Published:Updated:

`மோடி பதவியேற்ற மே 26; கறுப்பு தினமாக அனுசரிப்பு!' - டெல்லி போராட்டத்தைத் தொடரும் விவசாயிகள்

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

மே 26-ம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளோம். அனைத்து வீடுகளிலும், வாகனங்களிலும் கருப்புக் கொடியை அன்றைய தினம் விவசாயிகள் ஏற்றித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்வர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், டெல்லியில் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள் ஒன்பது மாதங்கள் ஆகியும் வெயில், மழை, கொரோனா என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு விவசாய சங்கங்கள் டெல்லி - பஞ்சாப் எல்லையில் கூடாரங்களை அமைத்துப் போராடிக் கொண்டிருக்கின்றனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 6 மாதத்தை நிறைவு செய்ய உள்ளதால், வரும் 26-ம் தேதியை, கறுப்பு தினமாக அனுசரிக்க சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில், `முடிவுக்கு வருகிறது டெல்லி விவசாயிகள் போராட்டம்..! போராட்டத்தை நிறுத்திக் கொள்ள விவசாய சங்கத்தினர் முடிவு' எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன. அதில், `கொரோனாவால் இரு விவசாயிகள் மரணடைந்தனர். எனவே மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்' எனப் பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் போலால் சிங் கோரிக்கை வைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் உண்மை நிலை அறிய டெல்லி திக்ரி எல்லையில் உள்ள விவசாயப் போராட்டக் களத்தில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரஜ்விந்தர் சிங்கிடம் பேசினோம். ``மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை டெல்லி போராட்டம் தொடரும். நான் போராட்ட மேடைக்கு அருகில்தான் இருக்கிறேன். போராட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் போலித் தகவல்கள் பரவுகின்றன. அவை உண்மையல்ல. மே 26-ம் தேதியை கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அன்றைய நாள் வாகனங்கள், வீடுகள் என அனைத்திலும் கறுப்புக் கொடி கட்டி எங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய இருக்கிறோம். அதனால் போராட்டம் நிறுத்தம் என வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்" என்றார்.

ரஜ்விந்தர் சிங்
ரஜ்விந்தர் சிங்

கடந்த 18-ம் தேதி விவசாயிகள் சங்கத் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசியபோது, ``மே 26-ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளோம். அனைத்து வீடுகளிலும், வாகனங்களிலும் கறுப்புக் கொடியை அன்றைய தினம் விவசாயிகள் ஏற்றித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்வர். மே 26-ம் தேதி தினமானது பிரதமராக மோடி பதவியேற்று 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் தேதியாக அமையவுள்ளது. எனவே அன்றைய தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்தோம். இந்தப் போராட்டத்துக்கு அனைத்து மாநில விவசாயிகளும் ஆதரவு தர வேண்டும். பஞ்சாப், ஹரியானாவில் உள்ள அனைத்து வீடுகள், கடைகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் கறுப்புக் கொடியை ஏற்ற நான் கோரிக்கை விடுக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு