Published:Updated:

`விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை மகிழ்ச்சி; அடுத்து இதைத்தான் எதிர்பார்க்கிறோம்!' - விவசாயிகள்

தமிழக அரசின் கூட்டத்தொடரில் உரையாற்றும் ஆளுநர்
தமிழக அரசின் கூட்டத்தொடரில் உரையாற்றும் ஆளுநர்

கடந்த 30 ஆண்டு காலமாக தமிழக விவசாயிகள் விடுத்த கோரிக்கைக்கு தற்போதுதான் தீர்வு கிடைத்து உள்ளது. விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கையை வரவேற்பதுடன், முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறோம்.

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பொதுவாக ஆளுநர் உரையில் முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்பதாலும், தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு பிறகு புதிதாக, ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஆளுநர் உரை என்பதாலும், இது பல்வேறு தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக விவசாயம் தொடர்பாக முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில், ``விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என அறிவித்தார். இது விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சுவாமிமலை சுந்தர விமல்நாதன்
சுவாமிமலை சுந்தர விமல்நாதன்

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு என தனி நிதிநிலை அறிக்கை இதுவரை தாக்கல் செய்யப்பட்டதில்லை.. கடந்த 30 ஆண்டு காலமாக தமிழக விவசாயிகள் விடுத்த கோரிக்கைக்கு தற்போதுதான் தீர்வு கிடைத்து உள்ளது. விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கையை வரவேற்பதுடன், முதல்வரையும் பாராட்டுகிறோம்.

`பயிர்க் கடன் தள்ளுபடி டு ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ்!’- சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் #Highlights

இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் முன்பாக, மாவட்டந்தோறும் விவசாயிகளை சந்தித்து, ஆலோசனைகளை பெற்று நிதிநிலை அறிக்கை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கான இந்த தனி நிதிநிலை அறிக்கை என்பது முழுமைபெறும்’’ என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாநிலச் செயலாளர் சாமி நடராஜன், `` விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில், தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அதேபோல, தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் சீரமைக்கப்படும் என்பதையும் வரவேற்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளின் வளர்ச்சிக்கு மாநில அளவில் ஆலோசனை குழுவை ஏற்படுத்த வேண்டும்.

கக்கரை சுகுமாறன்
கக்கரை சுகுமாறன்

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன், ``விவசாயத்துக்கு தனி பட்ஜெட் வேணும்னு கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வச்சிக்கிட்டு இருந்தோம். இது தொடர்பான அறிவிப்பு ஆளுநர் உரையில் வெளியாகி இருக்கு. இது மிகவும் பாராட்டுக்குரியது.

விவசாயிகளின் நலன்... விவசாய மேம்பாடு! - தமிழக அரசின் பட்ஜெட்...

விவசாயத்துக்குனு தனி பட்ஜெட் போடப்பட்டால், தூர் வாரும் பணி, பயிர் கடன் உள்ளிட்ட இன்னும் பல திட்டங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்க வாய்ப்பிருக்கு. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட காவிரி-குண்டாறு திட்டம், விரைவாக செயல்படுத்தப்படும்னு சொல்லியிருக்காங்க. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இல்லாமல் இதுபோன்ற திட்டங்களை தொடர்பவது ஆரோக்கியமானது’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு