Published:Updated:

கொள்ளிடத்தில் கரைபுரளும் தண்ணீர்.. இருந்தும் கண்ணீர் வடிக்கும் டெல்டா விவசாயிகள்!

ஹரீஷ் ம
பா.பிரசன்ன வெங்கடேஷ்

ஒருபுறம் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலையில், மறுபுறம் தண்ணீரை வீணாக கடலில் கலக்க செய்வது அரசின் அலட்சியத்தை எடுத்துக்காட்டுகிறது.

cauvery river
cauvery river

டெல்டா மாவட்டங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகள் தூர்வாராததால், தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதனால் 5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கர்நாடக மாநிலம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 7-ம் தேதியன்று மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியதால், காவிரியில் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 13-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

cauvery river
cauvery river

ஆரம்பத்தில் 10,000 கனஅடி திறக்கப்பட்டு வந்தது. அதை 25,000 கனஅடியாக அதிகரித்தால்தான் கடைமடைவரை தண்ணீர் பாயும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மேட்டூரிலிருந்து வரும் தண்ணீர் கரூர், மாயனூர் கதவணை வழியாக முக்கொம்பு வந்து அங்கிருந்து காவிரியில் 32,400 கனஅடியும், கொள்ளிடத்துக்கு 18,400 கனஅடியும் திறக்கப்பட்டது. கதவணையிலிருந்து முக்கொம்புக்கு வருவதற்கு முன்னதாகவே காவிரி ஆறு, பெட்டவாய்த்தலை அருகே உய்யகொண்டான் வாய்க்கால் வழியாக, புலிவலம் பகுதியில் காவிரி நீர் பிரிந்து கொடிங்கால் வாய்க்கால் வழியே சென்று காவிரியில் கலக்கிறது. வழியில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வாரப்படாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயத்துக்குப் பாசன வசதியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கல்லணையிலிருந்து வரும் தண்ணீர் கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் என 4 ஆறாகப் பிரிந்து செல்கிறது. இதில் கல்லணையிலிருந்து காவிரியில் 9,548 கனஅடி, கொள்ளிடத்தில் 11,045 கனஅடியும், வெண்ணாறில் 9,022 கனஅடியும், கல்லணை கால்வாயில் 3,004 கனஅடி நீரும் திறக்கப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் லால்குடி, புள்ளம்பாடி வழியே அணைக்கரை கீழணைக்கு 11,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கீழணை பாலம் ஏற்கெனவே பழுதடைந்துள்ளதால், தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் நேற்று 10,000 கனஅடி தண்ணீர் எவ்வித பாசனத்துக்கும் பயனின்றி கீழணை என்ற இடத்திலிருந்து கீழ்நோக்கி 64 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நாகப்பட்டினம் பகுதியில் இடது கரையில் கொடியம்பாளையம் என்ற இடத்தில் வங்காள விரிகுடா கடலிலும், வலது கரையில் பழையார் என்ற இடத்திலும் கடலில் வீணாகக் கலக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் எந்தவொரு தடுப்பணையும் இல்லாததால், அந்தத் தண்ணீர் பாசனத்துக்குப் பயன்படாமல் போனது.

cauvery river
cauvery river

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொள்ளிடம் ஆற்றில் உபரியாக 227 டி.எம்.சி-க்கும் அதிகமாக தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலந்தது. அதேபோல இந்த ஆண்டும் கொள்ளிடம் ஆற்றுத் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில், காவிரி டெல்டா பகுதியில் பல இடங்களில் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் குடிமராமத்துப் பணிகள் முழுமையாக செய்யப்படவில்லை. இதனால், கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீர் பாசனத்துக்கு வராததால் விவசாயிகள் வேதனையில் தவித்துவருகிறார்கள். மேலும், இதுகுறித்து விவசாயிகள் கூறுவதாவது ``தற்போது காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீரானது நிலத்தடி நீரை சேமித்து வைப்பதற்குக்கூட போதுமானதாக இருக்காது. மேலும் ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாரப்படாததால் நீரை சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் டெல்டாவில் தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் 16 லட்சம் ஏக்கர் அளவில் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், கடும் வறட்சி, போதிய நீர் இல்லாததால் 4 லட்சம் ஏக்கர் அளவுக்கு குறைந்துவிட்டது’’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

கடைமடைக்குத் தண்ணீர் செல்லும் பகுதியில் உள்ள வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. மேலும், டெல்டா பகுதிகள் சில இடங்களில் குடிமராமத்துப் பணிகள் நடப்பதால் அதில் தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. கோடை காலத்தில் மராமத்துப் பணிகளை மேற்கொள்ளாமல் தற்போது மேற்கொண்டு வருவது விவசாயிகளை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. தண்ணீர் சரியான முறையில் கிடைத்திருந்தால் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் தற்போதைய நிலவரப்படி 10 லட்சம் ஏக்கர் அளவில் சாகுபடி செய்ய வேண்டும்.

cauvery river
cauvery river

ஆனால், தண்ணீர் போதிய அளவில் கடைமடைப் பகுதி வரை செல்லாததால், நாற்று நடும் பணி தொடங்கவில்லை. இதனால் சுமார் 5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது. ஒருபுறம் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலையில் மறுபுறம் தண்ணீரை வீணாகக் கடலில் கலக்கச் செய்வது அரசின் அலட்சியத்தை எடுத்துக்காட்டுகிறது. கடந்த ஆண்டு, 400 டி.எம்.சி., தண்ணீர், வீணாகக் கடலில் கலந்தது. அதே நேரத்தில், கடந்த கோடையில், தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்தக் கொடுமைக்கு அரசின் அலட்சியமே காரணம்.