல்களில் சாய்ந்து விட்டன.

 நெற்பயிர்
நெற்பயிர்

பால் பிடிக்கும் பருவத்தில் பயிர்கள் சாய்ந்து கிடந்தால் அறுவடையின் போது நெல்மணிகள் அனைத்தும் கருக்காயாக மாறிவிடும். இதனால் மகசூல் பெரிய அளவில் பாதிக்கப்படும். சாய்ந்து கிடக்கும் பயிர்களை எப்படி சும்மா விட முடியும். நாற்று நடுவதில் தொடங்கி அறுவடை செய்யும் வரை பயிர்களை குழந்தைக்கும் மேலாகக் கவனிப்போம். ஆனால், அப்படியும் இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

சரி என மனதைக் கல்லாக்கிக்கொண்டு செலவோடு செலவாக விழுந்து கிடக்கும் பயிர்களை நிமிர்த்தி வருகிறோம். எப்படியாவது சாய்ந்த எங்க பயிரை நிமிர்த்தி நல்ல முறையில் காப்பாற்றி விட மாட்டோமா என மனது கிடந்து தவிக்கிறது. ஆட்கள் சம்பளம், சணல் உள்ளிட்டசெலவுகளால் இதற்கு ஒரு ஏக்கருக்குக் கூதலாக ரூ.5,000 வரை செலவாகிறது. விழுந்து கிடக்கும் பயிர்களில் பத்துக்கும் மேற்பட்ட பயிர்களை நிமிர்த்தி அதைச் சேர்த்து சணல் கொண்டு கட்டிவிடுவோம். இதனால் அடிப்பகுயிலிருந்து திடம் கிடைப்பதால் பயிர்கள் ஓரளவிற்குத் தப்பித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது'' என்றார்.

சாய்ந்த பயிர்
சாய்ந்த பயிர்

``வேளாண்மை அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டால் `அதான், பயிர்க் காப்பீடு இருக்கிறதே? அதில் இழப்பீடு வந்து விடும்' என' அலட்சியமாகக் கூறுகின்றனர். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை. இதனால் அரசு உடனடியாக இதை ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து அறிந்து நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் பயிர்கள் விளைந்தும் பலனில்லை என்கிற நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்'' என்று அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.